தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அறிவிப்புகளும் கட்டுப்பாடுகளும் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் நாளை (6.1.2022) முதல் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் போன்றவை செயல்பட அனுமதி இல்லை என அரசு தெரிவித்துள்ளது.  

image

இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாட்டின் போது, சில அத்தியாவசியச் செயல்பாடுகளை அரசு அனுமதித்துள்ளது. அதன் விவரங்கள்:

மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகள், மாநிலங்களுக்கிடையேயான பொது / தனியார் பேருந்து சேவைகள், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், ATM மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் (petrol, diesel & LPG), பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் (Petrol/Diesel Bunks) 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். மேலும் உற்பத்தி தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இந்த நாளில் பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்துமாறு தொடர்புடைய நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

இதர கட்டுப்பாடுகள்:

மழலையர் காப்பகங்கள் தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.

அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வுக்குச் செல்லும் மாணவர் கல்வி மற்றும் எதிர்கால  நலன் மற்றும் தடுப்பூசி  செலுத்திக்கொள்ள ஏதுவாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும்.

அரசு, தனியார் மருத்துவ மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர அனைத்துக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணாக்கர்கள் தேர்வு எழுதும் பொருட்டு ஜனவரி 20ஆம் தேதி வரை விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி நிலையங்கள் (Training and Coaching Centres) செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொது பேருந்துகள் மற்றும் புறநகர் இரயில்களில் உள்ள இருக்கைகளில், 50% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.

image

மெட்ரோ இரயிலில் 50% இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் பொங்கல் மற்றும் கலை விழாக்கள் ஒத்திவைக்கப்படுகிறது.

அனைத்து பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் (Entertainment Parks / Amusement Parks) செயல்படத் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் நடைப் பயிற்சி மேற்கொள்ள மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.

சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.

மீன் மற்றும் காய்கறிச் சந்தைகளில் குறிப்பாக வார இறுதி நாட்களில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் மீன் மற்றும் காய்கறி சந்தைகள் அமைக்க சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தற்போது செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களிலிருந்து செல்லும் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து வெவ்வேறு இடங்களிலிருந்து பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள போக்குவரத்துத் துறை மற்றும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

image

கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அனைத்து சேவைத் துறைகள் போன்ற பொது மக்கள் செல்லும் இடங்களில் பணிபுரியும் பணியாளர்கள், உரிமையாளர்கள் அனைவரும் இரண்டு தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும். 

அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் 9.1.2022-க்குள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி, அதற்குண்டான சான்றினை தொடர்புடைய அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் இரவு நேரப் பணிக்குச் செல்லும்போது தங்கள் அலுவலக அடையாள அட்டை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொண்டமைக்கான சான்றிதழையும் வைத்துக்கொள்ளவேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.