நாடு முழுவதும் மத்திய அரசின் பங்களிப்போடு நகரங்களில் ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மும்பை மெட்ரோபாலிட்டன் பகுதியில் இருக்கும் நகரங்களில் ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 40 ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது மும்பையில் இரண்டடுக்கு ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தப் பேருந்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

வரும் நாள்களில் மும்பை முழுவதும் 200 ஏசி எலெக்ட்ரிக் இரண்டடுக்கு பஸ்கள் அறிமுகம் செய்யப்படும் என்று மும்பையில் பஸ் போக்குவரத்தை நடத்தி வரும் பெஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டடுக்கு ஏசி எலெக்ட்ரிக் பஸ்

இது தொடர்பாக பெஸ்ட் பொது மேலாளர் லோகேஷ் சந்திரா அளித்த பேட்டியில், “இந்தியாவிலேயே முதல் முறையாக இரண்டடுக்கு ஏசி எலக்ட்ரிக் பஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘தேசிய சுத்தமான காற்று’ திட்டத்தின் கீழ் இந்த பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரின் வழிகாட்டுதலில் மும்பையில் பொதுப் போக்குவரத்தை உலகத்தரத்திற்கு மேம்படுத்த இரண்டடுக்கு ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை மும்பை மக்களுக்கு சர்வதேச அளவில் பயணம் செய்த அனுபவத்தைக் கொடுக்கும்!’’ என்றார்.

இந்த பஸ்சில் முன் பகுதி மற்றும் பின் பகுதியில் வாசல்கள் இருக்கின்றன. அதோடு ஒரு அவசர வழியும் அமைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 74 பயணிகள் இதில் பயணம் செய்ய முடியும். ஒரு முறை சார்ஜிங் செய்தால் 250 கிலோ மீட்டர் போகும். அதோடு ஒன்றரை மணி நேரத்தில் முழுமையாக இந்தப் பேருந்தை சார்ஜிங் செய்ய முடியும்.

இந்த பஸ்கள் அதிகமாக தென் மும்பை, அந்தேரி, பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்ஸ் பகுதிகளில் இயக்கப்படும். மார்ச் மாத இறுதிக்குள் 20 ஏசி இரண்டடுக்கு எலெக்ட்ரிக் பஸ்கள் மும்பையில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. 2026-ம் ஆண்டுக்குள் மும்பையில் இயக்கப்படும் அனைத்து பஸ்களையும் எலக்ட்ரிக் பஸ்களாக மாற்ற பெஸ்ட் திட்டமிட்டு இருக்கிறது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள பஸ் குர்லா பேருந்து நிலையத்திலிருந்து பாந்த்ரா – குர்லா காம்ப்ளக்ஸ் வரை இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இரண்டு அடுக்கு எலக்ட்ரிக் பஸ்

எலெக்ட்ரிக் ஏசி பஸ்களைத் தயாரித்து வழங்கி வரும் ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் பாபு இது குறித்துக் கூறுகையில், “2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரண்டடுக்கு ஏசி எலெட்ரிக் பஸ் தயாரிப்பு தொடங்கப்பட்டது. அதில் முதல் பஸ் இப்போது டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தயாரிக்கப்படும் பஸ்களின் எடையை விட வெறும் 18 சதவிகித எடையை மட்டும் அதிகரித்து எடை குறைவான அலுமினியத்தின் மூலம் இந்த பஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. இதில் வழக்கமான பஸ்களைவிட இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்க முடியும். இரண்டடுக்கு ஏசி எலெக்ட்ரிக் பஸ்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே தொடங்குவதாக இருந்தது. ஆனால் தரச்சான்றுகள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் பஸ்களை அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது!” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.