பா.ஜ.க தேசியத் தலைவரின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 24 ஏக்கரில் 1,470 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த அதிநவீன மருத்துவமனையைப் பிரதமர் மோடி அக்டோபர் 5-ம் தேதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்த மருத்துவமனையின் பணிகள் தீவிரமாக்கப்பட்டு தற்போது திறக்கப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி, நட்டா

அதே நேரம் கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் பொட்டல் காடாகவே இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை வந்த பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95% நிறைவடைந்துவிட்டன” என்று கூறினார். அதையடுத்து, “இவர் தனது சொந்த மாநிலத்தில் கட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள் 95% முடிந்திருப்பதாகக் கூறுவதற்குப் பதிலாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்திருப்பதாகக் கூறுகிறார்” என கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன் உள்ளிட்ட சிலர் விமர்சித்தனர்.

பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய போது

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான இடம் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தோப்பூரில் தேர்வு செய்யப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், இதற்காக விசாலமான சாலை மற்றும் சுற்றுச்சுவரைத் தவிர வேறு கட்டுமானப் பணிகள் எதுவும் இன்னும் தொடங்கவில்லை.

டாக்டர் சரவணன்

இது தொடர்பாக பா.ஜ.க முன்னாள் நிர்வாகி மருத்துவர் சரவணன், “பா.ஜ.க தேசியத் தலைவர் ஊரில் எல்லாம் திறந்துவிட்டார்கள். ஆனால், இங்கு ரூ.5 கோடி ஒதுக்கீட்டில் சுற்றுச்சுவரை தவிர வேறு எந்தப் பணிகளும் நடக்காமல் ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சியிலேயே இடம் எல்லாம் ஒதுக்கப்பட்டிருந்தாலும் கட்டுமானப் பணிகள் ஏதும் நடக்கவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜ.க கால் ஊன்ற முடியாத நிலையில், எய்ம்ஸ் விவகாரத்தில் ஓரவஞ்சகமாக செயல்படுகிறார்கள். எய்ம்ஸ் என்பது மத்திய அரசின் முக்கியமான திட்டம். எனவே மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருக்குமானால் விரைவில் கட்டி முடிக்க முன் வர வேண்டும்” என்றார்.

புரட்சி கவிதாசன்

பா.ஜ.க தரப்பில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசனிடம் பேசினோம். “எய்ம்ஸ் தமிழ்நாட்டுக்கு வராததற்குக் காரணம் இங்கிருக்கும் மருத்துவ மாஃபியாக்கள்தான். சென்னைக்கு அடுத்து மருத்துவ வியாபாரம் மதுரையிலும் அதிகமாக இருக்கிறது. எய்ம்ஸ் அங்கு வந்தால் நஷ்டமாகும் என்பதும் ஒரு காரணமாக இருக்கிறது. அடுத்து மத்திய அரசு நிதி ஒதுக்கிய பின்பும் ஏன் இவர்கள் தாமதமாக்குகிறார்கள். ஒரு செங்கல் வைத்துக் கொண்டு ஊர் ஊராக வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ‘ஏன் எய்ம்ஸ் அமைப்பதற்குத் தாமதமாகிறது’ என்று கேட்க வேண்டியதுதானே. ஆளும் தி.மு.க அரசு மத்திய, மாநில அரசுகள் என்னனென்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்று வெள்ளை அறிக்கை கொடுக்கட்டும். அதில் யார் பக்கம் தவறு இருக்கிறது என்பது வெளிச்சமாகும். எய்ம்ஸ் குறித்தான விவாதங்களுக்கு பா.ஜ.க என்றும் தயாராகத்தான் இருக்கிறது. கடலுக்குள் கருணாநிதி பேனா வைக்க வேண்டும் என்றுதான் இருக்கிறார்களே தவிர மக்களுக்கான நலத்திட்டங்கள் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை. மாநில அரசு தரப்பில் ஒத்துழைப்பு இல்லாததே எய்ம்ஸ் தாமதத்துக்குக் காரணம். கடந்த ஆட்சியில் மாவட்டங்களுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்று 11 கல்லூரிகள் வாங்கினார்கள். எய்ம்ஸ்-ம் வாங்கினார்கள். வாங்கியதை ஏன் கொண்டுவர முன் வரவில்லை. இதுதான் திராவிட மாடலா?” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.