சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர் வினோத் (35). இவர் ஆயிரம் விளக்கு காவல்நிலையத்தில் கடந்த 30.11.2021-ம் தேதி புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது, “நான் பி.எஸ்.சி படித்துள்ளேன். அதன்பின்பு வேலை தேடி வந்தபோது நுங்கம்பாக்கத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் சார்பில் வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் தகுதிக்கு ஏற்ப வேலை வாங்கித் தரப்படும் என்று ஃபேஸ்புக் மூலம் விளம்பரம் செய்திருந்தது. அதனால் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு விவரத்தைக் கேட்டேன். பின்பு அவர்கள் கூறியபடி எனக்கு வேலை வாங்கி கொடுக்க ஒரு லட்சம் ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என்று அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, வேலை கிடைக்கவில்லை என்றால் செலுத்திய பணம் திரும்ப கொடுக்கப்படும் என்றும் கூறினர்.

திவ்யபாரதி

அதன்படி நான் அந்த நிறுவனம் நடத்திய நேர்காணலில் கலந்து கொண்டேன். பின்னர், கடந்த 11.1.2020-ம் தேதி நானும் அந்த நிறுவனத்தின் எம்.டி ராஜா என்பவரும் பணம், வேலை தொடர்பான அக்ரிமெண்டில் கையெழுத்திட்டோம். பிறகு அவர்கள் கூறியபடி என்னுடைய பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களின் நகலை அந்த நிறுவனத்தில் சமர்பித்தேன். இதையடுத்து வேலைக்காக ஒரு லட்சம் ரூபாயை செலுத்திவிட்டு காத்திருந்தேன். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதனால் நேரில் சென்று கேட்டபோது கொரோனா காலம் என்பதால் காலதாமதம் ஏற்படுகிறது என்று பதிலளித்தனர். அதன்பிறகும் எந்தவித பதிலும் இல்லாததால் 2021 மார்ச் மாதம் அந்த நிறுவனத்துக்கு மீண்டும் நேரில் சென்று கேட்டபோது வேலை வாங்கித் தரும் நடைமுறைகள் ரத்தாகிவிட்டது என்று கூறி என்னுடைய பாஸ்போர்ட், கல்வி சான்றிதழ்களின் நகலை கொடுத்தனர். அப்போது 50,000 ரூபாய்க்கான செக் ஒன்றையும் கொடுத்தனர்.

அதை வங்கியில் கொடுத்த போது பணம் கிடைக்கவில்லை. அதனால் நிறுவனத்துக்கு மீண்டும் சென்று விசாரித்தபோது அங்கிருந்தவர்கள், நிர்வாக இயக்குநர் ராஜா, அவரின் நேர்முக உதவியாளர் திவ்யா ஆகியோர் தான் அனைத்துக்கும் பொறுப்பு. அவர்களிடம் பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர். அதனால் நான் ராஜாவிடம் கேட்டபோது, `பணத்தை திரும்ப கொடுக் முடியாது. நான் யார் என்பது உனக்கு தெரியாது! உன்னால் ஆனதை பார்த்துக்கொள்’ என மிரட்டும் தொனியில் பேசினார். எனவே எனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி என்னையும், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி என்னைப் போல சுமார் 40-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றிய ராஜா, அவரின் நேர்முக உதவியாளர் திவ்யா ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read: சென்னை: `ரூ. 1.5 கோடி மோசடி’ – மளிகைக் கடை ஊழியரின் மனைவி, உறவினர் கைது!

கைது

அதன்பேரில் ஆயிரம் விளக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், ஐ.பி.சி 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். விசாரணைக்குப் பிறகு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்திய தூத்துக்குடி மாவட்டம், மங்களகிரியைச் சேர்ந்த ராஜா (35), அவரின் நேர்முக உதவியாளராக பணியாற்றிய பூந்தமல்லி பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த திவ்யபாரதி (27) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் இருவரும் வெளிநாட்டு சொகுசுக் கப்பலில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 43 பேரிடமிருந்து சுமார் 48.8 லட்சம் ரூபாய் வசூல் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.