தனியார் மருத்துவமனை வளாகத்தில் சுற்றி திரிந்த 22 நாய்களை பிடித்து சென்றவர்கள் மீது மாநகர காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இன்னும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்கவில்லை என்று விலங்கின பாதுகாப்பு செயற்பாட்டாளர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.

தெரு நாய்கள்

மதுரையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை எந்தவொரு விதிகளையும் பின்பற்றாமல் சித்திரவதை செய்து பிடிப்பதாக புறக்கணிக்கப்படும் நாட்டு, சமூக நாய்கள் பாதுகாப்பு ஆர்வலர்கள் தொடர்ந்து புகார் எழுப்பி வருகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ‘நன்றி மறவேல்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரிக்குமார், “மதுரையில் தெரு நாய்கள் துன்புறுத்தப்படுவதும், அதன் வாழ்விடங்களை விட்டும் துரத்தப்படுவதும் தொடர்ந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் ஆரப்பாளையம் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களை பிடித்து சென்றார்கள். அது குறித்து  மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. சமீபத்தில் சிம்மக்கல் பகுதியில் தெரு  நாய்களை கொல்ல பார்த்தார்கள். அதற்கு நியாயம் கேட்டு போனவர்களை சிலர் அடிக்க வந்திருக்கிறார்கள்.

மாரிக்குமார்

மதுரையில் உள்ள பெரிய நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் இதுபோன்ற செயல்களை தொடர்ந்து செய்து வருகின்றன.

இப்படித்தான் கடந்த வாரம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த 22 நாய்களை கம்பி வைத்து கொடூரமான முறையில் பிடித்து வேனில் கொண்டு சென்றிருக்கிறார்கள். மாநகராட்சியில் பிடிக்க சொன்னதாக போலியான உத்தரவை வைத்துக்கொண்டு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு தகவல் தெரிந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு தாங்கள் உத்தரவிடவில்லை என்றார்கள். அதோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம். அவர் கால்நடைத்துறை அலுவலரிடம் விசாரிக்க உத்தரவிட்டார். இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக ஒரு கும்பல் நாயை பிடித்து சென்றதாக கால்நடைத் துறை அலுவலர்கள் போலீசில் புகார் கொடுத்தார்கள்.

இதோடு ஆர்வலர் சாய் மயூர் போலீசில் புகார் கொடுத்தார். அதற்கு கடந்த 22-ம் தேதிதான் வழக்கு பதிவு செய்தார்கள். நாய்களை பிடித்துச்சென்ற அடையாளம் தெரியாத 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நாய்களும் மீட்கப்படவில்லை.

மனிதர்களை கடிப்பதால் நாய்களை பிடிப்பது சரிதான் என்று சிலர் இதை நியாயப்படுத்துகிறார்கள். எல்லா நாய்களும் கடிப்பதில்லை. கால்நடை மருத்துவர், மாநகராட்சி அலுவலர் மேற்பார்வையில் நாய்களை பிடித்து தடுப்பூசி போட்டோ, கருத்தடை செய்தோ மீண்டும் அதே பகுதியில் விட வேண்டும். ஆனால், இந்த விதிகளை பின்பற்றாமல் கொடுமையான முறையில் பிடித்து சென்று தொலை தூரத்தில் விட்டு விடுகிறார்கள். இதனால் நாய்கள் உணவு கிடைக்காமல் மிகவும் பாதிக்கப்படுகிறது. அவைகளுக்கும் வாழும் உரிமை உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தெரு நாய்களுக்கு ஷெல்டர் அமைக்க முன்பிருந்த கமிஷனர் முயற்சி செய்தார். ஆனால், அவர் மாற்றலாகிப்போன பின்பு அத்திட்டம் அப்படியே முடங்கிவிட்டது” என்றார்.

சாய் மயூர்

போலீசில் புகாரளித்த மதுரை கோமதிபுரத்தை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் சாய் மயூர், நமக்கு அனுப்பியுள்ள செய்தியில், “அமைதியை போதித்த நாட்டில், மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்தில் நடந்தது நியாயமானதா? கடந்த 15-ம் தேதி காலையில் மருத்துவமனை வளாகத்திற்குள் இருந்த 22 நாய்கள் கம்பிகளைப் பயன்படுத்தி கொடூரமாகப் பிடிக்கப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டப்பட்டன. இதில் தனக்கு தொடர்பு இல்லை என்று மதுரை மாநகராட்சி மறுத்துள்ளது.

சம்பவம் நடந்ததை உறுதி செய்ய மருத்துவமனையின் பாதுகாவலர்களின் வாக்குமூலங்களை ரகசிய கேமரா மூலம் பதிவு செய்தேன். அந்த அங்கீகரிக்கப்படாத நாய் பிடிப்பவர்கள் யார்? அந்த நாய்களை எங்கே கொண்டு சென்றார்கள்? அவை உயிரோடு இருக்கிறதா? என்பது தெரியவில்லை. உச்ச நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளில் விலங்குகளின் உரிமைகளைப் பாதுகாத்து வருகிறது. மத்திய அரசில் பல பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. கடவுள் இந்த உலகத்தை மனிதர்களுக்காக மட்டும்தான் படைத்தாரா என்ன?” என்று தெரிவித்துள்ளார்.

மீனாட்சி மிஷன் மருத்துவமனை

நாய்களை பிடிக்க புகார் வந்தால் பாதுகாப்பான முறையில் பிடிக்க வேண்டிய மாநகராட்சி நிர்வாகம், வெளியாட்களை நாய் பிடிக்க பயன்படுத்திக் கொள்கிறது. ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் தங்களுக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் சொல்லிவிடுகிறது மாநகராட்சி நிர்வாகம் என்று புகார் சொல்கிறார்கள் மதுரை மக்கள்.

தற்போது இந்த பிரச்னையில் மாநகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மாநகர காவல்துறைதான் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறது. இது குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை மக்கள் தொடர்பு அலுவலகத்தில் விளக்கம் கேட்டோம். “இந்த சம்பவத்துக்கும் தங்கள் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்றவர்களிடம், ”புகார்தாரர்கள் மீனாட்சி மிஷன் மருத்துவமனை வளாகத்தில் நடந்ததாக புகார் தெரிவித்துள்ளார்களே” என்று கேட்டோம். ”நிர்வாகத்திடம் கேட்டு சொல்கிறோம்” என்று பதில் தந்தனர்.

மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் கேட்டோம், “அன்று நாய்களை பிடித்து செல்ல நாங்கள் உத்தரவிடவில்லை. விதிமுறையின்படி நாய்களை பிடிக்க அலுவலர்களுடன் குழு வைத்துள்ளோம். அங்கு யார் நாய்களை பிடித்தார்கள் என்று தெரியவில்லை. எங்கள் விளக்கத்தை காவல்துறைக்கு தெரிவித்துள்ளோம்” என்றார்.

இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, ” இப்புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி ஃபுட்டேஜை வைத்து குற்றவாளிகள் யார் என்பதை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.