விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் உதவி சமையலராக பணியாற்றிய பெண் ஒருவர், உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் தனக்கு பணி வழங்கக் கோரி அவரின் மகள் சரஸ்வதி, 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் விண்ணப்பித்தார். 3 ஆண்டுகளாகியும் விண்ணப்பத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, கடந்த  2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சரஸ்வதி மீண்டும் ஒரு முறை விண்ணப்பித்தார்.

ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு விண்ணப்பித்துள்ளதாக கூறி, அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சரஸ்வதி தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பே விண்ணப்பித்துள்ள போதும், திருமணமானவர் என்பதால் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற உரிமையில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிமன்றம் உத்தரவு

இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வு, “சத்துணவு திட்டம் தொடர்பான அரசு உத்தரவுகளில், கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரி விண்ணப்பிக்க எந்த கால வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை” என குறிப்பிட்டனர். மேலும் மணமான பெண்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் கோர உரிமையில்லை என்ற கர்நாடகா அரசின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதையும் சுட்டிக்காட்டிய, நீதிபதிகள் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தனர். மேலும், மனுதாரரின் கல்வித்தகுதிக்கு ஏற்ற பணியை வழங்க வேண்டுமெனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து, வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம். “அரசின் பல திட்டங்கள், விதிமுறைகள், வழிகாட்டல்கள் பாலின சமத்துவம் அற்றதாக இருப்பதை வரலாறு நமக்கு உணர்த்துகிறது. உதாரணமாக 2005-ம் ஆண்டு வரைக்கும் ஒரு அரசு ஊழியர் ஆண்டுக்கு ஒரு முறை தன் குடும்பத்தினரை சுற்றுலா அழைத்துச் செல்ல முடியும். இதில் ஆண் ஊழியர் என்றால் அவரின் அம்மா, அப்பா, மற்றும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லலாம். ஆனால், அதுவே பெண் ஊழியர் என்றால் அவரது அப்பா, அம்மாவை அழைத்துச் செல்ல முடியாது. மாமனார், மாமியாரைத்தான் அழைத்து செல்ல முடியும். 2005 வரை இது அரசாணையாகவே இருந்தது. இது போன்ற பிற்போக்கான பல விஷயங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மாற்றம் கண்டுள்ளது.

வழக்கறிஞர் அஜிதா

பெண்கள் ஆண்களுக்கு நிகராக பார்க்கப்பட வேண்டும் என்ற கருத்து எங்கெல்லாம்  தவறாக புரிந்து கொள்ளப்பட்டதோ, அதையெல்லாம் சரி செய்து கொண்டே இருக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம். அப்படியான ஒரு தீர்ப்புதான் இது. திருமணம் ஆகிவிட்டால் அந்தப் பெண் தனது கணவரின் குடும்பத்திற்குத்தான் தான் சம்பாதிக்கும் பணத்தைக் கொடுப்பார் என்ற சிந்தனையே இந்த சிக்கலுக்கு காரணம். ஆனால், இன்று ஆண்களைப் போலவே பல பெண்களும் தங்களின் தாய் தந்தையரை கவனித்துக் கொள்வதையும், ஒரு குடும்பத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருப்பதையும் பார்த்து வருகிறோம். இந்த தீர்ப்பு பல வழக்குகளில் மேற்கோள் காட்டப்படும். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் இந்த தீர்ப்பு நிச்சயம் வரவேற்கத்தக்கது” என்றார்

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.