மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் வகையில், கையகப்படுத்திய உத்தரவுகளை ரத்து செய்ததை எதிர்த்து அதிமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம், தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சேஷசாயி, கடந்த நவம்பர் 24ம் தேதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து  ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், மூன்றாம் நபர் மேல் முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய் மற்றும் சத்திகுமார் அமர்வு, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தது. 
image
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், சத்திகுமார் சுகுமார குரூப், ‘நிலம் கையகபடுத்ததப்பட்டதில் நடைமுறை தவறுகள் உள்ளதா, பொதுப் பயன்பாடு உள்ளதா, அப்படி பொதுப் பயன்பாடு இருந்தால் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மீண்டும் தொடர அரசுக்கு  உத்தரவிடமுடியுமா’ என்ற கேள்விகள் எழுப்பியதாக கூறி அவற்றுற்கு தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளனர். அதன்படி நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை ஆய்வு செய்ததில், ‘தனியார் சொத்து என்ற முறையில் அதன் உரிமையாளரின் கருத்தை கவனத்தில் கொள்ளாமல், அவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ளாமல் வேதா நிலையத்தை கையகப்படுத்தியதில் தவறுகள் நடந்துள்ளது என்ற தனி நீதிபதி உத்தரவில் தவறில்லை’ என நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் நிலம் கையகப்படுத்தப்பட்டதில் பொதுப் பயன்பாடு ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள நீதிபதிகள், ‘ஆட்சியில் இருந்ததால் தீபா, தீபக் ஆகியோரின் வழக்கை எதிர்கொண்டதாகவும், தற்போதைய அரசு மேல்முறையீடு செய்யாததால் நீதிமன்றதை நாடியதாகவும் அதிமுக கூறுவதை ஏற்கமுடியாது. நடைமுறை தவறுகள் இருந்தாலும், அந்த இடத்தில் பொதுப் பயன்பாடு இல்லை. இருப்பினும் உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதால், தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இறுதியில், அதிமுக மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
image
தொடர்ந்து ‘தனி நீதிபதி உத்தரவை ஏற்று வாரிசுதாரர்களிடம் சாவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கும்படி அரசுக்கு உத்தரவிடுவது முறையாக இருக்காது’ என்றும், ஏற்கனவே நினைவிடம் உள்ள நிலையில் இரண்டாவதாக ஒன்றை அமைக்க அரசுக்கு உத்தரவிடுவது சட்டபூர்வமாக இருக்காது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.