மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் பதுங்கி இருக்கிறார். தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறிக்கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேசிய புலனாய்வு ஏஜென்சி மும்பையில் தாவூத் இப்ராகிமிற்கு வேண்டப்பட்டவர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தியது. இதில் தாவூத் இப்ராகிம் சகோதரி கசீனா பார்கர் மகன் அலி ஷாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இது தவிர தாவூத் இப்ராகிம் நெருங்கிய கூட்டாளியாக கருதப்படும் சோட்டா சகீல் உறவினர் புரூட்வாலா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சி சோட்டாசகீல் உட்பட தாவூத் கூட்டாளிகள் 4 பேர் மீது சர்வதேச அளவில் தீவிரவாத செயலில் ஈடுபட்டதாக மும்பை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் அலி ஷா கொடுத்துள்ள வாக்கு மூலம் இடம் பெற்று இருக்கிறது. அதில் தாவூத் இப்ராகிம் இரண்டாவதாக பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் தாவூத் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முதல் மனைவி மீதான விசாரணை ஏஜென்சியின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் தாவூத் இரண்டாவது திருமணம் செய்திருக்கலாம் என்று கருதுவதாகவும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் துபாயில் தாவூத்தின் முதல் மனைவியை பார்த்ததாகவும், இச்சந்திப்பின் போதுதான் இரண்டாவது திருமணம் குறித்து தனக்கு தெரிய வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். தாவூத்தின் முதல் மனைவி இந்தியாவில் உள்ள தாவூத் உறவினர்களுடன் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்பில் இருப்பதாகவும், தாவூத் இப்ராகிம் கராச்சியில் இருப்பதாகவும் அலி ஷா தெரிவித்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.