உலக இதய தினத்தையொட்டி ‘Restart heart foundation’ ஐத் தொடங்கி மாரடைப்பால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கான செயலில் இறங்குகிறது காவேரி மருத்துவமனை. இதன் தொடக்கமாக சென்னையின் சில இடங்களில், மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி அளிக்கும்  Automated external defibrillator (AED) சிகிச்சைக்கான இயந்திரத்தை நிறுவவிருக்கிறது. கையில் எடுத்துச் செல்கிற அளவுள்ள defibrillator இயந்திரத்தைக் கொண்டு மாரடைப்பு ஏற்பட்டவருக்கு பொதுமக்களே முதலுதவி மேற்கொள்ள முடியும். இது குறித்த பரவலான விழிப்புணர்வைக் கொண்டு செல்கையில் மாரடைப்பால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் என்கின்றனர். இது தொடர்பாக காவேரி மருத்துவமனையின் நிறுவனரும், செயல் அலுவலருமான மருத்துவர் அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில்… 

“நாங்கள் தொடங்கியிருக்கும் இந்த ‘Restart heart foundation’ மூலம் சென்னையில் செம்மொழிப் பூங்கா, டைடல் பார்க் மற்றும் விவேகானந்தர் இல்லம் ஆகிய இடங்களில் இந்த Automated external defibrillator (AED) இயந்திரங்களை அமைக்கவிருக்கிறோம். இதனை எப்படிக் கையாள்வது என்கிற பயிற்சியையும் பொதுமக்களுக்கு வழங்கவிருக்கிறோம். இது தொடக்கம்தான். படிப்படியாக தமிழ்நாடு முழுவதிலும் இந்த இயந்திரத்தை பொது இடங்களில் நிறுவ வேண்டும் என்கிற திட்டத்தைக் கொண்டிருக்கிறோம்.

பொதுவாகவே மாரடைப்பு (cardiac arrest) ஏற்படுகிறவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைக்கப்பெற வேண்டும். அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னதாகவே அளிக்கப்பட வேண்டிய முதலுதவிக்கானதுதான் இந்த AED. இந்த இயந்திரத்தின் மூலம் இதயத்துக்கு அனுப்பப்படுகிற மின்னதிர்வால் இதயத் துடிப்பு சீராகும். இதன் மூலம் அவர்களை மரணம் ஏற்படாத வகையில் தற்காத்து மருத்துவமனைக்குக் கொண்டு வர இயலும்.

நம் நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் மாரடைப்பின் காரணமாக சராசரியாக 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவிகிதமாக மட்டுமே உள்ளது. நின்று போன இதயத்துடிப்பை உரிய நேரத்தில் மீண்டும் இயங்க வைப்பதன் மூலம் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். ஆகவேதான், இத்திட்டத்தை தொடங்கியிருக்கிறோம். கூடிய விரைவில் தமிழ்நாடு முழுவதும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள முக்கியப் பகுதிகளில் இந்த இயந்திரம் நிறுவப்படும்.

இதனை எவ்விதம் கையாள்வது என்பதை வீடியோ மூலமும், பொதுமக்களுக்கு நேரடியாகவும் விளக்கவிருக்கிறோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் 10 ஆயிரம் பேருக்கு இப்பயிற்சியினை வழங்கி அதற்கான சான்றிதழையும் வழங்கவிருக்கிறோம். 50 தனியார் நிறுவனங்கள் இந்தச் செயல்திட்டத்துக்கு தங்களுடைய பங்களிப்பை அளிப்பதாகத் தெரிவித்திருக்கின்றன. பொதுமக்களாகிய அனைவரும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டு மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க முன் வரவேண்டும்” என்கிறார் அரவிந்தன் செல்வராஜ். 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.