ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், மந்தாசா மண்டலத்தில் உள்ள ஹரிபுரம் கிராமத்தில் வசிப்பவர் கோட்ரா தலம்மா (53). 1990-ல், தலம்மாவின் கணவர் கோட்ரா லட்சுமிநாராயணா, அவரின் மூன்று சகோதரர்களுக்கு மூதாதையர் சொத்துகள் பிரித்துக் கொடுக்கப்பட்டன. பரம்பரை பரம்பரையாக நான்கு சகோதரர்களும் ஹரிபுரம் கிராமத்தில் வசித்து வருகிறார்கள். லட்சுமிநாராயணனைத் தவிர அனைத்து சகோதரர்களும் தங்களின் பரம்பரைச் சொத்தில் வீடுகளைக் கட்டிக்கொண்டனர். லக்ஷ்மிநாராயணாவின் ஒரே மகளான சாவித்திரியும் திருமணம் செய்துகொண்டு அவருடனே வசித்துவந்தார்.

தலம்மா அவர் மகள் சாவித்திரி

இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு லக்ஷ்மிநாராயணா இறந்துவிட்டார். அதனால் அவரின் சொத்து மகள் சாவித்திரிக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, 2019-ல் லக்ஷ்மிநாராயணாவின் உறவினர்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தனர். அதன்பின்னர் சாவித்திரியும், அவர் தாயாரும் உறவினர்களிடமிருந்து தங்கள் நிலத்தை மீட்டுத் தரக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். மேலும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதனால் உறவினர்கள் சாவித்திரி, அவர் தாயார் மீது கோபமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

காவல்துறை

இந்த நிலையில், சர்ச்சைக்குரிய நிலத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் செங்கல், ஜல்லிகளை இறக்குவதாக தலம்மாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உடனே அந்த இடத்துக்கு விரைந்த தலம்மாவும், அவர் மகள் சாவித்திரியும் உறவினர்களை தடுத்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், இருவரையும் தாக்கி, அவர்கள் உயிருடன் இருக்கும் போதே அவர்கள் மீது மண்கலந்த ஜல்லிகளை கொட்டியிருக்கிறார்கள். இதை தூரத்திலிருந்து பார்த்த கிராமவாசி ஒருவர், ஊர் மக்களை திரட்டி சம்பவ இடத்துக்கு விரைந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டிருக்கிறார்.

இது தொடர்பாக மந்தாசா சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார், “பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து எங்களுக்கு புகார் வந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்ய முந்தைய வழக்குகளை சரிபார்த்து வருகிறோம். கடந்த ஏழு ஆண்டுகளாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் எதிராக பல வழக்குகளை பதிவுசெய்திருக்கின்றனர். அவற்றில் சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. எனவே, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சட்ட ஆலோசனை நடத்தி வருகிறோம். குற்றம்சாட்டப்பட்டவர்களை நாங்கள் விடுவிக்க மாட்டோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.