நாட்டில் வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து ஏமாற்றும் விதமாக, வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, போலி பணி நியமன ஆணைகள் கொடுத்து பண மோசடி செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் கவனமுடன் இருப்பது அவசியமாகிறது.

வருமான வரித்துறை

இதைத் தடுக்கும் விதமாக சென்றமாதம் வருமான வரித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில்,  “வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளிக்கும் எந்தவொரு இடைத்தரகர்கள், நிறுவனம் அல்லது அமைப்புகளின் வலையிலும் விழ வேண்டாம் என்றும், மேலும் மின் அஞ்சல் மூலமாகவோ அல்லது வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவோ பெறப்படும் தவறான விளம்பரங்கள், கடிதங்கள் மூலமாக வரும் போலியான தகவல்களை நம்பி பொதுமக்கள் இறையாகி விட வேண்டாம் என எச்சரிக்கை செய்திருந்தது.

அதேபோல ‘இ – மெயில்’ மற்றும் கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் மூலமாக  வருமான வரித்துறை பெயரில் மோசடி நடைபெறுவதாக தற்போது தகவல் வந்தது. எனவே தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வருமான வரித் துறை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைன் மோசடி

தங்களின் கணக்கிலிருந்து ஏதாவது தொகையோ, வரியோ அல்லது வேறு ஏதாவது ஒரு வகையில் பணம் செலுத்துவது குறித்து, இ-மெயில், தொலைபேசி அழைப்புகள் வந்தால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வருமான வரித் துறையின் அதிகாரபூர்வ கடித பரிமாற்றம் அனைத்தும், ‘DIN’ எனும் ஆவண அடையாள எண்ணை கொண்டிருக்கும். இது, அதிகாரபூர்வ இ – மெயில் முகவரி வாயிலாக மட்டுமே அனுப்பப்படும்.

வேறு மெயில் வந்தால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித் துறையின் www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில் உள்ள, வருமான வரித் துறை இ – மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம். எனவே, மோசடி நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்துள்ளது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.