தமிழகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம், உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 177 கவுன்சிலர்களும், வீரபாண்டி, பழனிசெட்டிப்பட்டி, தென்கரை உள்ளிட்ட 22 பேரூராட்சிகளில் 336 கவுன்சிலர்களும் தேர்வு செய்யப்படவிருக்கின்றனர். இரு தினங்களுக்கு முன்பு அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்வதைத் தொடங்கிவிட்டனர்.

மனுத்தாக்கல்

வேட்பு மனுத்தாக்கல் செய்ய இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில், இன்று தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் தி.மு.க சார்பில் போட்டியிடும் 14 தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் 3-வது வார்டில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர்கள் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் சுமார் 300 பேர் ஊர்வலமாகச் சென்றனர். அவர்கள் முன்னிலையில் சேர்மன் பதவிக்கு போட்டியிடும் கீதா, வீரபாண்டி பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அதேபோல தி.மு.க சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்களும் கூட்டணிக் கட்சியான ம.தி.மு.க வேட்பாளர் ஒருவரும் மனுத்தாக்கல் செய்தனர்.
தி.மு.க தலைமையிடம் இருந்து வேட்பாளர் பட்டியல் வருவதற்கு முன்பே, தேர்தல் விதிமுறைகளை மீறி ஊர்வலமாகச் சென்று தி.மு.க வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்யத் தொடங்கிவிட்டனர் என அ.தி.மு.க-வினர் விமர்சித்து வருகின்றனர்.

வேட்பாளர்கள்

இதேபோல, திண்டுக்கல் மாவட்டம் சேவுகம்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் இருக்கின்றன. இதில் 8 பெண், 7 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட இருக்கின்றனர். தி.மு.க சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகவில்லை. இந்த நிலையில், இன்று சேவுகம்பட்டி தி.மு.க வேட்பாளர்கள் வனிதா தங்கராஜன், தனபால், கர்ணன் உள்ளிட்ட 15 பேர் தி.மு.க ஒன்றியச் செயலாளர் கே.பி.முருகன் முன்னிலையில் பேரூராட்சி அலுவலகத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சேவுகம்பட்டி பேரூராட்சிக்கு மட்டும் தி.மு.க-வினர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து சேவும்பட்டி பேரூராட்சி தி.மு.க-வினரிடம் பேசினோம். “எங்கள் பேரூராட்சியில் 15 வார்டுகளில் போட்டியிட தி.மு.க சார்பில் 15 பேர் மட்டுமே விருப்ப மனுத்தாக்கல் செய்தோம். அதையடுத்து, அமைச்சர், மாவட்டச் செயலாளர் ஆகியோர் எங்களைத் தேர்வு செய்து விட்டனர். அதனால்தான், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் முன்பே வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டோம்” என்றனர்.

Also Read: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கம்பத்தில் சீட்டுக்கு மல்லுக்கட்டும் திமுக நகரச் செயலாளர்கள்! 

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.