சென்னை, வியாசர்பாடியில் அம்பேத்கர் கலை கல்லூரி பின்புறம், அன்னை சத்தியா நகர் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகருங்காளிகாம்பாள் திருக்கோயில்.

அன்னை ஆதிசக்தியின் போர்க்கோல வடிவமான ஸ்ரீகருங்காளியை மூலத் தெய்வமாகக் கொண்டு எழுப்பப்பட்டுள்ள இத்திருத்தலத்தில் முத்தாரம்மன், மனோகரியம்மன், முத்தப்ப சுவாமிகள், குபேர கணபதி, சாஸ்தா, அனுமன், பைரவர், மதுரை வீரன் மற்றும் கருப்பசாமி என வேறு பல சந்நிதிகளும் உள்ளன. இத்திருக்கோயிலின் முக்கிய திருவிழா என்றால் அது புரட்டாசி மாத நவராத்திரி திருவிழா என்றே சொல்லலாம்.

மகிஷாசுரமர்த்தினி அவதாரம்

நவராத்திரி தொடக்க தினத்தில் கொடியேற்றத்துடன் துவங்கும் இத்திருவிழா 10 நாள்களும் வெகுசிறப்பாக நடைபெறும். பத்து நாள்களும் பத்து வித உற்சவராக மாறி காளிதேவி நகர்வலம் வந்து அருள்பாலிப்பார். அன்னை கருங்காளிகாம்பாள் நவராத்திரி முதல் நாள் ஸ்ரீ மீனாட்சி, இரண்டாம் நாள் காஞ்சி காமாட்சி, மூன்றாம் நாள் ஸ்ரீவிசாலாட்சி, நான்காம் நாள் கருமாரி அம்மன், ஐந்தாம் நாள் பகவதி அம்மன், ஆறாம் நாள் சாமுண்டி அம்மன், ஏழாம் நாள் ஸ்ரீகருங்காளி, எட்டாம் நாள் ஸ்ரீலட்சுமித் தாயார், ஒன்பதாம் நாள் சரஸ்வதி தேவி, பத்தாம் நாள் ஸ்ரீமகிஷாசுரமர்த்தினி எனப் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் செய்வார்.

தசரா திருவிழா பத்தாம் நாளில் மகிஷாசுரனை வதம் செய்யும் ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினியாக அருள் அளிக்கும் தேவிக்கு, அன்று தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடத்தப்பெறுகிறது. இந்திருவிழா வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இக்கோயிலில் பக்தர்கள் தங்கள் குறையைக் கூறி, அம்மனை வேண்டி பல்வேறு நேர்த்திகடனும் செலுத்துகிறார்கள். குறிப்பாக தங்கள் வேண்டுதல் நிறைவேறிய மக்களும், வேண்டுதல் வைத்திருப்பவர்களும் தசரா திருவிழா நடைபெறும் நாளில் அம்மன் மற்றும் பல வேடம் தரித்தும், பல்வேறு காணிக்கைகளைச் செலுத்தி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள். இது இக்கோயிலின் பிரசித்திப் பெற்ற வேண்டுதல்.

அம்மன் வேடம்

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கால் எளிமையாக நடத்தப்பட்ட திருவிழா, தற்போது தடைகள் நீங்கி, வெள்ளிவிழா ஆண்டு திருவிழாவாக இந்தாண்டு வெகுவிமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. அதன்படி இன்று (26-09-2022) தொடங்கி 10 நாள்களும் முக்கால அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.