வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. இன்று நேற்றல்ல சங்க காலம் தொட்டே இந்த விளையாட்டு நடந்து கொண்டு இருக்கிறது.

தமிழர் திருநாள் பொங்கல் ஆகும். அறுவடை முடிந்த பிறகு விவசாயம் செழிக்க உதவியாக இருந்த மாடுகள், கலப்பைகள் மற்றும் சூரியன் இவைகளுக்கு நன்றி தெரிவிக்க உருவான பண்டிகைதான் பொங்கல். பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல்.

இந்த மூன்று நாட்களும் தமிழகம் முழுவதும் உற்சாகம் பொங்கி வழியும். பொங்கல் விழாவில் பிரதானமாக இருப்பது ஜல்லிக்கட்டு.

Jallikattu

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் ஆகிய இடங்களிலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, திருச்சி, தேனி போன்ற இடங்களிலும் நடைபெறுகிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. ஆதலால் அதைப் பார்க்கவும் பொங்கல் விழாக்களில் கலந்து கொள்ளவும் பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். ஜல்லிக்கட்டு போட்டி நடக்கும் இடங்களில் எல்லாம் அவர்களை பார்க்கலாம்.

“பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு

தங்கச்சி…தங்கச்சி..

புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும்

இனி நம் கட்சி…நம் கட்சி…

பூ பூக்கும் மாசம் தை மாசம்

ஊரெங்கும் வீசும் பூவாசம்…”

90 கிட்ஸ் கள் மட்டுமன்றி இன்றைய தலைமுறை

இளைஞர்களையும் இழுக்கும் தை மாத பாடல்.

Jallikattu

90 கிட்ஸ் கொஞ்சம் ‘ஜெண்டில்மேன்’ கள் அவர்களுக்காக கவிப்பேரரசின் ‘ உசிலம்பட்டி பெண்குட்டி முத்துப்பேச்சி’ பாடலில்

‘அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு சேர்ந்து போனால் ஆகாதா

மாடு புடிச்சி முடிச்ச கையில் மயில புடிப்பே தெரியாதா’

-என்று காதல் டூயட் பாடலில் ஜல்லிக்கட்டை கொண்டு வந்து அதற்கு மேலும் பெருமை சேர்த்தார்.

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. மேலும் 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களை துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடப்படும் பழக்கம் இருந்தது.

Jallikattu

மாட்டை அணையும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சு வழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ என்று ஆனது என்றும் கூறப்படுகிறது.

‘தாய்க்குப் பின் தாரம்’ – சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களை கதாநாயகனாக போட்டு தயாரித்த முதல் படம். இப்படத்தின் சிறப்பு அதில் இடம்பெற்ற காளை சண்டை காட்சிகள்.

அந்த காலத்தில் ஊரில் உள்ள பண பலம் பெற்ற மனிதர்கள், ஜமீன்தார்கள், யாராலும் அடக்க முடியாத காளைகளை வளர்ப்பதை தங்கள் கவுரவமாக நினைத்தார்கள். இந்த படத்தில் டி.எஸ். பாலையா அவர்கள் அப்படி ஒரு காளையை வைத்திருப்பார்.

கதாநாயகன் எம்.ஜி.ஆர். அவர்களின் தகப்பனார் அக்காளையை அடக்க முயன்று தோற்று உயிரிழப்பார். அந்த களங்கத்தை போக்கி காளையை அடக்கி கதாநாயகன் வெற்றி பெறுவார் இது தான் அப்படத்தின் முக்கியமான ஒரு வரிக்கதை.

Jallikattu

காளையை அடக்கும் காட்சி மிகுந்த வரவேற்பை பெற்று படம் 100 நாட்கள் ஓட அதுவும் ஒரு காரணமாக இருந்தது. இதற்காக ஜல்லிக்கட்டு காளையை மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி அலைந்தார் தேவர்.

கடைசியில் பெரியகுளம் பகுதியில் இருந்த மிராசுதார். ஒருவர் தனது காளையை படப்பிடிப்புக்கு தந்து உதவினார். படம் வெற்றி பெற்றதும் காளையை தேவர் பில்ம்ஸ் சின்னமாக வைத்துக் கொண்டார்.

“அஞ்சாத சிங்கம் என் காளை

இது பஞ்சா பறக்க விடும் ஆளை

இந்த ஆபத்தை நாடி வரும் மாவீரன்

பாரிலே யாரடி…”

-வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் வெள்ளையம்மா வாக நடித்த நாட்டியப்பேரொளி பத்மினி தனது காளையின் பெருமைகளைப் பற்றி தோழிகளிடம் ஆடிப்பாடி சொல்வது போல அமைந்த பாடல். வெள்ளையத்தேவனாக நடித்த ஜெமினி அவர்கள் காளையை அடக்கி வெள்ளையம்மாவை கரம் பிடிப்பார்.

Jallikattu

1950- களில் திரைப்படங்களில் காளை சண்டை காட்சிகள் இடம் பெற்றன என்பதற்கு இதெல்லாம் உதாரணங்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் தங்கள் கதாநாயகர்களை வீரமுடையவனாக காட்டவும் அன்றைய இயக்குனர்கள் இது போன்ற காட்சிகளை வைத்தார்கள்.

சங்க காலத்தில் ஜல்லிக்கட்டு என்பது ‘ஏறு தழுவுதல்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது. ஏறு என்றால் ‘காளை’ என்று பொருள்.

காளையை அடக்கும் வீர விளையாட்டை ‘ஏறு தழுவுதல்’என்று அக்காலத்தில் அழைத்தார்கள். கொல்லக்கூடிய காளையை தழுவி அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் அழைக்கப்பட்டது.

ஊர் கூடி கைதட்டி வேடிக்கை பார்க்க பாய்ந்தோடி வரும் வலுவான காளை ஒன்றை வீரமுள்ள ஆண்மகன் ஒருவன் தன் பலத்தால் அக்காளையின் திமிலை பற்றி அதன் வேகத்தை அடக்கி வெல்வதே ஏறுதழுவுதல் என்று பெயர்.

சிலப்பதிகாரம் – மதுரை காண்டத்தில் ஆய்ச்சியர் குரவை பகுதியில்

‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்

வேரி மலர்க் கோதையாள்;’ – என்று தொடங்கி

‘தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்

பூவைப் புது மலராள்.’

-என்று முடியும் வரையில் உள்ள 7 பாடல்கள் ஏறுதழுவல் பற்றியும், 7 விதமான காளைகளை பற்றியும் தகவல்கள் உள்ளன. அதை அடக்கும் ஆண்களையே கன்னிப்பெண்கள் விரும்புவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிந்து சமவெளி நாகரீகத்தில் இந்த ஏறு தழுவுதல் போன்ற நிகழ்வுகள் நடந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளார்கள். மாடு அணையும் கல் முத்திரை ஒன்று 1930 ஆம் ஆண்டு மொகஞ்சதாரோவில் கண்டறியப்பட்டது.

புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் அது வைக்கப்பட்டுள்ளது.

ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாற்று அறிஞர்கள் இதை ஆய்வு செய்து ஏறு தழுவுதலை குறிக்கும் சின்னம் என்று விளக்கியுள்ளார்கள்.

Jallikattu

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கரிக்கையூரில் ஏறு தழுவுதல் தொடர்பான பாறை ஓவியங்கள் இருப்பதாக 2004 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

வாடிவாசல் என்பது ஜல்லிக்கட்டின் போது காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விடும் இடம் ஆகும். இவ்வாசலைத் தாண்டும் முன் காளைகளின் மூக்கணாங்கயிறு உள்ளிட்ட அனைத்து பிணைப்புகளையும் அறுத்து விடுவர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசல் பயன்படுத்தப்படும்.

வாடிவாசல் என்ற பெயரில் திரு. சி.சு.செல்லப்பா அவர்கள் 1947 ஆம் ஆண்டில் நாவல் ஒன்றை எழுதினார். ஜல்லிக்கட்டை கதைக்களமாக கொண்டு வெளிவந்த முதல் நாவல் இதுதான். இந்த நாவலை எழுதுவதற்காகவும் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை பதிவு செய்யவும் காமிரா ஒன்று வாங்கி புகைப்படம் எடுக்கும் கலையை பயின்று ஜல்லிக்கட்டை படமெடுத்தார். 70 பக்கங்களை கொண்ட குறுநாவல் இது. இதன் வெளியீட்டாளர் காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ். வெற்றிமாறன் இயக்கத்தில் திரைப்படமாக வெளி வர இருக்கிறது.

இந்த நாவலின் கதாபாத்திரங்கள் பிச்சி, மருதன், பிச்சியின் அப்பா அம்புலி, ஊர் பெரியவர் பாட்டையா, ஜமீன்தார் ஆகியோர்.

ஏறுதழுவலில் பெயர் பெற்ற அப்பா அம்புலியை போட்டி ஒன்றில் முட்டி கொன்ற ஜமீன்தாரின் காரி காளையை அடக்கி பழி வாங்க செல்லாயி அம்மன் கோவிலுக்கு வரும் பிச்சியும் அவன் மச்சினன் மருதனும்காளையை அடக்கினார்களா இல்லையா என்பதுதான் கதை. முழுக்கதையும் செல்லாயி அம்மன் கோவில் வாடிவாசலில் நடப்பது போல் சொல்லப்பட்டிருக்கும். பாட்டையா மூலம் காளைகளின் வகைகள் பற்றி அவர்கள் தெரிந்து கொள்வார்கள். நேரலையில் ஜல்லிக்கட்டு பார்ப்பது போல நாவலை எழுதியிருப்பார்.

Jallikattu

இறந்து போன வீரர்களுக்கு ஈமக்கடன் களை செய்து கல் நட்டு வழிபடுவது பண்டைய தமிழர் மரபு. இப்படி நடப்பட்ட கற்கள் நடுகல் என்று அழைக்கப்படுகிறது.

ஏறு தழுவல் விளையாட்டு வீர விளையாட்டாக பண்டைய தமிழர்களால் போற்றப்பட்டது. காளையை அடக்கும் வீரன் மாவீரனாக கருதப்பட்டான். இது தொடர்பான நடுகற்கள்பல கண்டறியப்பட்டுள்ளன.

ஆத்தூர் கருமந்துறையில் இருந்து கொண்டுவரப்பட்ட நடுகல் தற்சமயம் சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. மேலும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம் புதூர் கிருஷ்ணகிரி மாவட்டம் அகரம் கிராமம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இடையில் தடை செய்யப்பட இவ்வீர விளையாட்டை மீட்டெடுக்க இவைகள் உதவியாக இருந்தன.

படைமாட்சி அதிகாரத்தில் திருவள்ளுவர்

“நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை

தலைமக்கள் இல்வழி இல்…”

சிறந்த படை வீரர்கள் அதிகம் இருந்தாலும், படைக்கு நல்ல தலைவன் இல்லை என்றால் அந்த படை போரில் நிலைத்து நிற்காது..

வழி நடத்த ஒரு சிறந்த தலைவன் எப்படி உருவாகுவான். வீர விளையாட்டுகளில் துணிந்து களமிறங்கி தன்னை வீரமகன் என்று நிரூபிப்பவனே தலைவனாக மாறுவான்.

“விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்

வைக்கும்தன் நாளை எடுத்து”

ஒரு வீரன் தான் வாழ்ந்த நாட்களை கணக்கு பார்த்து அந்த நாட்களில் தன்னுடலில் விழுப்புண் படாத நாட்களை வீணான நாட்கள் என்று வெறுத்து ஒதுக்குவான் என்று படைச்செருக்கு அதிகாரத்தில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

Jallikattu

வீர விளையாட்டுகளில் காயங்கள் ஏற்படலாம். ஜல்லிக்கட்டில் மட்டுமல்ல… உலகளவில் ரசிக்கப்படும் கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து விளையாட்டுகளில் கூட இது போன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. அந்த விளையாட்டுகள் தடை செய்யப்பட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

ஜல்லிக்கட்டு தடை இல்லாமல் நடக்க வேண்டும். வீர இளைஞர்கள் பலர் உருவாக வேண்டும்.

வீர விளையாட்டில் முரட்டுக்காளையை அடக்கி வெற்றி பெறும் சூப்பர் ஸ்டார் காளையன்களைப் பார்த்து ‘அண்ணனுக்கு ஜே… காளையன்களுக்கு ஜே…என்று வாழ்த்திப் பாடி ஜல்லிக்கட்டை போற்றுவோம்.

===

திருமாளம் எஸ். பழனிவேல்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.