அடடா… இவர்கள் இப்படிக்கூட காதலைக் குறித்து உருகி மருகிப் பேசுவார்களா என உணர்ச்சிவசப்படவைக்கிறது, பிப்ரவரி-14 காதலர் தினத்திற்காக ‘காதல் என்பது யாதெனில்’ தலைப்பிற்காக அரசியல், சமூகம் சார்ந்த பிரபலங்கள் விகடனுக்காகத் தங்கள் இதயத்தைத் திறந்தபோது! அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் காதல் திருமணம்தான். ஹைலைட்டாக அவரின் மனைவி பெயர் என்ன தெரியுமா? ஜெயக்குமாரி! நல்ல பொருத்தம்தானே?! ஜெயக்குமாரிடம் அவரின் காதல் திருமணம் குறித்துப் பேசினேன்…

“காதலுக்கும் எனக்கும் ரொம்ப நெருக்கம். ஏன்னா, நானே காதல் திருமணம்தான். காதல்னாலே எதிர்ப்பு இருக்கத்தானே செய்யும்? எங்களோட காதலுக்கும் எதிர்ப்பு வந்தது. நானும் மனைவி ஜெயக்குமாரியும் பதிவுத் திருமணம் செய்துக்கிட்டோம். எங்க குடும்பம் பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டதால், என் அப்பா ஏற்றுக்கொண்டார். குறிப்பா, என்னுடைய சொந்த அக்கா ரமணிதேவியும் சாதி மறுப்புத் திருமணம்தான் செய்துக்கிட்டாங்க. என்னுடைய மாமா சண்முகம் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். எங்கப்பா, ரெண்டு பேர் காதலையும் ஏத்துக்கிட்டு பிரமாண்டமாகத் திருமணம் பண்ணி வெச்சார்.

ஜெயக்குமார் மனைவி ஜெயக்குமாரியுடன்

அந்தத் திருமணத்துல சத்தியவாணி முத்து, அன்பில் தர்மலிங்கம்னு ஏகப்பட்ட பேர் கலந்துகிட்டாங்க. எங்கக்கா சாதி மறுப்புத் திருமணம் செய்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் அந்தக் காலத்துப் பெற்றோர் மாதிரி கிடையாது. ‘லவ் பண்ணுறதுன்னா பண்ணுங்க. நான் குறுக்க நிற்கமாட்டேன்’ன்னு என் பிள்ளைங்க மூணு பேர்கிட்டேயும் முன்கூட்டியே சொல்லிட்டேன். ஆனா, துரதிஷ்டவசமா மூணு பேருமே அம்மா தலைமையில அரேஞ்சுடு மேரேஜ்தான். எவனும் லவ் பண்ணல. அதுல, எனக்கு வருத்தம்தான்.

நல்ல லவ்வுக்கு விட்டுக்கொடுத்துப் போற மனப்பான்மையும் புரிதலும் இருக்கணும். அதுதான் உண்மையான காதல். எனக்கும் ஜெயக்குமாரிக்கும் நல்ல புரிதல் இருக்கிறதாலதான், இத்தனை வருசமா எங்க லைஃப் நல்லபடியா போகுது. சின்ன சண்டை வந்தாக்கூட ரெண்டு பேரும் அதுபற்றிப் பேசி சரி பண்ணிப்போம். நான் அரசியலில் இவ்ளோ பிஸியா ஈடுபடுறதுக்கு காரணம் என் மனைவிதான். வியட்நாம் அதிபரா இருந்த ஹோசிமின் வட வியட்நாம்காரங்களும் தென் வியட்நாம்காரங்களும் திருமணம் பண்ணுங்கன்னு சொன்னார். காதலால் வியட்நாமையே இணைச்சுட்டார். நம் சங்க இலக்கியங்களில் காதலைப்பற்றி உயர்வா கூறியிருக்கு. காதலும் வீரமும் ஏற்கெனவே இருக்கும்போது, காதலர் தினம் தேவையா என்ற கேள்வியும் எழுகிறது.

இப்போ இருக்குற பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளோட மனநிலையைப் புரிந்துகொள்ளவேண்டும். கெளரவத்துக்காகவும் அந்தஸ்துக்காகவும் ஊரார் பேச்சுக்காகவும் எதையும் நினைக்கக்கூடாது. அதேநேரம், பெற்றோர்களும் நமக்கு நல்லதுக்காகத்தான் யோசிப்பார்கள் என்பதைச் சிந்திக்கவேண்டும். இந்தியாவோட மிகப்பெரிய பிரச்னையா இருக்கிறது சாதியும் மதமும்தான். காதலால் மட்டும்தான் சாதி, மதம், ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கவேண்டும். காதல் பண்ணுங்க. சாதி, மத மறுப்புத் திருமணங்கள் செய்யுங்க. கலவரங்கள் ஒழியும்.

தன் மனைவியுடன் ஜெயக்குமார்

தலைவரோட ‘அன்பே வா’தான் எனக்கு ரொம்பப் புடிச்ச படம். அதற்குப்பிறகு, இப்போ வந்த ‘லவ் டுடே’ பார்த்தேன். இளைஞர்களோட காதலை ரொம்ப பிரதிபலிச்சிருக்கு” என்றவரிடம், “உங்கள் காதலில் மறக்கமுடியாத பயணம் எது?” என்று கேட்டபோது, “நிச்சயமா ஜெயக்குமாரியுடன் சென்ற தாஜ்மஹால் பயணம்தான். என் மனைவிக்கு தாஜ்மஹாலைப் பார்க்கணும்ங்கிறது காதலிக்க ஆரம்பிச்சதிலிருந்து ஆசை. நான் படிக்கும்போதே தாஜ்மஹால் எல்லாம் போயிட்டு வந்துட்டேன். ஆனா, மனைவியை அழைத்துச் செல்கிற ஆசை 2005-ல்தான் நிறைவேறிச்சு. டெல்லியில மின்சாரத்துறை அமைச்சர்கள் மாநாடு நடந்தது. அப்போ போகும்போதுதான் என் மனைவி ஜெயக்குமாரியை அழைத்துபோய் அவங்களோட ஆசையை நிறைவேற்றினேன். அங்க போனபோது மனைவியோட முகத்துல அப்படியொரு சந்தோஷம்” என்கிறபோது ஜெயக்குமாரின் குரலில் அதைவிட மகிழ்ச்சி.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.