“இதையெல்லாம் தமிழக வேளாண் பட்ஜெட்டில் அமல்படுத்தலாம்!” – ஆலோசனை வழங்கும் அமெரிக்கவாழ் தமிழக இளைஞர்!

விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிற வேளாண் பட்ஜெட்டில் என்னென்ன விசயங்களை செய்யலாம் என்று விவசாயிகளிடமும், சூழலியல் ஆர்வலர்களிடமும் தமிழக அரசு கருத்து கேட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் பணியாற்றிவரும் கரூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தான் பணியாற்றிய, சுற்றுலா சென்ற நாடுகளில் பார்த்தவை கொண்டு, தமிழக பட்ஜெட்டில் இன்னென்ன திட்டங்களை அறிவிக்கலாம் என்று தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு 20 ஆலோசனைகளை அனுப்பியிருக்கிறார்.

கரூர் மாவட்டம், கடவூர் வட்டத்தில் உள்ள வேப்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த நரேந்திரன் கந்தசாமி என்ற இளைஞர்தான் அவர். அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் சில முன்மாதிரி விசயங்களை தனது கிராமத்தில் செய்திருக்கிறார். அவற்றை வைத்தும். அவர் சில யோசனைகளை தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் நரேந்திரன் கந்தசாமியிடம் வாட்ஸ்ஆப் வழியே பேசினோம்.

நரேந்திரன் கந்தசாமி

“நான் எங்கள் ஊரிலும், மற்ற மாவட்டங்களில் இயற்கை சார்ந்து பல முன்மாதிரி விசயங்களை கடந்த 24 வருடங்களாக செய்து வருகிறேன். அதேபோல், இந்தியா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் நான் பணிபுரிந்திருக்கிறேன். அதேபோல், பிரான்ஸ், இத்தாலி, ஹங்கேரி, நெதர்லாந்து, மொனாக்கோ, வாட்டிகன் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளேன். அந்த நாடுகளில் இயற்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்னை கவந்தது. எனது அனுபவம், எனது ஊரில் செயல்படுத்திய திட்டங்களை முன்¬வைத்து, 2023 – 24 க்கான தமிழக விவசாய நிதிநிலை அறிக்கைக்கான 20 யோசனைகளை 5 அமைச்சர்கள், 5 துறை இயக்குநர்களுக்கு பதிவுத்தபால் மூலமும், மின்அஞ்சல் மூலமும் எனது யோசனைகளை அனுப்பியுள்ளேன்.

கிராம பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து யூனியங்களில் உள்ள புறம்போக்கு நிலங்களை வருவாய்த்துறை மூலமாக கண்டறிந்து, மரபு காய்கறி மற்றும் கீரை விதைகள் வழங்கி, நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை கொடுக்க இயலாத நிலையில் இருக்கும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாய சமூக காய்கறி தோட்டம் அமைத்து பராமரிக்க செய்யலாம். ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திலும் (முதல் திட்டப்படி) சமூக காய்கறித்தோட்டத்தில் விளையும் காய்கறிகளை, அந்தந்த கிராம அல்லது பஞ்சாயத்து யூனியனில் சந்தை நடத்தி விற்பனை செய்வதன் மூலம் கிராம தற்சார்பு பொருளாதாரத்தை வளர்க்கவும், மேலும், இயற்கை முறையில் விளைந்த காய்கறி உள்ளூர் மக்களின் உடல் நலனை மேம்படுத்தும் வகையிலும் இத்திட்டத்தை செயல்படுத்தப்படலாம்.

அதேபோல், ஒவ்வோர் பஞ்சாயத்து யூனியனிலும் ஒரு கிராமம் தேர்வு செய்து சமூக காய்கறி தோட்டத்திலிருந்து பெறப்பட்ட தரமான விதைகளைக் கொண்டு விதை வங்கி உருவாக்கப் படலாம். தவிர, விதை வங்கியிலிருந்து விதைகள் வழங்கப்பட்டு அரசு மற்றும் பஞ்சாயத்து பள்ளிகளில் சத்துணவுக்கு தேவையான காய்கறிகளை அந்த பள்ளிகளிலேயே வளர்த்து பயன்படுத்தலாம். விதை வங்கியிலிருந்து மாணவர்களுக்கு விதைகள் வழங்கி அவரவர் வீட்டிலேயே வீட்டு காய்கறித் தோட்டம் போட வாய்ப்புகள் வழங்குவதன் மூலம் இயற்கை குறித்த விழிப்புணர்வும் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி பெற வழி வகை செய்யலாம்.

சிறையிலிருந்து விடுதலை பெற்றோர் மற்றும் நிலமற்ற விவசாய கூலிகளாக வாழும் விவசாயிகளுக்கு, கிராமப்புற புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களில் சமூக காய்கறி தோட்டம் மற்றும் சமூகக் காடு வளர்ப்பு மூலமாக மறுவாழ்வு அளிக்க முடியும்.

இச்செயல்பாடு மூலம் இயற்கை வளத்தை மேம்படுத்தவும், நம் தமிழ்நாட்டின் காடுகளின் பரப்பளவை அதிகப்படுத்தவும் முடியும்.

இது பூஜ்ய நிதித் திட்டம் அல்லது மிகமிகக் குறைந்த நிதிச்செலவு திட்டமாக இருப்பதால், அரசுக்கு பெரிய நிதி நெருக்கடி ஏற்படுத்தாமலேயே மக்களுக்கான நல திட்டமாக இருக்க வாய்ப்புள்ளது. தவிர, பசுமைப்பள்ளி (வ.எண் 4) திட்டத்திற்கு துணைத்திட்டமாக ஒவ்வோர் பள்ளியிலும் ஒரு விவசாய ஆசிரியர் பணி ஏற்படுத்தப்பட்டு, அதில் ஒரு ஆசிரியரை நியமித்து பள்ளிகளின் காய்கறித் தேவையை பூர்த்தி செய்யவும், மாணவர்களுக்கு விவசாயப் பயிற்சி வழங்கவும் செய்யலாம்.

சமூக காய்கறித் தோட்டம்

நிலமற்ற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு விவசாயம் சார்ந்த சிறுதொழில் பயிற்சி கொடுத்து, சிறுகடன் மூலம் அவர்கள் சிறு தொழில் தொடங்க கடன் வழங்குவது அரசுக்கு மிகச்சிறிய நிதிச்சுமையை மட்டுமே கொடுக்கும். ஆகவே மக்களின் நலத்திட்டமாக இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.

மறுவாழ்வு மற்றும் நிலமற்ற விவசாயிகளுக்கும் புறம்போக்கு நிலங்களில் காடு வளர்க்கும் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது, காடுகளின் பரப்பை அதிகப்படுத்துவதுடன் சுற்றுச்சூழலையும் மிகப்பெரிய அளவில் பாதுகாக்கும்.

தொழிற்சாலை கழிவுகளாலோ தொடர்ந்த வேதி விவசாயத்தாலோ அழிக்கப்பட்ட நிலத்தின் வளத்தை உயிர் நுட்பம் மூலமாக மீண்டும் வளப்படுத்துதல் திட்டம் மூலம் மீட்டெடுக்க முடியும்.

சிறை வளாகங்களுக்குள் மரப் பண்ணை அமைத்து மரக் கன்றுகள் வளர்க்கும் பணியில் சிறைவாசிகளை ஈடுபடச் செய்வது, அவர்களின் மனநிலையில் வரவேற்கத்தக்க முன்னேற்றத்தைக் கொண்டு வருவதுடன், சிறைகளையும் பசுமை வளாகங்களாக மாற்றி சுற்றுச்சூழல் காத்திட உதவும்.

பொது மக்கள் மற்றும் விவசாயப் பெருமக்களிடையே சிறுதானிய விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய விவசாயத்தில் பயிற்சி பெற்ற வேளாண்துறை அதிகாரிகளை நியமித்து பயிற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் இந்த சிறுதானிய ஆண்டில் சிறு தானிய விவசாயத்தை ஊக்குவித்து சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கலாம்.

சமூக காய்கறித் தோட்டம்

உள்ளூர் அரசுப் பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர்கள் வாரம் இருமுறையாவது இந்த விவசாயிகளிடம் நேரடியாக சிறுதானியங்கள் வாங்கி மாணவர்களுக்குச் சத்தான உணவை அளிக்கலாம்.

இத் திட்டம் உள்ளூர் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவது மட்டுமின்றி, மாணவர்களின் உடல்நலனை மேம்படுத்தவும் உதவும். மேலும், விவசாயிகள் மற்றும் கிராம தற்சார்பு மேம்பாட்டுக்கும் உதவும்.

மாவட்டந்தோறும் ஒரு சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழுவை அமைத்து, ஒவ்வொரு வட்டத்திற்கும் ஒரு பிரதிநிதியை நியமித்து, நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு, நீர்ப்பிடிப்பு / வரத்துப் பகுதிகளில் எழும் சிக்கல்கள், மரம் வெட்டப்படுதல், காடு அழிக்கப்படுதல் இவை குறித்து கண்காணித்தல் மற்றும் அரசுக்கு அறிக்கை அளித்தல் என்று செய்வதன் மூலமும், மாதந்தோறும் மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு ஆவன செய்யலாம்.

கிராம மற்றும் நகர்ப் புறங்களில் மரம் வெட்டுவதைக் குறைக்க மரம் வெட்டத் தடைச் சட்டத்தைக் கடுமையாக அமல் செய்யலாம். ஒரு மரம் வெட்டினால் மரம் வளர்க்க இடம் இருக்கும் வேறு ஒரு பகுதியில் 10 மரங்கள் நட வேண்டும் என்பன போன்ற விதிகளைச் சட்டமாக்கிக் கடுமையாக அமல் படுத்துவதன் மூலம் மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்கலாம்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் ஒரு மனிதனுக்கு 716 மரம் என்ற விகிதம் இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஒரு மனிதனுக்கு 28 மரம் என்ற விகிதம் தான் நிலவுகிறது. மாவட்ட சுற்றுச்சூழல் மன்றம் மற்றும் வனத்துறை இணைந்து மாணவர்கள் தங்கள் பிறந்த நாளில் பள்ளி வளாகத்தில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் அல்லது தரிசு நிலங்களில் மரக்கன்று நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்கும் திட்டத்தை அமல்படுத்தி மாணவர்களிடையே மரம் வளர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

ஊராட்சிக்கு ஒரு நர்சரியை உருவாக்கி அங்கிருந்து மரக்கன்றுகளை மாணவர்களுக்கு வழங்கலாம்.

சமூக காய்கறித் தோட்டம்

இத்திட்டத்தின் மூலம் மரம் – மனிதன் விகிதத்தை அதிகப்படுத்த முடியும். விவசாயக் கல்வியைத் துணைப் பாடத் திட்டமாக வடிவமைத்து, மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கொண்ட தேர்வுத் திட்டத்தில் விவசாயம் என்பதை ஒரு பாடமாகக் கொண்டு வருவதன் மூலம் மாணவர்களிடயே விவசாயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வை உருவாக்கலாம்.

மேலும், தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப் பணித் திட்டம் இவற்றில் இணைந்து சீரிய பணியாற்றும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளில் மதிப்பெண்கள் / புள்ளிகள் வழங்கப்படுவது போல விவசாயப் பாட மதிப்பெண்களுக்கு உரிய புள்ளிகள் வழங்கலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வேளாண்கல்லூரி அமைவதை உறுதி செய்து, அக்கல்லூரிகளில் இயற்கை விவசாயக் கல்வியை மாணவர்களுக்கு வழங்கி, பன்னாட்டு நிறுவனங்களை நோக்கிப் படையெடுக்கும் பட்டதாரி மாணவர்களை விவசாயிகளாக ஆக்கிட அரசு ஆவன செய்திட வேண்டும்.

சிறுதானிய மற்றும் விவசாய விளைபொருட்கள் பராமரிப்பிற்கு மாவட்டந்தோறும் உணவுக் கிடங்குகள் அமைத்து, விளைபொருள் பாதுகாப்பையும், விவசாயிகளுக்கான சந்தைப்படுத்தும் வழியையும் வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும்.

பூ தோட்டம், பழ தோட்டங்களில் விளையும் பூ, பழங்களை விவசாயிகளே நேரடியாக சந்தைப்படுத்த தனி சந்தைகளை உருவாக்கலாம். கடைசி திட்டமாக, ஊராட்சி தோறும் விவசாய குழுக்கள் அமைத்து, விவசாய உபகரணங்கள் ஊராட்சிக்கு வழங்கி அதனை குறைந்த விலையில் விவசாயிகள் பயன்படுத்த உதவினால் ஊராட்சிக்கு நிரந்தர வருமானம் கிடைக்க செய்யலாம்.

சமூக காய்கறித் தோட்டம்

மேற்குறிப்பிட்ட திட்டங்களில், 1, 3, 4, 5 மற்றும் 9 போன்றவை பசுமைக்குடி அமைப்பின் மூலம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட திட்டங்களாகும். இந்த மாதிரித் திட்டங்களை அரசு திட்டங்களாக அறிவித்து செயல்படுத்துவதன் மூலம் தமிழ் நாட்டின் காடு மற்றும் விவசாய வளர்ச்சி மேம்படுவது மட்டுமல்லாது, கிராமப்புற மற்றும் நிலமற்ற விவசாயிகளின் வாழ்வாதாரமும் மேம்படும். ஆகவே தமிழக அரசு வரும் விவசாய நிதி அறிக்கையில் இத்திட்டங்களை அறிவித்து தமிழ்நாட்டு மக்களின் நலத்தை மேம்படுத்திட வேண்டும். தேவைப்பட்டால், அரசோடு இணைந்து செயல்படவும் தயாராக உள்ளேன்” என்றார்.