பொதுவாகவே உடற்பயிற்சி உடல் நலத்தை மேம்படுத்தும் என்பது நாம் அறிந்ததே. உடற்பயிற்சியிலேயே குறிப்பாக கார்டியோ உடற்பயிற்சிகள் இதய நலத்தைப் பேணுபவை. ஜிம்மிற்கு சென்றுதான் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. வாக்கிங், ஜாகிங், ரன்னிங் போன்றவையே நல்ல உடற்பயிற்சிகள்தான். இன்றைக்கு நாம் வைக்கிற ஒவ்வோர் அடியையும் கணக்கிடும் செயலிகள் வந்துவிட்டன.

இந்நிலையில், தினமும் 9 ஆயிரம் அடிகள் நடக்கும் இளைஞர்களுக்கு மாரடைப்புக்கான அபாயம் 50 சதவிகிதம் குறைவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் உண்மைத் தன்மை குறித்தும், உடற்பயிற்சிக்கும் இதய நலத்திற்குமான தொடர்பு குறித்தும் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் குருபிரசாத்திடம் கேட்டோம்…

“கடந்த 10, 15 ஆண்டுகளில் மருத்துவம் சார்ந்த கருவிகளை அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக டிட் பிட்ஸ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவை வந்த பிறகு ஒருவர் தனது ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. அறிவியலைப் பொறுத்தவரை இதற்கு ஆதாரங்கள் வேண்டும் என்பதால் ஆப்பிள் போனில் உள்ள ஹெல்த் செயலியையும், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சும் கொண்டு சோதனை செய்யப்பட்டதில், இந்தக் கருவிகள் ஒருவரது உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவுகின்றன என்பது நிரூபணமாகியுள்ளது. இதில் முக்கியமானது இந்தக் கருவிகள் ஈ.சி.ஜி எப்படி இருக்கிறது, இதயத் துடிப்பில் உள்ள மாற்றங்கள் என்ன, ஒருவரது உடற்பயிற்சியின் தேவை என்ன, உடலில் போதுமான ஆக்ஸிஜன் அளவு இருக்கிறதா என்பதை எல்லாம் கண்காணிக்க உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. எதிர்காலத்தில் இந்தக் கருவிகள் மேலும் மேம்பட்ட வடிவில் பயன்பாட்டிற்கு வரும். ஆனால், 9 ஆயிரம் அடிகள் கட்டாயம் நடந்தால் மாரடைப்பு வருவது 50 சதவிகிதம் குறையும் என பொதுப்படையாகச் சொல்லிவிட முடியாது.

உடல் உழைப்பு குறைவாக இருக்கும் வேலைகளைச் செய்வோருக்கு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதனைக் கண்காணிக்கவும் நடக்கும் தூரத்தைக் கணக்கிட இந்தச் செயலிகள் உதவுகின்றன. குறைந்தது ஒரு நபர் 13 ஆயிரம் அடிகள் வரை நடந்தால் நல்லது என கூற முடியும், இவை ஒருவரை ஊக்கப்படுத்த உதவலாம்.  ஆனால், அனைவருக்கும் இது பொருந்தாது. இதய நோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு இப்படியான அளவுகோல்கள் உதவலாமே தவிர, இளைஞர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் தங்கள் இலக்கை 9 ஆயிரம் அடிகளாக சுருக்கிக்கொள்ளத் தேவையில்லை” என்றவர் நடைப்பயிற்சிக்கும் இதய நலத்துக்குமான தொடர்பு குறித்து கூறினார்.

“நடப்பதற்கும், இதய ஆரோக்கியத்திற்கும் என்ன தொடர்பு என்றால், நம் முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் உள்ள தசைகளுக்கும், நமது இதயத்திற்கும் நரம்புகள் மூலம் தொடர்பு உள்ளது. நடப்பதால் தசைகளின் செயல்பாடு ஆக்டிவ்வாக இருக்கும், அதன் மூலம் இதயத்தின் செயல்பாடு அதிகரிக்கும். இந்தத் தசைகளின் செயல்பாடு அதிகரிக்க வேண்டும் என்றால், ஒன்று நடக்க வேண்டும் அல்லது ஓட வேண்டும். தொடர்ந்து நடப்பதன் மூலம் இதயத்தில் இருக்கும் சிறிய அளவிலான அடைப்புகள் கூட நீங்கும் வாய்ப்பு உள்ளது.

40 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சியே கிடையாது. 50 வயதுக்கும் குறைவானவர்கள் ஜிம், ஜாகிங் என தங்களால் இயன்ற அளவுக்கு உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சி என்பதே 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், உடல் நலக்குறைபாடு உள்ளவர்களுக்கும் மட்டுமே அவசியமாகிறது. அதனால்தான், இந்த 9 ஆயிரம் அடிகள் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்கிற அளவுகோல் அனைவருக்கும் பொருந்தாது என்று கூறுகிறோம். 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குமே கூட 9 முதல் 13 ஆயிரம் அடிகள் வரையும், அதற்கு இணையான நேரமும் நடக்கலாம்.  

Walking

40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் இதைவிட 10 மடங்கு கடுமையான உடற்பயிற்சியைச் செய்ய வேண்டும், குறைந்தது ஓட வேண்டும். குறைந்தது 45 நிமிடங்கள் வரை வேகமாக நடப்பது சிறந்தது. 45 நிமிடங்கள் ஒரே நேரத்தில் நடைப்பயிற்சி செய்வது என்பதை காலை 30 நிமிடங்கள், மாலை 30 நிமிடங்கள் என பிரித்துக்கொண்டு, அதிலும் 15 நிமிடங்கள் வேகமாக நடக்கவும், 15 நிமிடங்கள் ஓடவும் செய்யலாம். எப்படியாயினும் உடல் நலத்தைப் பேண அவசியம் உடல் உழைப்பு தேவை என்பதை அனைவரும் உணர வேண்டும்” என்கிறார் குருபிரசாத்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.