லண்டன் கேம்ப்பிரிட்ஜ் சென்ற ராகுல் காந்தி இந்தியா குறித்து பல்வேறு விஷயங்களை அங்கு பேசியிருக்கிறார். அதில் நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசும் போது மைக் அணைக்கப்படுவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். ராகுல் காந்தியின் கருத்துக்களுக்கு பா.ஜ.க தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ராகுல் காந்தி

இந்த நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கரண் சிங்கின் முண்டக உபநிஷத் புத்தகத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய துணைக் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், “உலகம் நமது வரலாற்று சாதனைகள், செயல்பாடுகள், துடிப்பான ஜனநாயகத்தை பாராட்டுகிறது. ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நம்மில் சிலர், நமது ஜனநாயக விழுமியங்களை சிந்திக்காமல், அதை இழிவுபடுத்துவதற்காக அதீத முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

G20 மாநாட்டுக்கு தலைமை என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மேலும் நமது நாட்டுத் தலைவர்களும் நாட்டுக்காக அதிகமாக உழைக்கிறார்கள். ஆனால், அவர்களையும், நமது நாடாளுமன்றத்தையும், அரசியலமைப்பையும் களங்கப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் தவறான பிரசார முறை ஆபத்தானது. நமது தேசியம் மற்றும் ஜனநாயக விழுமியங்களை சமரசம் செய்வதை எந்த அரசியல் பக்கச்சார்பும் நியாயப்படுத்த முடியாது.

நாடாளுமன்றம்

நாட்டிற்கு வெளியே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்துக்கு நான் மௌனம் கடைபிடித்தால், நான் அரசியலமைப்பின் தவறான பக்கத்தில் நான் இருப்பதாக ஆகிவிடும். அது அரசியலமைப்பு குற்றமாகவும், எனது சத்தியப்பிரமாணத்தின் மீதான தாக்குதலாகவும் இருக்கும். இந்திய நாடாளுமன்றத்தில் மைக்குகள் அணைக்கப்பட்டதாகக் கூறுவதை நான் எப்படி புனிதப்படுத்துவது? அதைச் சொல்ல துணிச்சல் எப்படி வந்தது?

நமது தேச வரலாற்றின் இருண்ட அத்தியாயம், எந்த ஜனநாயகமும் பாதிக்கப்படக்கூடிய இருண்ட காலம் எமர்ஜென்சி பிரகடனம். ஆனால். இந்திய ஜனநாயக அரசியல் தற்போது முதிர்ச்சியடைந்துள்ளது. எனவே, அந்த எமர்ஜென்சியை மீண்டும் செய்ய முடியாது. நமது தேசத்தைப் பற்றி அவதூறாக நாட்டிற்குள்ளும் வெளியிலும் கூறுபவர்கள் தேசத்தை அவமதிப்பவர்கள்.

ஜெக்தீப் தன்கர்

நான் எந்த அரசியலிலும் பங்களிப்பவனல்ல. நான் கட்சி சார்பான நிலைப்பாட்டிலும் ஈடுபடவில்லை. ஆனால் அரசியலமைப்பில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் மௌனம் கடைபிடித்தால், இந்த தேசத்தின் மீது நம்பிக்கை கொண்ட பெரும்பான்மையான மக்கள் எப்போதும் அமைதியாகி விடுவார்கள். அதனால் இனிமேலும் என்னால் அமைதியாக இருக்க முடியாது” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.