2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இந்திய அரசானது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்ததுடன், புதிய 500 ரூபாய் மற்றும் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துப் புழக்கத்துக்குவிடுவதாக அறிவித்தது. ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்போர் வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனக் கூறியது. இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள், பறிகொடுத்த உயிர்கள் எல்லாம் வரலாறு ஆகிவிட்டது.

பணமதிப்பு நீக்கம்

நோக்கம் என்ன?

இந்த பணமதிப்பு நீக்கம் செய்வதற்கான முக்கியமான நோக்கங்களாக அரசு கூறியது..

  • பணப் பரிவர்த்தனையைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிப்பது

  • கறுப்புப் பணம் மற்றும் ஊழல் ஒழிப்பு

  • தீவிரவாத அமைப்புகளுக்குக் கிடைக்கும் நிதி ஆதாரத்தை முடக்குவது

ஆனால், அறிவிப்பு வெளியான நாளிலிருந்து புதிய புதிய நோக்கங்கள் அவ்வப்போது சேர்க்கப்பட்டு வந்தன. உண்மையில் என்ன காரணத்துக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது, இந்த நடவடிக்கையை எடுத்த நரேந்திர மோடிக்கு மட்டுமே தெரியும்.

பணப்புழக்கமும் டிஜிட்டல்மயமாக்கமும்…

`பணப் பரிவர்த்தனை’யைக் குறைத்து `டிஜிட்டல்மயமாக்கத்தான்’ இந்த நடவடிக்கை என்று மத்திய அரசாங்கம் இந்த நடவடிக்கை எடுத்த சில நாள்களில் சொன்னது. மத்திய அரசாங்கம் சொன்னதுபோல, பணப் பரிவர்த்தனையானது குறிப்பிடத்தகுந்த அளவு டிஜிட்டல்மயமாகி இருப்பது உண்மைதான்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பின் அறிமுகமான யு.பி.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை ஆகியிருக்கிறது.

யு.பி.ஐ தொழில்நுட்பம்

பணம் கொடுத்துத்தான் பொருள்களை வாங்க முடியும் என்றிருந்த நிலை மாறி, தற்போது 10 ரூபாய்க்கு ஒரு டீ குடித்தால்கூட அதை யு.பி.ஐ மூலம் டிஜிட்டலாக பணம் தரும் நிலை உருவாகி இருக்கிறது.

 அதே சமயம், ரொக்கப் பணத்தின் புழக்கமும் ஏகத்துக்கு அதிகரித்திருக்கிறது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் மாதமிருமுறை சுற்றறிக்கையின்படி, அக்டோபர் 21-ஆம் தேதி நிலவரப்படி, பொதுவெளியில் புழக்கத்தில் இருந்த பணத்தின் மதிப்பு சுமார் ரூ.30.88 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதற்குமுன் அதாவது, 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ஆம் தேதி இருந்த பணப்புழக்கம் சுமார் ரூ.17.7 லட்சம் கோடி. அதாவது, அப்போதிருந்த பணப்புழக்கத்தைவிட இப்போதுள்ள பணப்புழக்கம் 71.84% அதிகமாகும்.

என்னதான் புதிய, செளகரியமான டிஜிட்டல் பரிவர்த்தனை பிரபலமாகி வந்தாலும் பொருளாதாரத்தில் ரொக்கப் பரிவர்த்தனையும் அதிகரித்து வரவே செய்கிறது. பெருந்தொற்றுக் காலத்தில் `கான்டாக்ட்லெஸ்” பரிவர்த்தனையான டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதால், அதுவும் அபார வளர்ச்சி அடைந்தது.

கறுப்புப்பணம் ஒழிந்ததா?

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் சுமார் ரூ.5 லட்சம் கோடி அல்லது பணமதிப்பு நீக்கம் செய்த ரூபாய்களில் சுமார் 20% புழக்கத்திலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுவிடும் என அரசாங்கம் கணித்திருந்தது. ஆனால் 2018-ஆம் ஆண்டு மத்திய ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளில் 99.3% அதாவது, 15.3 லட்சம் கோடி மதிப்பில் ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டன. வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாத நோட்டுகளின் மதிப்பு ரூ.10,702 கோடி மட்டுமே!

கறுப்புப்பணம்

இந்தத் தகவல் வெளியானதற்குப் பிறகு, மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிக்கக் கொண்டுவந்த  பணமதிப்பு நீக்க நடவடிக்கை தோல்வி அடைந்துவிட்டது எனவும், இதற்காக மக்கள் படாதபாடு பட்டதுதான் மிச்சம் எனவும் கடுமையாக விமர்சித்தனர். இதற்கு முக்கியமான காரணமாக சொல்லப்படுவது, கறுப்புப் பணத்தை வைத்திருக்கும் பெரும் பணக்காரர்கள் வங்கி அதிகாரிகளுக்குப் பெருமளவில் லஞ்சம் தந்து, புதிய பணமாக மாற்றியதுதான். பல லட்சம் ரூபாய் எந்தக் கேள்வியும் கேட்கப்படாமல், புத்தம் புதிய ரூபாயாக மாறியது. இது பற்றி எந்த விசாரணையும் இதுவரை நடத்தப்படவில்லை என்பது முக்கியமான விஷயம்.

தீவிரவாதத்துக்கு நிதி உதவி குறைந்ததா…?

பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப்பிறகு ஆரம்ப மாதங்களில் இதன் நடவடிக்கைகள் ஓரளவுக்குக் கட்டுக்குள் இருந்தன. ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு தீவிரவாத நடவடிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தன. நிதிவரத்து குறைய ஆரம்பித்தவுடன் தீவிரவாதிகள் தங்கள் நடவடிக்கைகளைத் தொடர மக்களிடமும் மற்ற அமைப்புகள், நிறுவனங்களிடமும் மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்தன. ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாத நடவடிக்கைகள் பெருமளவுக்குக் கட்டுக்குள் வந்திருக்கிறது.

பணமதிப்பு நீக்கம்

புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க…

இது தவிர, பெரும்பாலான துறைகள் பல சிரமங்களையே சந்தித்தனர். முறைசாரா தொழில் துறைகளில் வேலை பார்த்துவந்த பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். தொழில்துறை உற்பத்தி பாதிப்புக்குள்ளானது, உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது சில சதவிகிதங்கள் குறைந்தன. குறு,சிறு, நடுத்தரத் தொழில்களும் பெரும் பாதிப்புக்குள்ளானது. புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கி 2016-17-ஆம் ஆண்டு 79.65 பில்லியன் ரூபாய் செலவிட்டது. அதற்கு முந்தைய ஆண்டு, 2015-16 (ஜூலை முதல் ஜூன் வரை), இது செலவிட்ட தொகை ரூ 34.21 பில்லியன்தான்!

திட்டமிட்டு செய்திருக்கலாம்…

ஆக, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக தனிமனிதர்களும், சிறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருபவர்கள் பல இன்னல்களை சந்தித்தார்கள்; இதனால் பலரது வாழ்க்கை தலைகீழமாக மாறியது என்றாலும், பொருளாதாரம் முறைப்படுத்தப்பட்ட வகையில் செயல்படுவதற்கு இந்த நடவடிக்கை உதவுவதாக இருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை. இன்றைக்கு அனைவரும் ஜி.எஸ்.டி வரி கட்டுவதால், கறுப்புப்பணம் உருவாவது குறைந்துள்ளது. அரசின் வரி வருமானம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதனால் நமது பொருளாதாரத்தின் மதிப்பு வேகமாக உயரத் தொடங்கி இருக்கிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் பொருத்தவரை ஒரு குறை, அதை எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்யாமல், இன்னும் திட்டமிட்டு செய்திருக்கலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.