ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், துடுப்பதி ஊராட்சிக்குட்பட்ட பாலக்கரையில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பாலக்கரை, இந்திரா நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த பட்டியலின மக்களின் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் மாணவர், மாணவியர்களுக்கென ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே இருக்கிறது. மாணவியர்கள் பயன்படுத்தும் மற்றொரு கழிப்பறையை அங்கு பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இங்கு பயிலும் 4, 5-ம் வகுப்பைச் சேர்ந்த பட்டியலின மாணவர்கள்தான் கழிவறையை தொடர்ந்து சுத்தம் செய்து வந்திருக்கின்றனர். இந்தக்   கழிவறையை குறிப்பிட்ட பட்டியலின மாணவர்கள்தான் சுத்தம் செய்ய வேண்டும் என அந்தப் பள்ளியின் பெண் தலைமை ஆசிரியர் கீதா தொடர்ந்து வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பள்ளியில் பயிலும் 5-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கடந்த ஒரு வாரக்காலமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். அதையடுத்து, அவர் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்த மாணவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, அவருக்கு  டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.

பாலக்கரை அரசு தொடக்கப்பள்ளி

அந்த மாணவரிடம் பெற்றோர் விசாரித்தபோதுதான் தன்னையும், பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சிலரையும் அங்குள்ள தண்ணீர் தொட்டியையும், கழிவறையையும் கழுவுமாறு தலைமையாசிரியை கூறியதாகத் தெரிவித்திருக்கிறான். தலைமை ஆசிரியர் தங்களை தண்ணீர் தொட்டியை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்ய வற்புறுத்தியதாகவும், அப்போது தொட்டியிலிருந்த ஏராளமான கொசுக்கள் தங்களை கடித்ததாகவும் அந்த மாணவன் தன் பெற்றோரிடம் கூறியிருக்கிறான்.

அதைத் தொடர்ந்து, இன்று பள்ளியை, பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தோப்புப்பாளையத்தைச் சேர்ந்த பெற்றோரில் ஒருவரான ஜெயந்தி, “தோப்புப்பாளையத்திலிருந்து என் மகனை பாலக்கரை தொடக்கப்பள்ளிக்கு அனுப்பி வந்தோம். இந்தப் பள்ளியில் தண்ணீர் தொட்டியையும், கழிவறையையும் சுத்தம் செய்யும் பணிகளை பட்டியலின மாணவர்களை மட்டுமே செய்யுமாறு தலைமையாசிரியை கீதா வற்புறுத்தியிருக்கிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பும் இதேபோல பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்துவிட்டு, வெளியே வந்த மாணவர்களை பார்த்த பெற்றோர்கள் சிலர் நேரடியாக தலைமையாசிரியை கீதாவை சந்தித்து எச்சரித்தனர்.

ஜெயந்தி

இருப்பினும், கழிவறை சுத்தம் செய்தால் உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் பட்டியலின மாணவர்களை மட்டுமே ஈடுபடுத்தி வந்திருக்கிறார். எனவே, இதுபோன்ற செயல்களை தடுக்க தலைமையாசிரியர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, பி.யூ.சி.எல் அமைப்பின் நிர்வாகிகள், “பட்டியலின மாணவர்களை மட்டுமே கழிவறையை தூய்மைப்படுத்துமாறு கூறுவது வன்கொடுமை செயலாகும். எனவே, மாணவர்கள் மீதான வன்கொடுமை செயலில் ஈடுபட்ட தலைமையாசிரியர் கீதா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்யக் கோரி பெருந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம்” என்றனர்.

பள்ளியில் விசாரணைக்காக வந்த போலீஸார்

இதுகு றித்து பாலக்கரை பள்ளியில் நேரில் விசாரணை நடத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் நம்மிடம் பேசுகையில், “பெறப்படும் புகாரின் அடிப்படையில் எந்தெந்தப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்வது என்பதை ஆய்வு செய்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

“சாதிகள் இல்லை என்று சொல்லித் தரவேண்டிய ஆசிரியர்களே இந்த பாகுபாடு காட்டினால் எப்படி சமுதாயத்தில் மாற்றம்வரும்?” என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.