தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத்தின் தாத்தாவும், பிரபல இயக்குநரும், வானொலி விளம்பரங்கள் மூலம் புகழ்பெற்றவருமான எஸ்.வி. ரமணன் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

1930 முதல் 1940-கள் வரை ‘பவளக்கொடி’, ‘நவீன சதாரம்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், திரைக்கதையாசிரியராகவும் வலம் வந்தவர் கிருஷ்ணசாமி சுப்ரமணியம் என்கிற கே சுப்ரமணியம். இவரின் மகன் தான் எஸ். வி. ரமணன். நாடகக் கலைஞரான இவர், அகில இந்திய வானொலியில் வரும் விளம்பரங்களுக்கு தனது தனித்துவமான குரல் கொடுத்ததன் வாயிலாக மிகவும் பிரபலமானார். குறிப்பாக 80 மற்றும் 90 காலக்கட்டங்களில் இவரது குரலில் வெளிவந்த ரத்னா ஃபேன் ஹவுஸ் மற்றும் ரஞ்சனா ஸ்டோர் விளம்பரங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தூர்தர்ஷனில் சில நாடகங்களையும், ஆவணப் படங்களையும் இயக்கியுள்ளார். மேலும் கடந்த 1983-ம் ஆண்டு ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சுஹாசினி நடிப்பில் வெளிவந்த ‘உருவங்கள் மாறலாம்’ படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்தது எஸ்.வி. ரமணன் தான். இந்தப் படத்தில் மறைந்த நடிகர்களான சிவாஜி கணேசன், ஜெய் சங்கர் மற்றும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பார்கள். இவரின் சகோதரி தான் பிரபல பரத நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம். அதேபோல் இவரின் சகோதரர் தான் பிரபல இசைக்கலைஞர் ‘அபஸ்வரம்’ எஸ் ராம்ஜி.

image

எஸ். வி. ரமணன் தனது மனைவி பாமா ரமணனுடன் வாழ்ந்து வந்தார். இவருக்கு லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் லக்ஷமியின் மகன் தான் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக உள்ள அனிருத். இதேபோல் மற்றொரு மகளான சரஸ்வதியின் மகன்தான் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் தம்பியாக நடித்த ரிஷிகேஷ் ஆவார். இந்நிலையில், வயது மூப்பு காரணமாக சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தனது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.