ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (60). இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் காசாளர் கருப்பையா என்பவரிடம் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூன்று லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார்.

கொடுத்தப் பணத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து உடனே கட்டுமாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளர் கருப்பையா பணத்தைக் கேட்டு அவதூறாக பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தொடர்ச்சியாக பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துவந்ததால், மனமுடைந்த தங்கவேல் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார். அதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவரை மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்கு மாற்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

இதையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த தங்கவேலுவை மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே இளஞ்செம்பூர் போலீஸார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி காசாளர் கருப்பையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தங்கவேல்

தங்கவேலு தான் இறப்பதற்கு முன்னதாக தனது வாட்ஸ் அப்பில் தன் இறப்புக்கான காரணம் குறித்து வீடியோ பதிவு செய்திருக்கிறார். அந்த வீடியோவில், “நான் வாங்கிய பணத்திற்கு தற்போது வரை அசல் பணம் 3 லட்சம் ரூபாய்க்கும் மேலாகவும், 3.50 லட்சம் ரூபாய் வட்டியாகவும் செலுத்தியிருக்கிறேன். ஆனால், கருப்பையா என்னிடம் மூன்று லட்சத்திற்கு பதிலாக 6 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு, என்னை ஏமாற்றி கையொப்பத்தைப் பெற்றுக்கொண்டார். எனவே, இந்த வீடியோ குறித்து தமிழக முதல்வர், போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு தெரிவிக்க வேண்டும்” எனப் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, “இறந்த தங்கவேல், கருப்பையாவிடம் குறைந்த வட்டிக்கு பணத்தைப் பெற்று அதே பணத்தை பரமக்குடியில் சிலரிடம் கூடுதல் வட்டிக்கு பணத்தை கொடுத்து வந்துள்ளார். தங்கவேல் கொடுத்த நபர்கள் பணத்தை கொடுக்காமல் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். பரமக்குடியில் கூடுதல் வட்டிக்கு கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்க முடியாத நபர்கள் சிலர் வாங்கிய பணத்தைக் கொடுக்காமல் தப்பிவிட்டனர். இந்த நிலையில், கருப்பையா தனது பணத்தை உடனடியாக கேட்டதால் திரும்ப கொடுக்க முடியாத தங்கவேல் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலை செய்துவிட்டார்” என்றனர்.

Also Read: தஞ்சை: கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி அழுத்தம்? தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி – போலீஸ் விசாரணை

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.