வேலூர் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை கே.கே.முதலி தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். 52 வயதாகும் இவர், நேதாஜி சௌக் பகுதியிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் கேஷியராகப் பணிபுரிந்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் ஹோட்டலைத் திறந்து வைத்திருந்திருக்கின்றனர். அப்போது காலை 8 மணியளவில், குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் மதுபோதையில் தள்ளாடியபடி உணவு சாப்பிட வந்திருக்கிறார். பக்கத்து டேபிளில் அமர்ந்திருந்த வாடிக்கையாளர்கள் `பூரி’ சாப்பிட்டதைப் பார்த்த அவர், தனக்கும் சூடாகப் பூரி கொண்டுவருமாறு ஆர்டர் செய்தார். ஹோட்டல் ஊழியர் கொண்டுவந்து கொடுத்த பூரியை சாப்பிட்ட சந்திரசேகரின் முகம் இறுக்கமானது. வாயில் வைத்த பூரியை துப்பிவிட்டு, `என்னது இது… பூரி மாதிரியே இல்லை’ என்று வாக்குவாதம் செய்திருக்கிறார்.

படுகாயமடைந்த ஊழியர்

சந்திரசேகரை சமாதானம் செய்ய முடியாமல் கடை ஊழியர்கள் திணறியபோது, கல்லாவில் அமர்ந்திருந்த கேஷியர் தனசேகரன் எழுந்துவந்து, அவரை வெளியே செல்லும்படி எச்சரித்தார். அதனால் கடுப்படைந்த அவர், இடுப்பில் சொருகி வைத்திருந்த பீர் பாட்டிலை எடுத்து, டேபிளில் அடித்து உடைத்தார். பின்னர், கூர்மையான பாட்டிலால் கேஷியர் தனசேகரனின் முகத்தில் குத்திக் கிழித்தார். தாக்குதலில் பலத்த காயமடைந்த தனசேகரன் சுருண்டு விழுந்து கதறினார். இதையடுத்து, சந்திரசேகர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அங்கிருந்தவர்கள் கேஷியர் தனசேகரனை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவர் முகத்தில் 7 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக, குடியாத்தம் நகரப் போலீஸார் வழக்கு பதிவு செய்து, போதையில் அட்டூழியம் செய்த சந்திரசேகரை கைது செய்தனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.