டெஸ்ட் ஃபார்மட்டில் கோலி – ரவி சாஸ்திரி கூட்டணி சாதித்ததைக் குறித்து ஒரு டாக்குமெண்டரி எடுக்கப்பட்டால் அதில் பிரதானப் பகுதி, அக்னிச் சிறகுகளை விரித்து உச்சம் தொட்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் எழுச்சியைப் பற்றியதாகத்தான் இருக்கும். அதற்கான டைட்டில் கார்டு போடப்பட்டது பும்ராவின் வருகைக்குப் பின்னர்தான்.

தென்னாப்பிரிக்காவில், தனது டெபுட் டெஸ்ட் மேட்சை விளையாடிய இந்தியர்களில், சிறந்த பேட்ஸ்மேனாகச் சாதித்தவர் சேவாக் எனில் பௌலர், பும்ரா! இருவருமே ரெட் பால் கிரிக்கெட் மெட்டீரியல் அல்ல எனப் பேசப்பட்டவர்கள்தான். ஆனால், இருவருமே அந்த உத்தேசங்களை உடைத்துக் காட்டியவர்கள்.

சமீபத்தில், 100 டெஸ்ட் விக்கெட்டுகளை பும்ரா எட்டியபோது, ரவி சாஸ்திரி தென்னாப்பிரிக்கா தொடரில் பும்ரா சேர்க்கப்பட்டதன் பின்னணி குறித்த தகவல்களைப் பகிர்ந்திருந்தார். அப்போது அவர், “இந்திய மண்ணில் பும்ராவை அறிமுகம் செய்ய வேண்டாம். தென்னாப்பிரிக்கா தொடருக்காக அவரை மறைத்து வைக்கலாம்” என கோலியிடம் கூறியதாகத் தெரிவித்திருந்தார்.

ஜஸ்ப்ரித் பும்ரா – கோலி

ஆனால், பும்ராவின் மீது இவ்வளவு நம்பிக்கையையும் ரவி சாஸ்திரி, கோலி மற்றும் தேர்வுக் குழுவினர் மட்டுமே வைத்திருந்தனர். தென்னாப்பிரிக்காவில் விளையாட இருக்கும், டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டு, அதில் பும்ராவின் பெயர் இடம்பெற்ற உடனே அது கடும் அதிருப்திக்கும், விமர்சனங்களுக்கும் வழிகோலிட்டது. அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

பும்ரா, லிமிடெட் ஃபார்மட்டில் நம்பிக்கையூட்டும் எக்ஸ் ஃபேக்டராக உருவெடுத்திருந்தாலும், அவர் ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட் ஆடி ஓராண்டு உருண்டோடியிருந்தது. 2016/17 ரஞ்சித் தொடரில், அவர் சிறப்பாகப் பந்து வீசியிருந்தாலும், வொய்ட் பால் கிரிக்கெட்டிற்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொண்டவருக்கு டெஸ்ட் களம் ஒத்து வருமா? பொறிவைத்து வேட்டையாடுவதைப் போல், செட் செய்து பேட்ஸ்மேன்களை வீழ்த்தும் வித்தகம் அவருக்குக் கைகூடுமா? அதிகபட்சம் 10 ஓவர்களை ஒருநாள் போட்டிகளில் வீசிப் பழகியவருக்குக் களத்தில் ஐந்து நாள்களும், 20 விக்கெட்டுகளும் வீழும் வரை நின்று, கேப்டனுக்கு உறுதுணையாகத் தோள் கொடுக்க முடியுமா? அதற்குரிய வேரியஷன்கள் அவரது கைவசம் உள்ளனவா? – இதுபோன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்தன.

அதற்கு இந்த விஷயமும் விதிவிலக்கல்ல. ஃபிட்னஸில் கவனம் செலுத்துவது, எதிரணியின் வீரர்கள் முன்னதாக ஆடிய வீடியோக்களின் மூலம் அவர்களுடைய பலம், பலவீனங்களை ஆய்வு செய்வது, அக்களத்தில் முன்னதாக விளையாடிய இந்திய வீரர்களுடன் கலந்துரையாடி, கள நிலவரம் பற்றிய தெளிவினைப் பெறுவது எனத் தன்னை முழுமையாகத் தயார்ப்படுத்திக் கொண்டுதான் பும்ரா வந்திருந்தார். ஆனால், தியரி வேறு மாதிரியாகவும், பிராக்டிக்கல் வேறு மாதிரியாகவும் இருந்தது.

கேப் டவுனில் நடைபெற்ற, முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ், பும்ராவுக்குச் சிறப்பாகச் செல்லவில்லை. ஒருநாள் போட்டிகளுக்குரிய லெந்த்திலேயே வீசப்பட்ட அவரது பந்துகள், ரொம்பவே அடிவாங்கின. வழக்கமாக, அயல்நாடுகளில், புதிதாகப் பந்து வீசும் அத்தனை ஆசிய பௌலர்களுக்குமான அதே சவாலைத்தான் பும்ரா, அதுவும் தனது அறிமுகப் போட்டியிலேயே எதிர் கொண்டார். இந்திய விக்கெட்டுகளுக்கு ஏற்றாற் போல் வீசிக் கொண்டிருந்தவரது அனுபவமின்மை, வெளிப்படையாகவே தெரிந்தது. மணிக்கு 140 கிமீ வேகத்தில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்டு, ஏபிடி வில்லியர்ஸ் அடிக்க முயன்று, இன்சைட் எட்ஜாகி ஸ்டம்புகள் தெறித்த அந்த ஒரு பந்து மட்டுமே பும்ராவுக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது.

ஜஸ்ப்ரித் பும்ரா

சோபிக்கத் தவறிய இந்த ஒரு இன்னிங்ஸே அவருக்கெதிரான விமர்சனங்களுக்குத் தீனி போட போதுமானதாக இருந்தது. இதன் விளைவாக ஷமி, புவனேஷ்வருடான ஒப்பீடுகள், தடித்த வார்த்தைகளாக வெளிவந்தன. அந்த விமர்சகர்கள் ஒன்றும் தீர்க்கதரிசிகள் இல்லையே… பின்வருவதை முன் அறிந்து சொல்ல?! அந்த ஆண்டிலேயே விளையாடும் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு ஐந்து விக்கெட் ஹாலினை இதே பும்ராதான் எடுக்கப் போகிறார் என்றும், 100 டெஸ்ட் விக்கெட்டுகள் என்னும் மைல்கல்லினை குறைந்த இன்னிங்ஸ்களில் அதிவேகமாக எட்டிய இந்திய வேகப்பந்து வீச்சாளராக கபில் தேவின் சாதனையையே முறியடிக்கப் போகிறார் என்பதனையும் அச்சமயம் அவர்கள் யாருமே அறிந்திருக்கவில்லை.

ஆனாலும், ‘தொடர் முழுவதும் காத்திருந்து, கருத்துக்களைத் தெரிவித்திருக்கலாமோ?!’ என அவர்களையே வருந்த வைத்தன, பும்ராவின் அடுத்தடுத்த இன்னிங்ஸ்களின், பௌலிங் ஃபிகர்கள்!

திறமைசாலிகள் தடுமாறினாலும் திரும்ப எழத் தாமதிப்பதில்லை. இரண்டாவது இன்னிங்ஸிலேயே, தவறுகளைத் திருத்தித் திருப்பி வந்தார் பும்ரா. முதல் இன்னிங்ஸைப் போல் அன்றி, சற்றே பேக் ஆஃப் த லெந்த்தில் பந்துகளை வீசத் தொடங்கினார். முதல் இன்னிங்ஸில் பல பந்துகள் ஸ்லாட்டில் விழுந்திருந்தன. அதை மாற்றியமைத்தவருக்கு, லைன் அண்ட் லெந்த் பிடிபட, ரிதம் செட் ஆனது. களத்தில் கிடைத்த சீம் மூவ்மெண்டையும், சாதுர்யமாகப் பயன்படுத்தத் தொடங்கினார். அவருடைய வித்தியாசமான, பௌலிங் ஆக்ஷனினால் கிடைத்த எக்ஸ்ட்ரா பவுன்ஸும் கை கொடுக்க, அதோடு சேர்ந்து, முதல் இன்னிங்ஸில் கிடைத்த அனுபவப் பாடமும் சேர, புகுந்து விளையாடத் தொடங்கினார் பும்ரா.

ரவி சாஸ்திரியின் கூற்றுப்படி, இந்தியத் தரப்பு அவரை ஒளித்து வைத்ததற்கான பலன் தெரியத் தொடங்கியது. ஸ்பின்னர்களை விட சற்றே நீண்டதுதான் அவருடைய ரன் அப். கடைசித் தருணத்தில்தான் வேகத்தைக் கூட்டுவார். இது பேட்ஸ்மேன்களுக்கு அவரது பந்தைக் கணிப்பதற்கான கால அவகாசத்தை மைக்ரோ விநாடியாக மாற்றி அவர்களைத் தடுமாறச் செய்தது. அப்போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் டு ப்ளஸ்ஸிஸை பும்ரா ஆட்டமிழக்கச் செய்தது, அப்படி ஒரு பந்தாலேயே!

141 கிமீ/மணி என்ற வேகத்தில் வரும் பந்தின் லெந்த்தைக் கணிக்கத் தவறி, ஃப்ரண்ட் ஃபுட்டில் ஆடி, விக்கெட் கீப்பர் சாஹாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். எக்ஸ்ட்ரா பவுன்ஸ், டு ப்ளஸ்ஸிஸுக்கு எதிரியாக முடிந்தது. அதே இன்னிங்ஸில், டீ காக் மற்றும் ஏபிடி வில்லியர்ஸின் விக்கெட்டுகளையும் வீழ்த்திக் காட்டினார் பும்ரா.

ஜஸ்ப்ரித் பும்ரா – கோலி

பும்ராவுக்குக் கூடுதல் பலமாக இருந்தது அவரது பௌலிங் ஆக்ஷன். ஆஸ்திரேலிய ஜாம்பவான் டென்னிஸ் லில்லி, பும்ராவின் பௌலிங் ஆக்ஷனை தனது சகாவான ஜெஃப் தாம்சனுடையதோடு ஒப்பிட்டிருந்தார். அச்சுறுத்தும் மலிங்காவுடன் அதை ஒப்பிடுபவர்களும் உண்டு. ரப்பராக முழங்கையை அவர் வளைப்பதனால் அக்தரோடு கூட ஒருசமயம் பும்ரா ஒப்பிடப்பட்டார். ஆனால், பும்ராவின் பௌலிங் ஆக்ஷன் தனித்தன்மை உடையதாக இருந்தது. அயல்நாட்டு வேகப்பந்து வீச்சாளர்களால் மிரளும் இந்திய பேட்ஸ்மேன்களைக் கண்டு பழகிய கண்களுக்கு தென்னாப்பிரிக்கா பேட்ஸ்மேன்களை அவர்களது மண்ணிலேயே அச்சுறுத்திய அவரது வேகம் ஆச்சரியமூட்டியது.

எந்த டு ப்ளஸ்ஸிஸ், அவரை முதல் இன்னிங்ஸில் டார்கெட் செய்து கிறங்கடித்தாரோ, அதே டு ப்ளஸ்ஸிஸின் விக்கெட்டினை, அடுத்த ஐந்து இன்னிங்ஸ்களில் மூன்று முறை வீழ்த்திக் கலங்கடித்தார் பும்ரா. செஞ்சூரியனில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின், இரண்டாவது இன்னிங்ஸில், டு ப்ளஸ்ஸிஸை வீழ்த்திய அந்த ஆஃப் கட்டர் எல்லாம் அற்புதத்தின் உச்சம். தொடர்ந்து 140+ கிமீ/மணி வேகத்தில் மூன்று பந்துகளை வீசி, நான்காவது பந்தை ஸ்லோ பாலாக வீசி அவரைச் சிக்க வைத்தார் பும்ரா. செஞ்சுரியனில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் பும்ரா. எல்லா ஃபார்மட்டிலும் நம்பர் 1 பௌலராக, பும்ரா வலம் வருவார் என முன்னதாகக் கணித்திருந்தார் மைக்கேல் கிளார்க். அது உண்மையாகுவதற்கான ஆரம்ப கட்ட அடையாளங்கள் அங்கேயே தெரிய ஆரம்பித்தன.

அத்தொடரில், பெரும்பாலான சமயம், ஒரே ஓவரில் ஆறு பந்துகளையும் ஆறு ரகமாகப் போட பும்ரா முயன்றிருந்தார். வேரியேஷன்கள் அவருக்கு வெகுவாகக் கை கொடுத்தன. அவரது இன் ஸ்விங்கர்கள் பேட்ஸ்மேன்களை குறிப்பாக, வலக்கை ஆட்டக்காரர்களை இக்கட்டில் தள்ளின. அதற்குப் பழகத் தொடங்கும் தருணம் ஷார்ட் பால்கள் தலைக்குக் குறிவைத்தன. தலை தப்பினால் துல்லியமான யார்க்கர்கள் பிளாக் ஹோலைத் தாக்கின. பேட்ஸ்மேனை செட்டில் ஆக விடாதபடி லைன் அண்ட் லெந்த்தை மாற்றி மாற்றி, குழப்பிக் கொண்டிருந்தார் பும்ரா. முதலில் ரன்களைக் கட்டுப்படுத்தத் தொடங்கியவர், அதன்பின் விக்கெட்டுகளையும் வாரிக் குவித்தார்.

ஜஸ்ப்ரித் பும்ரா – ரஹானே

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற மூன்றாவது போட்டிதான், பும்ராவின் உச்சகட்ட ஆட்டத்தைப் பார்த்தது. 2-0 எனத் தொடரை ஏற்கெனவே இழந்துவிட்ட இந்தியாவுக்கு, வாஷ் அவுட் ஆகி அத்தோல்வியை அவமானகரமானதாக மாற்றிவிடக் கூடாதென்ற பதற்றம் இருந்தது. ஆனாலும், ஓப்பனர்கள் தொடங்கி முக்கிய பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவற 187 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.

அதற்கு பதிலடி கொடுப்பதைப் போல் தென்னாப்ரிக்காவை, 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கச் செய்தது இந்திய பௌலிங் படை. உபயம், டு ப்ளஸ்ஸிஸ், டீ காக், ஆம்லா உள்ளிட்ட ஐந்து விக்கெட்களை வீழ்த்திய பும்ரா!

இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே மேஜிக்கைத் திரும்ப நிகழ்த்தி ஏபிடி வில்லியர்ஸ், டீ காக் ஆகிய இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்திருந்தார் பும்ரா. ஆடிய முதல் தொடரிலேயே ஐந்து விக்கெட் ஹாலினை அதுவும் தென்னாப்பிரிக்காவில் பதிவேற்றிய இவரைத்தான் டெஸ்டுக்கு ஒத்து வர மாட்டார் என ஒருசிலர் கூறியிருந்தனர்.

Also Read: Ashes : ஆறுதல் இன்னிங்ஸ் ஆடிய பட்லர்… அடைக்க முடியா ஓட்டைகளால் மீண்டும் வீழ்ந்த இங்கிலாந்து!

வேகப்பந்து வீச்சை இஷாந்த், ஷமி, புவனேஷ்வர் ஆகியோரின் வழிநின்று மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த இந்தியாவுக்கு, இன்னொரு ஆயுதமாக பும்ரா உருவெடுப்பார் என்பதனை இத்தொடர் உறுதிப்படுத்தியது. 3 போட்டிகளில், 14 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா, அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை எடுத்த இந்திய பௌலர்களில் இரண்டாவது இடத்தை ஷமிக்கு அடுத்தபடியாகப் பிடித்தார்.

ஆட்டநாயகன் விருது, பேட் மற்றும் பாலினால் ஜாலம் காட்டிய புவனேஷ்வருக்கு வழங்கப்பட்டாலும், ஒரு புதிய நட்சத்திர பௌலராக பும்ரா கிடைத்துவிட்ட மகிழ்ச்சியோடேதான் இந்தியத் தரப்பு அங்கிருந்து விமானம் ஏறியது. இந்திய வேகப்பந்து வீச்சின் உச்சத்தை 2020 ஆஸ்திரேலியாவில் உலகம் பார்த்திருந்தாலும், அதற்கான ஆரம்பப் புள்ளி, இத்தொடரில் பும்ராவின் வருகையோடுதான் பதிவு செய்யப்பட்டது.

ஜஸ்ப்ரித் பும்ரா – இஷாந்த் சர்மா

வெகுநாள்கள் வெள்ளை ஜெர்ஸியோடு பும்ரா ஆட மாட்டார் என ஹோல்டர் உள்ளிட்ட பலர் கருத்துத் தெரிவித்திருக்க, அதையெல்லாம் தகர்த்து எறிந்து, சாதித்துக் காட்டிய பும்ரா, அதன்பின் இந்தியாவில் (இந்தாண்டு) ஆடுவதற்கு முன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என அத்தனை இடத்திலும் தன் கொடியை நாட்டிவிட்டார்.

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின், தென்னாப்பிரிக்காவுக்கு மறுபடியும் பயணப்படுகிறார் பும்ரா. இம்முறையும் டெபுட் தொடரில் செய்த அதே மேஜிக்கை அவர் நிகழ்த்திக் காட்டுவார் என உறுதியாக நம்பலாம்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.