அச்சம், அன்பு ஆவேசம்ன்னு கிராமத்து வழிபாடு ரொம்பவே உணர்வுப்பூர்வமானது. விலங்குகள்கிட்ட இருந்தும் எதிரிகள்கிட்ட இருந்தும் போராடி உயிரிழக்கிற தங்களோட குலத்தலைவனுக்கு படையல் போட்டு நன்றி சொல்றதுல இருந்துதான் வழிபாடு தொடங்குச்சுன்னு ஆராய்ச்சியாளர்கள்லாம் சொல்றாங்க. கருப்பன், முனியன், அய்யன், பட்டவன், பாவாடைராயன், பலவேஷக்காரன்னு இன்னைக்கு கிராமங்கள்ல வணங்கப்படும் எல்லாத் தெய்வங்களும் அப்படி வாழ்ந்து மறைந்த மூதாதைகள்தான்.

கண்களை அகல விரிச்சு அய்யனாரோட அடையாளமா இருக்கிற தடியைத் தாங்கி ஆடிவர்ற பூசாரி அய்யனாராவே மாறிடுவார் அவரோட வகையறாக்கள் எல்லாம் பின்னால ஆடி வருவாங்க. இளைஞர்கள் தங்கள் தோள்ல அய்யனாரையும் கருப்பனையும் முனியனையும் அய்யனாரோட வாகனமான பெரிய பெரிய குதிரைகளையும் தூக்கிட்டு வருவாங்க. பறை இசை அந்த பயணத்தை உக்கிரமாக்க, மத்தவங்க மதலைகள், யானைகளழ், மாடுகள்ன்னு சின்ன சின்ன உருவங்களை தூக்கிட்டு நடப்பாங்க. ஊரோட எல்லையில மதுக்குடம் சுமந்துக்கிட்டு வர்ற பெண்கள் இணைய அந்த ஊருக்கே புது வாசனை வரும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருநெல்வேலி, மதுரை, தேனி மாவட்டங்கள்ல கிராம தேவதை சாமிகளுக்கு நடக்குற குதிரையெடுப்பு விழா, ரொம்பவே வண்ணமயமா இருக்கும். கிராமத்தோட முகமே மாறிடும்.

மண்பாண்டக் கலைஞர்

கிராம தேவதைகள் வழிபாட்டை நாட்டார் வழிபாடுன்னும் சொல்லுவாங்க. கிராம தேவதைகள்ன்னு சொல்லப்படுற தெய்வங்கள் அந்த மண்ணோடவும் மக்களோடவும் நெருக்கமான தொடர்புடையதா இருக்கும். ஊரோட எல்லையில மரங்கள் நிறைஞ்சிருக்கிற ஒரு இடத்துல களிமண்ணால செய்யப்பட்ட தெய்வங்களை வச்சு மக்கள் வணங்குவாங்க. பெரும்பாலும் இந்த தெய்வங்கள் திறந்தவெளியிலயே இருக்கும். மழை, வெயில்ன்னு இந்த களிமண் சிலைகள் மெல்ல மெல்ல சிதைஞ்சு போகும்… அதனால வருஷத்துக்கு ஒருமுறை சாமி சிலைகளை புதுசா செஞ்சு கொண்டு வந்து வைப்பாங்க. அந்தத் திருவிழாவுக்குப் பேருதான் குதிரையெடுப்பு.

உலகத்தோட எந்த மூலையில இருந்தாலும் குதிரையெடுப்புத் திருவிழாவுக்கு கிராமத்துல வந்து குவிஞ்சிருவாங்க மக்கள். குதிரையெடுப்புக்கு நாள் குறிச்சதும் தங்கள் காவல் தெய்வங்களோட காலடியில கைபிடி மண்ணள்ளிக்கிட்டு மக்கள் போய் நிக்குறது குளாலர் வீட்டுலதான்.

தஞ்சாவூர் மாவட்டத்துல பேராவூரணி நகரத்தோட தென்முகப்புல இருக்கு நீலகண்டபுரம். இங்கிருந்துதான் சுத்துப்பட்டு கிராமங்களுக்கு சாமி சிலைகள் தயாராகிப் போகும். மண்பாண்டக் கலை கிராமமான இந்த ஊர்ல சாமி சிலை செய்றதுல பேர்போன மூத்த கலைஞர் சக்திவேல் சங்கரன். நூற்றுக்கணக்கான கிராமங்கள்ல அருள்பாலிக்கிற மக்கள் தெய்வங்கள் பலவும் இவரோட கைகளால உயிர்பெற்றவைதான்.

கிராமத்துத் தெய்வங்கள்ல பிரதானமானவர் அய்யனார். அவருக்குக் கட்டுப்பட்ட சாமிகள் 62. அய்யனார் அரசவையில மந்திரியா இருக்கிறவர், கருப்பர். கையில அரிவாள், கால்ல சலங்கைன்னு உக்கிரத்தோட இருப்பார் கருப்பர். கருப்பருக்குப் பக்கத்துல இருக்கிறவர் சன்னியாசி. இவருதான் அய்யனாரோட அரசவையில் ராஜகுரு. அடுத்து மதுரை வீரனோ, காத்தவராயனோ இருப்பாங்க. அவங்க தளபதிகள். சாம்பன், கொம்புக்காரன், வீரபத்திரன், காமாட்சியம்மன், முத்தாளு, ஆலாத்தி, சப்பானி, தூண்டிக்காரன், ராக்காச்சி… எல்லோருமே காவலர்கள்… கிராமத்தோட எல்லையில உக்காந்துக்கிட்டு ஆட்சிசெய்ற இந்த மூத்தோன்களுக்கு தன் கைகளால உயிர் குடுக்கிறார் சக்திவேல் சங்கரன்.

சாமி சிலை செய்றது மண்பாண்டம் செய்றது மாதிரியில்லை. அதுக்குன்னு பல நியதிகள் இருக்கு. சிலை செய்ய மண் எடுக்கிறதுல இருந்தே அது தொடங்கும். கால்படாத நடுக்குளத்தில இருந்து மண்ணெடுக்கனும். அதேபோல் காவிரியாற்றோட கிளை ஆற்றுல படியிற வண்டல் மண்ணையும் எடுத்துட்டு வந்து ரெண்டையும் சேர்த்தால்தான் மண் கைக்கு வாகா வரும். தூசியையெல்லாம் நீக்கிட்டு தண்ணீர்ல ஊறவச்சு பதப்படுத்தி எடுத்தா, சக்திவேல் சங்கரனோட சொல்பேச்சு கேட்கும் மண்.

மண்பாண்டக் கலைஞர்

சிற்ப உருவங்களுக்கு எந்தவிதமான தரவுகளும் இல்லை. காலம் காலமா மூத்தோர்கள் சொல்லி வச்சதுதான். மனசுல இருக்கிற உருவம் அப்படியே மண்ணுல உயிர் பெற்று வரும். சில சாமிகள் சிரித்த முகத்தோடு இருப்பாங்க. சில சாமிகள் உக்கிரமாக மிரட்டும் தோரணையில இருப்பாங்க. முழு உருவமும் வார்த்து முடிச்சாலும் இந்தக் கலைஞர்கள் தங்கள் வீட்டுல வச்சு சாமிகளோட கண்களை மட்டும் திறக்க மாட்டாங்க.

ஒவ்வொரு சாமிக்கும் ஒவ்வொரு நிறம் அடையாளமா இருக்கும். அய்யனார் பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில இருப்பாரு. பெண் தெய்வங்கள் சிவப்பு நிறத்துல இருக்கும். அய்யனாரோட குதிரை வெள்ளை நிறத்தில இருக்கும். மதலைகள், யானைகள், நாய்க்குட்டிகள், மாடுகளுக்கு விருப்பம்போல வண்ணம் தீட்டலாம்.

கற்கள்லயும் மரத்துலயும் தெய்வ உருவம் செதுக்குற கலைஞர்களுக்கு நம் சமூகத்தில பெரிய மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்குது. ஆனா மண்ணைத் தெய்வமாக்குற கலைஞர்கள் இன்னமும் வறுமையிலதான் வாடுறாங்க. மண்ணுக்கும் தண்ணீருக்குமே போராடுறாங்க. அவங்களை அரசும் சமூகமும் ஏறெடுத்துப் பாக்கனும். சக்திவேல் சங்கரன் மாதிரி மூத்த கலைஞர்களை கௌரவிச்சு பாதுகாக்கனும்!

‘மண்ணை சாமியாக்கும் கலைஞர்களின் கதை’ காணொளியை முழுமையாகக் காண கீழே கிளிக் செய்யவும்!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.