தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை வெளியிட்டியிருக்கும் அரசாணை எண் 115-ஐ திரும்பப் பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அள்ளி வழங்கி புறவாசல் வழியே ஆட்சியைப் பிடித்த இந்த விடியா தி.மு.க அரசின் மக்கள் விரோதப்போக்கு தொடர் கதையாகிவருகிறது.

அதிமுக அறிக்கை

தி.மு.க ஆட்சிக்கு வர முன்களப் பணியாளர்களாகச் செயல்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் தீட்டும் வகையிலும், படித்த ஏராளமான இளைஞர்களின் அரசு வேலை கனவில் மண்ணை வாரிப்போடும் வேலையிலும் தற்போது இந்த விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். ஆண்டாண்டு காலமாக அரசுப் பணிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வு வாரியம், காவலர் தேர்வு வாரியம் போன்ற அரசு ஏஜென்சிகள் மூலமாகவும், வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் மூலம் சமூக நீதி உறுதி செய்யப்படுவதோடு நேர்மையான முறையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால், இந்த விடியா அரசு இனி அரசுப் பணிக்குத் தனியார் ஆள்சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி – ஸ்டாலின்

இதற்காகத் தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை எண் 115 என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த ஆணையின்படி, மனிதவள சீர்திருத்த குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.எஃப்.பரூக்கி தலைமையில் இந்தக் குழு ஆறு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அரசின் பல்வேறு நிலை பணியிடங்களை திறன் அடிப்படையில் ஒப்பந்த முறையில் நிரப்புவதற்கான முறைகளை மேற்கொள்வது., அரசின் உயர்நிலைப் பணியிடங்களை தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிட்டு அப்பணியிடங்களின் வேலைத்திறன், மதிப்பீடு ஆகியவற்றை ஆராய்தல் போன்ற சில ஆய்வு வரம்புகள் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கின்றன.

எடப்பாடி பழனிசாமி

அரசு வேலைக்காக இரவும் பகலும் படிக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவில், அடிவேரில் திராவகம் ஊற்றி பொசுக்கச் செய்யும் இந்த குதர்க்கவாத விடியா தி.மு.க அரசின் செயலை அ.தி.மு.க சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். படித்த இளைஞர்களின் வருங்காலத்தை பாழாக்கும் அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சரை வற்புறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.