புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார்கோவில் அருகே லெக்கணாப்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏழாம் வகுப்பு படித்துவருபவர் சசிகலா. இவரின் தந்தை ஆறுமுகம், 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதையடுத்து, கடந்த 10 ஆண்டுகளாக கணவனை இழந்த சசிகலாவின் தாய் மாரியாயி சசிகலாவையும், அவரின் தம்பியையும் கூலி வேலை செய்து பல்வேறு சிரமத்துக்கிடையில் வளர்த்துவருகிறார்.

ஆசிரியர்கள்

இந்த நிலையில்தான் லெக்கணாப்பட்டி அரசுப் பள்ளி ஆசிரியர்கள், இந்தக் குடும்பத்தின் வறுமையைப் போக்கவும், வாழ்வாதார உதவியும் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, சசிகலாவின் தாயைப் பள்ளிக்கு வரவைத்த ஆசிரியர்கள், அவர் கையில் ஐந்து ஆட்டுக்குட்டிகளைக் கொடுத்து நெகிழ வைத்தனர். மிகுந்த உற்சாகத்துடன் ஆட்டுக்குட்டிகளைப் பெற்றுக்கொண்ட மாரியாயி ஆசிரியர்களுக்கும், மாணவிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

பள்ளித் தலைமையாசிரியர் ஆண்டனியிடம் பேசினோம்,

”எங்க பள்ளியில படிக்கிற பிள்ளைகளும், ஒரு வகையில எங்க பிள்ளைங்கதான். படிப்பைத் தாண்டி பிள்ளைகளுக்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கணும்னு, ஆசிரியர்கள் எல்லாரும் ரொம்பவே ஆர்வமா இருப்போம். எங்க பள்ளியில கொஞ்ச வருஷத்துக்கு முன்னால, ’தருவோம், பெறுவோம்’ங்கிற திட்டத்தைத் தொடங்கினோம். அதேபோல, இளம் நெஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக ஒவ்வொரு வருஷமும், வறுமையில் வாடும் மாணவ, மாணவியருக்கு உதவி செய்வது உள்ளிட்ட சில திட்டங்களைச் செஞ்சிட்டு வர்றோம்.

அந்த வகையிலதான், இந்த வருஷம் எங்க பள்ளியில படிக்கிற சசிகலா குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறத கேள்விப்பட்டு, ஆசிரியர்கள், மாணவர்கள் எல்லாரும் சேர்ந்து உதவி பண்ண முடிவு செஞ்சோம். இதுல மாணவர்களோட சொற்பத் தொகை, ஆசிரியர்களோட பணம் எல்லாத்தையும் சேர்த்து அஞ்சு ஆடுகளை வாங்கி வந்து அவங்க கையில கொடுத்தோம். அவங்களோட முகத்துல அவ்வளவு சந்தோஷம். அதைப் பார்த்து எங்களுக்கும் அளவுகடந்த சந்தோஷம். இந்தத் திட்டத்துல, தொடர்ந்து எங்க பிள்ளைங்களுக்கு உதவணும்” என்கிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.