கேரள மாநிலம் மலப்புறம் மாவட்ட ஆட்சியர் ராணி சோயாமயி-யின் உண்மைக் கதை என ஒரு பதிவு கடந்த சில நாட்களாக மலையாளம், தமிழ் போன்ற மொழிகளில் சமூக வலைத்தளங்களில் வலம்வருகிறது. நெஞ்சை உருக்கும் அந்த பதிவை பலர் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பகிரவும் செய்கிறார்கள். அந்த பதிவு இதுதான்: “மலப்புறம் மாவட்ட கலெக்டரான சோயாமயி கல்லூரியில் மாணவிகளோடு உரையாடுகிறார். கலெக்டர் கையில் வாட்ச் மட்டுமே கட்டியிருக்கிறார். ஆபரணங்கள் அணியவில்லை, முகத்தில் மேக்கப் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் பவுடர் கூட போடவில்லை. ஏன் மேக்கப் போடவில்லை என மாணவிகள் கேட்டதும் அவரது முகம் வெளிறியது. பின்னர் தனது கதையைச் சொல்கிறார், ‘நான் ஜார்கண்டில் பழங்குடி குடும்பத்தில் பிறந்தவள். பசித்த வயிற்றோடு பல இரவுகளைக் கழித்திருக்கிறேன். என் தந்தையும், தாயும் சுரங்கத்திற்குள் சிறு துவாரங்களில் படிந்திருக்கும் மைக்கா உள்ளிட்ட வேதிப்பொருள்களை தங்கள் கைகளால் வாருவார்கள். நாள் முழுக்க வாரி எடுத்தால் ஒருநாள் பட்டினி இன்றி சாப்பிடலாம். அப்படிக் கிடைக்கும் உணவைத்தான் சாப்பிட்டு வளர்ந்தேன். வறுமை காரணமாக என்னையும் சுரங்கத்தில் மைக்கா வார அனுப்பினார்கள். எனக்கு குமட்டலும் வாந்தியும் வந்தது. அப்போதுதான் ஒருநாள் என் தாயும், தந்தையும் சகோதரிகளும் சுரங்கத்தில் மண் இடிந்து விழுந்ததால் அதில் சிக்கி இறந்துவிட்டனர்.

மூந்நு பெண்ணுங்ஙள் என்ற மலையாள கதை புத்தகம்

நான் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் சேர்ந்து படித்து கலெக்டர் ஆனேன். பிஞ்சுக்குழந்தைகள் தோண்டி தங்கள் கைகளால் எடுத்துவந்த அந்த மைக்கா பொருள்களில் தான் அழகு சாதனப் பொருள்கள் செய்கிறார்கள். உங்களுக்கு நான் அழகு சாதனப் பொருள்கள் பயன்படுத்தாதது தெரிகிறது. ஆனால் எனக்கோ அழகு சாதனப் பொருள்களைப் பார்த்தால் அந்தக் குழந்தைகளின் முகம் தெரிகிறது’ என்கிறார். கலெக்டர் பேச்சைக் கேட்ட மாணவிகள் கண்ணீர்மல்க எழுந்துநின்று கைதட்டினர்” என அந்த பதிவில் வருகிறது.

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் ராணி சோயாமயி என ஒரு கலெக்டர் இருக்கிறாரா என ஆய்வு செய்தோம். இப்போதும் இல்லை, இதற்கு முன்பும் இருந்ததில்லை. கேரளாவின் வேறு மாவட்டங்களிலும் அப்படி ஒரு ஆட்சியர் இருந்ததாக வரலாறு இல்லை. இந்த நிலையில்தான் ராணி சோயாமயி பதிவு பற்றி மலையாள எழுத்தாளர் ஹக்கீம் மொறயூர் தன்னிலை விளக்கம் அளித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “மூந்நு பெண்ணுங்ஙள் (மூன்று பெண்கள்) என்ற சிறுகதை தொகுப்பில் நான் எழுதிய ‘திளங்ஙுந்ந முகங்ஙள்’ (ஒளிரும் முகங்கள்) என்ற கதையில் வரும் ஒரு பகுதியை சிலர் வெவ்வேறு புகைப்படங்களுடன் எடுத்து பதிவு செய்கிறார்கள்.

எழுத்தாளர் ஹக்கீம் மொறயூர்

எனது கதையில் வரும் மலப்புறம் கலெக்டர் ராணி சோயாமயி என்ற கதாபாத்திரத்தை சிலர் உண்மை என நம்பிவிட்டார்கள் என நினைக்கிறேன். எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு கதையை எழுத்தாளன் உருவாக்குகிறான். எனது கதையை தவறாக பயன்படுத்துவதை கண்டு எனக்கு வருத்தமாக உள்ளது. யாரோ ஒரு பெண்ணின் போட்டோவை போட்டு இந்த கதையை பதிவேற்றம் செய்பவர்களால் வரும் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பேற்க முடியாது. அவர்களுடன் வாதிட நேரமும் இல்லை, அதற்கான திறமையும் இல்லை. எப்படியும் வாழ்ந்துவிட்டு போங்கள், ஆனால் வயிற்றில் அடிக்காதீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் முன்பின் யோசிக்காமல் சில காப்பி பேஸ்டுகளால் பொய் செய்தி பரப்பப்படுவதுடன், சிலர் பாதிக்கப்படுவதும் உண்மைதான். எந்த பதிவாக இருந்தாலும் கொஞ்சம் கண்பாம் பண்ணிவிட்டு பதியுங்கள் நெட்டிசன்களே.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.