அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் அமைந்திருக்கும் நிவார்க் நகர நிர்வாகத்தை ஏமாற்றியதாக நித்தியானந்தா மற்றும் அவரின் நாடாக கூறப்படும் கைலாசா மீது புகார் எழுந்துள்ளது. ஜனவரி 12-ம் தேதி, நிவார்க் சிட்டி ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் நிவார்க் நகர மேயர் ரஸ் ஜெ பராக்கா மற்றும் கைலாச நாட்டின் பிரதிநிதியான விஜய்ப்பிரியா நித்தியானந்தா இருவருக்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. அமெரிக்காவில் உள்ள சமூகங்களுக்கும், பிற நாடுகளில் உள்ள சமூகங்களுக்கும் இடையே இருக்கும் கலாசார வேறுபாடுகளை அறிந்துகொள்ளும் விதமாக ‘சிஸ்டர் சிட்டிஸ்’ என்ற அமைப்பின்படி ஒப்பந்தம் கையெழுத்தானது.

நித்தியானந்தா | கைலாசா

இந்நிலையில் ஜெனிவாவில் சமீபத்தில் ஐ.நா அமைப்பின் பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் பங்கேற்றனர். அது தொடர்பான புகைப்படங்களை நித்தியானந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்த புகைப்படங்கள் பின்னர் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

அவரின், சிஷ்யர்கள் சிலர் தங்கள் நாட்டை ஐநாவே அங்கீகரித்து விட்டது என்று கூறி கொண்டனர். பின்னர் இது தொடர்பாக, “ஐநா நடத்தும் கூட்டங்களில், எந்த அமைப்பினர் பேச முன் வந்தாலும், அவர்களை அனுமதிப்போம், அதற்காக அவர்களை ஐநா அங்கீகரித்து விட்டது என்று இல்லை..” என்று ஐநா விளக்கம் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

“சிஸ்டர் சிட்டிஸ்” ஒப்பந்தம் மூலம் அமெரிக்கா, கைலாசா நாட்டை அங்கீகரித்து விட்டதாக நித்தியானந்தாவின் சீடர்கள் கூறிவந்த நிலையில், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘கைலாசா குடியரசு’ உலக நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட நாடு அல்ல என்பதை உணர்ந்த நிவார்க் நகர மேயர், இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார். கைலாசா நாட்டின் பிரதிநிதிகளால், நிவார்க் நகரம் ஏமாற்றப்பட்டதை நிவாக் நகர மேயர் ரஸ் ஜெ பராக்கா ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிவார்க் நகரம் போல் அமெரிக்காவின் 30 நகரங்களுடன் கைலாசாவின் பிரதிநிதிகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பல்வேறு புகார்களில் சிக்கிய நித்தியானந்தா, இந்தியாவை விட்டு தப்பிச் சென்று, 2019ம் ஆண்டு கைலாசா என்னும் நாட்டை நிறுவி விட்டதாக அறிவித்தார். நித்தியானந்தா, தற்போதும் இந்தியாவில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.