தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் சில தசாப்தங்களுக்கு முன்பு காணும் இடமெல்லாம் நெற்பயிர்கள் தலைசாய்த்து வரவேற்கும். நம் முகம் பார்க்கும் அளவுக்குத் தூய நீரோடும் நீர் நிலைகள் நிறைந்திருக்கும். தாமரை அல்லி மலர்களைப் பறிக்கக் காத்திருக்கும் குழந்தைகள் என ரம்மியமான காட்சிகள் அந்தப் பகுதியில் நிறைந்திருந்தன. ஆனால் கால ஓட்டத்தில் எல்லாம் மாறிப் போயின. ஆனாலும் இன்றும் தஞ்சையில் அந்த இயற்கை எழில் கொஞ்சம் மிச்சமிருக்கிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கியமான தாலுகா பட்டுக்கோட்டை. தஞ்சை மண் நெற்பயிர்களை மட்டும் அறுவடை செய்யவில்லை. சிறந்த கவிஞர்களையும், செயற்பாட்டாளர்களையும் அறுவடை செய்திருக்கிறது. அவர்களில் முக்கியமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

கல்யாணசுந்தரம் பட்டுக்கோட்டை வட்டம் செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் 1930-ம் ஆண்டு பிறந்தார். பல கலைஞர்களைப் போலவே வறுமை இவரையும் விட்டு வைக்கவில்லை. வறுமையின் காரணமாக, கிடைக்கும் தொழிலை எல்லாம் செய்து வந்த கல்யாணசுந்தரம் தன் நண்பர்களுடன் விவசாயச் சங்கத்தைத் தஞ்சையில் கட்டியெழுப்பினார். கலை மீது கொண்டிருந்த அவரது ஆர்வம் அவரை சென்னைக்கு வரவைத்தது. 29 ஆண்டுகளே வாழ்ந்த கவிஞர், தன் கவிதைகள் மூலம் நூற்றாண்டுகளைக் கடந்த பகுத்தறிவு, சமத்துவக் கருத்துகளை விதைத்தவர்.

“தேனாறு பாயுது செங்கதிரும் சாயுது

ஆனாலும் மக்கள் வயிறு காயுது”

என்ற இரண்டே வரிகளில் உழைக்கும் மக்களின் பசியை, வறுமையை உலகுக்கு உணர்த்தியவர். 19வது வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கியவர் 1955-ம் ஆண்டு ‘படித்த பெண்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடல்கள் எழுதத் தொடங்கினார். தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களான சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் இவரது பல பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தன் வாழ்நாளில் 180க்கும் மேலான பாடல்களை எழுதியுள்ளார். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், தன் அரசியல் நாற்காலியின் நான்காவது கால் ‘பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

‘ஆளுக்கொரு வீடு’ படத்தில் இடம்பெற்ற

“செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்

திறமைதான் நம் செல்வம்

கையும் காலுந்தான் உதவி – கொண்ட

கடமைதான் நம் பதவி.

பயிரை வளர்த்தால் பலனாகும் – அது

உயிரைக் காக்கும் உணவாகும்.

வெயிலே நமக்குத் துணையாகும் – இந்த

வேர்வைகள் எல்லாம் விதையாகும்.

தினம் வேலையுண்டு குல மானமுண்டு

வருங்காலமுண்டு அதை நம்பிடுவோம்.”

என்னும் இவரது பாடல் உழைப்பின் முக்கியத்துவத்தையும், வேளாண்மையின் பண்புகளையும் எடுத்துரைக்கிறது.

பட்டுக்கோட்டையார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மீது அதீத பற்றுடையவர். கௌரவம்மாள் – பட்டுக்கோட்டையாரின் திருமணம் பாரதிதாசன் தலைமையில்தான் நடந்தது. பட்டுக்கோட்டையார் தன் கவிதைகள் எழுதுவதற்கு முன்பு ‘பாரதிதாசன் வாழ்க’ என்று எழுதிவிட்டுதான் ஆரம்பிப்பாராம். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் தன் மனைவிக்கு எழுதும் கடிதங்களிலும் இந்த நடைமுறையை கடைப்பிடித்தார். கோயம்புத்தூர் தொழிற்சங்கத்தால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மக்கள் கவிஞர் என்றழைக்கப்பட்டார். பொதுவுடைமை எழுத்துகளைத் தாண்டி தன் எழுத்துகளால் குழந்தைகளையும் சிந்திக்க வைத்தவர். கிராமப்புறங்களில், ‘வேப்ப மரத்தில பேயிருக்கு, புளிய மரத்தில பேயிருக்கு’ எனக் குழந்தைகளைப் பெரியவர்கள் பயமுறுத்துவர். இதனை “சின்னப்பயலே சின்னப்பயலே” பாடல் மூலம் அழகாக விவரிக்கிறார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

“வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு

ஆடுதுன்னு விளையாடப் போகும்போது

சொல்லி வைப்பாங்க – உன் வீரத்தைக்

கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க

வேலையற்ற வீணர்களின் மூளையற்ற

வார்த்தைகளை வேடிக்கையாக கூட

நம்பிவிடாதே – நீ வீட்டுக்குள்ளே இருந்து

வெம்பி விடாதே!”

என்று குழந்தைகளிடத்தில் பகுத்தறிவையும், தைரியத்தையும் விதைத்தவர். இவரது பாடல்கள் நாட்டுபுறத்தன்மையுடையது. காதலைக் கண்ணியமாக தன் கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர்.

“வளர்ந்து வரும் உலகத்துக்கே நீ வலது

கையடா – தனியுடைமைக் கொடுமைகள்

தீர தொண்டு செய்யடா – தானாய் எல்லாம்

மாறும் என்பது பழைய பொய்யடா!”

என்று தனியுடைமை கொள்கைக்கு எதிராகக் குரல் கொடுத்த கல்யாண சுந்தரனாரின் நினைவு நாள் இன்று (அக்டோபர் 8). பட்டுக்கோட்டையார் பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டன. இவருக்குத் தமிழக அரசு பாவேந்தர் பட்டம் அளித்துச் சிறப்பித்துள்ளது. அவர் நீண்ட காலம் இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை நிகழ்த்தியிருப்பார். அவரின் நினைவு தினத்தில் அவரை நினைவு கூர்வோம்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்தவற்றை கமென்ட்டில் தெரிவியுங்கள்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.