30 ஆண்டுக்கால இடதுசாரி கோட்டையை தகர்த்தவர்; போராட்டக் குணம் படைத்த பெண் தலைவர்; மேற்கு வங்கத்தின் அசைக்க முடியாத அரசியல் சக்தி; இந்தியாவில் தற்போதுள்ள ஒரே பெண் முதலமைச்சர்… எனப் பல பெருமைகளுக்கு சொந்தக்காரரான மம்தா பானர்ஜி, இன்று தனது 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மம்தா பானர்ஜி யார்? அரசியல் களத்தில் செல்வாக்கு மிக்கவராக அவர் உருவெடுத்தது எப்படி? கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

வெள்ளை காட்டன் புடவையும் வெள்ளை நிற ரப்பர் செருப்பும்தான் மம்தா பானர்ஜியின் அடையாளங்கள். அரசியல் வாழ்வில் தன்னை எதிர்ப்பவர் எவ்வளவு பெரிய சக்தியாக இருந்தாலும் சிறிதும் அஞ்சாமல் எதிர்த்து நின்று போராடுபவர் மம்தா.

image

மேற்கு வங்கத்தில், ஜனவரி 5, 1955 அன்று ஓர் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மம்தா பானர்ஜி, சிறு வயது முதலே வறுமையின் பிடியில்தான் வளர்ந்தார். தனது அரசியல் வாழ்க்கையை 15 வயதிலேயே தொடங்கிய மம்தா, அப்போதே காங்கிரஸ் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். அவரது துணிச்சலான பேச்சு தலைமையை கவரவே, விரைவிலேயே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பதவிகள் அவரைத் தேடி வந்தன.

1970-களில் காங்கிரஸ் கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய மம்தா பானர்ஜி, 1976-ம் ஆண்டு மாநில மகளிர் அணிச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றார். 1984-ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சோம்நாத் சாட்டர்ஜியைத் தோற்கடித்து முதன்முறையாக மம்தா பானர்ஜி நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார். 1989-ம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்றபோது தோல்வியைத் தழுவியபோதிலும், 1991-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

image

மேற்கு வங்கத்தில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மம்தா பானர்ஜிக்கு காங்கிரஸ் கட்சியில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காததால் அதிருப்தியடைந்தார் மம்தா. தொடர்ந்து காங்கிரசில் இருந்தால் தனக்கு எதிர்காலம் இல்லை என்று நினைத்த மம்தா, 1997-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி, அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

1998, 1999-ம் ஆண்டுகளில் நடந்த மக்களவைத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் மிகவும் சொற்ப இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. ஆனால் 2001-ம் ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 60 இடங்களில் வெற்றி பெற்றது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு , மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வளர்ந்தது.

1999-ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, அதில் மம்தா பானர்ஜி இணைந்து ரயில்வே அமைச்சர் ஆனார். அதன் பிறகு 2003-2004, 2009-2011-ஆம் ஆண்டுகளில் மத்திய அமைச்சராக இருந்தார். தேசிய அரசியலில் கவனம் செலுத்தினாலும் தனக்கான அரசியல் களம் மேற்கு வங்கம்தான் என்பதை மம்தா உணர்ந்தார்.

image

2006-ம் ஆண்டு டிசம்பரில் நந்திகிராமில் கார் தொழிற்சாலைகளுக்கு விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 25 நாள் போராட்டத்தில் குதித்தார் மம்தா. இப்போராட்டம்தான் அவரை மாநிலம் முழுக்க மக்களின் கவனத்தை ஈர்க்க வைத்தது. தொடர்ச்சியான போராட்டம் காரணமாக கார் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை மாநில அரசு கைவிட்டது. இதனால் மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் அரசியல் செல்வாக்கு மேலும் அதிகரித்தது.

2011-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் அரசுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. உலகிலேயே அதிக காலம் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை இறக்கிவிட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தார் மம்தா.

image

மேற்குவங்கத்தில் தொடர்ந்து 3-வது முறையாக முதலமைச்சர் பதவியில் இருக்கிறார் மம்தா. ஆனால் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் வாழ்வா, சாவா என்ற சவாலை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. அத்தேர்தலில் மம்தா ஓர் சறுக்கலையும் எதிர்கொண்டிருந்தார். தேர்தலில் கட்சிக்கு ஆட்சியமைக்க தனிப்பெரும்பான்மை கிடைத்தபோதிலும், தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வி அடைந்தார் மம்தா. எதிர்கட்சிகளே எதிர்பார்த்திராத இத்தோல்வியை கண்டு பலருக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியது. தோல்வி அடைந்தாலும் முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார் மம்தா.

முதலமைச்சர் பதவியில் நீடிக்க வேண்டுமானால், 6 மாத காலத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.ஆக வேண்டிய கட்டாயத்தில், பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் நின்று 58,835 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் மம்தா பானர்ஜி. இந்தியாவில் தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே பெண் முதலமைச்சராக ஆட்சி நடத்தி வருகிறார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.