குப்பைக் கிடங்கில் `தீ’ விபத்து; கொச்சி மாநகராட்சிக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாயம்

கேரள மாநிலம், எர்ணாகுளம் பிரம்மபுரம் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கில் இந்த மாத தொடக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் சுமார் 13 நாள்களாக குப்பைக் கிடங்கில் தீ எரிந்தது. புகைமூட்டம் காரணமாக கொச்சி மாநகராட்சி மற்றும் மூன்று நகராட்சிகள், மூன்று பேரூராட்சிகளிலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும், கலெக்டராக இருந்த ரேணு ராஜ் மாற்றப்பட்டு புதிதாக என்.எஸ்.கே.உமேஷ் கலெக்டராக நியமிக்கப்பட்டார். 13 நாள்களுக்கும் மேலாக எர்ணாகுளம் பகுதி நச்சுப்புகை மூட்டத்தால் அவதியுற்றது. தீயை அணைத்த பிறகு எர்ணாகுளத்தில் ஆசிட் மழை பெய்ததாகவும் தகவல் பரவியது. இந்த நிலையில், பிரம்மபுரம் தீ விபத்து சம்பவத்துக்கு கொச்சி மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என, மாநகராட்சிக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்திருக்கிறது பசுமை தீர்ப்பாயம். மேலும், 100 கோடி ரூபாய் அபராதத்தை ஒரு மாதத்துக்குள் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பாயம் தெரிவித்திருக்கிறது. தீ விபத்தைத் தொடர்ந்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் ஆரோக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு ஏற்படுத்தும்விதமாக இந்தத் தொகையைச் செலவிட வேண்டும்.

கொச்சி தீ விபத்து

அலட்சியமாகச் செயல்பட்ட அதிகாரிகள்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்திருப்பது சி.பி.எம் ஆட்சிக்குப் பின்னடைவு என காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. “சாதாரண மக்களின் வரிப்பணத்தில் இந்த அபராதத் தொகையைச் செலுத்தக்கூடாது. அதற்கு நாங்கள் சம்மதிக்கமாட்டோம்” என கேரள மாநில காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன் கூறியிருக்கிறார்.

கொச்சி மாநகராட்சி மேயர் அனில் குமார்

அதே சமயம் மேல் முறையீடுக்குச் செல்லவிருப்பதாக கொச்சி மாநகராட்சி மேயர் தெரிவித்திருக்கிறார். இது குறித்து கொச்சி மேயர் அனில்குமார் பேசுகையில், “மாநகராட்சி தரப்பு வாதத்தை கேட்காமல் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்திருக்கிறது. மாநகராட்சியின் இழப்பை கருத்தில் கொள்ளாமல் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். குப்பைக் கிடங்கு தீ விபத்து சம்பந்தமாக ஏற்கெனவே ஐகோர்ட்டில் வழக்கு நடந்துவருவதை கருத்தில் கொள்ளாமல் பசுமை தீர்ப்பாயம் அபராதம் விதித்திருக்கிறது” என்றார்.