தமிழக ஆந்திர மாநில எல்லைப்பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி பெரிய ஒபுளாபுரம். இங்குள்ள ஏரிக்கரை ஓரத்தில் சில தினங்களுக்கு முன்பு குப்பைமேடு பகுதியில் இளைஞரின் சடலம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருப்பதாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரித்து, ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் அய்யனார் அப்பன் தலைமையிலான போலீஸார் விசாரித்தனர். இதையடுத்து போலீஸார் கும்மிடிப்பூண்டி தாசில்தார் மகேஷிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் முன்னிலையில் இளைஞரின் சடலத்தை போலீஸார் தோண்டியெடுத்தனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக இளைஞரின் சடலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சடலம்

இறந்தது யார் என்று ஆரம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சூழலில் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி காவல் நிலையத்துக்கு வந்த மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவன் பிரேம்குமாரின் பெற்றோர், தங்களுடைய மகனைக் காணவில்லை என்றும் அவனை பத்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவிகள் வரவழைத்த தகவலையும் தெரிவித்தனர். உடனடியாக வண்டலூர் ஓட்டேரி போலீஸார் மாணவிகள் குறித்து விசாரித்தபோது பிரேம்குமாருக்கும் மாணவிகளுக்கும் உள்ள நட்பு தெரியவந்தது. அதோடு இன்னொரு அதிர்ச்சி தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. இதையடுத்து மாணவன் பிரேம்குமார் குறித்த தகவலை ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்கு ஓட்டேரி போலீஸார் போனில் தெரிவித்தனர்.

பிரேம்குமாரின் அடையாளங்களை ஓட்டேரி போலீஸார் கூறியதும் சில நாள்களுக்கு முன் மீட்கப்பட்ட இளைஞரின் சடலத்தோடு ஒத்துப்போனது. இதையடுத்து பிரேம்குமாரின் பெற்றோர், ஆரம்பாக்கம் காவல் நிலையத்துக்குச் சென்றனர். அங்கு போலீஸார் தோண்டியெடுக்கப்பட்ட இளைஞரின் சடலத்தை பிரேம்குமாரின் பெற்றோரிடம் காண்பித்தபோது அது தங்களின் மகன் என்று அவர்கள் உறுதிப்படுத்தினர். அதனால் இறந்தது கல்லூரி மாணவன் பிரேம்குமார் எனத் தெரிந்ததும் அவர் எப்படி இறந்தார் என்ற கோணத்தில் விசாரணையை ஆரம்பாக்கம் போலீஸார் தொடங்கினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

கொலை

இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீஸார் கூறுகையில், “கல்லூரி மாணவன் பிரேம்குமார், அவனின் நண்பர்கள் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம் பகுதியில் உள்ள டெய்லர் கடைக்கு செல்வது வழக்கம். அப்போது மளிகை கடை நடத்தி வரும் ஒருவரின் மகள் ராதிகா, அவளின் தோழி சந்தியா(இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் அந்த டெய்லர் கடைக்கு வருவதுண்டு. ராதிகாவும் சந்தியாவும் பத்தாம் வகுப்பு படித்து வருகின்றனர். டெய்லர் கடையில் பிரேம்குமார், அவரின் நண்பர்களுக்கு சந்தியா, ராதிகா ஆகியோர் அறிமுகமாகியிருக்கின்றனர். அடிக்கடி அவர்கள் சந்தித்திருக்கின்றனர். அதன்பிறகு செல்போன் நம்பர்களை மாணவிகளும் கல்லூரி மாணவன் பிரேம்குமாரும் பகிர்ந்திருக்கின்றனர். அதன்பிறகு சந்தியா, ராதிகா ஆகியோரிடம் பிரேம்குமார் நட்பாக பழகியுள்ளார். அந்த நட்பு எல்லை மீறியிருக்கிறது.

பத்தாம் வகுப்பு மாணவிகளோடு பிரேம்குமார் செல்போனில் ஆபாசமாக பேசியதாகச் தெரிகிறது. அதை பிரேம்குமார் தன்னுடைய செல்போனில் ரெக்கார்டு செய்திருக்கிறார். இதையடுத்து அந்த உரையாடலை பிரேம்குமார், சம்பந்தப்பட்ட மாணவிகளுக்கு அனுப்பியிருக்கிறார். அதைக்கேட்டு மாணவிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். அதன்பிறகு பிரேம்குமார், இரண்டு மாணவிகளிடமும் இந்த ஆடியோவை உங்களின் பெற்றோருக்கு அனுப்பி விடுவேன் என்று கூறியதாகவும் அனுப்பாமலிருக்க பணம் தரும்படி கேட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் பயந்து போன மாணவிகள், பிரேம்குமாருக்கு பணம் கொடுத்திருக்கின்றனர்.

Also Read: வயதான பெண்கள் டார்கெட்; கொலை, கொள்ளை, இறந்த பிறகு பாலியல் வன்கொடுமை!-சைக்கோ திருடனின் பகீர் பின்னணி

ஆடியோ

இதையடுத்து பிரேம்குமாரின் தொல்லை குறித்துசமூகவலைதளம் மூலம் மாணவிகள் சந்தியா, ராதிகா ஆகியோருக்கு அறிமுகமான கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த அசோக் என்பவரிடம் கூறி உதவி கேட்டிருக்கின்றனர். அதைக்கேட்டதும் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஹீரோ போல டயலாக் பேசிய அசோக், இரண்டு மாணவிகள் மூலம் பிரேம்குமாரை எளாவூர் சோதனைச் சாவடி அருகே வரவழைத்திருக்கிறார். அப்போது பிரேம்குமாருக்காக அசோக், அவரின் நண்பர்கள் காத்திருந்திருக்கின்றனர். பின்னர் பிரேம்குமாரை அவர்கள் கடத்திச் சென்று மாணவிகளுக்கு எதற்காக தொல்லை கொடுத்தாய் என கேட்டு சித்ரவதை செய்திருக்கிறார்கள். அப்போத நடந்த தகராறில் பிரேம்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அசோக், அவரின் நண்பர்களைத் தேடிவருகிறோம்” என்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.