“என்ன செய்யணும்னு நினைக்குறீங்களோ அதை உடனே செஞ்சுடுங்க… அது சாப்பிடுறதா இருந்தாலும் சரி” டரியலாக பேசத் தொடங்கினர் ஸ்ரீதர் மற்றும் ஹரிஹரன். திருச்சியைச் சேர்ந்த இரட்டை சகோதரர்களான இவர்கள் ஃபுட் ரிவ்யூவில் கலக்கி வருகின்றனர். சுவைத்த உணவுகள், கிடைத்த அனுபவங்கள் என கலவையான விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

ட்வின்ஸ் ஃபுட் ரிவ்யூவர்கள்

Also Read: அதிகரிக்கும் Food Poisoning பிரச்னை; மருத்துவமனையில் குவியும் மக்கள்; என்ன காரணம்?

நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே திருச்சி. சிவில் இன்ஜினீயரிங் படிச்சிட்டு அப்பாவோட டிபார்ட்டல்மென்டல் ஸ்டோரைப் பார்த்துக்கிறோம். காலேஜ்ல படிக்குறப்போ கேட்ஜெட்ஸ் அன்பாக்ஸிங் வீடியோ பண்றதுக்காக ஒரு யூடியூப் சேனல் ஆரம்பிச்சோம். அது நாங்க நினைச்ச மாதிரி நல்லா போகல. அதுதவிர, புதுப்புது கேட்ஜெட்ஸ் வாங்கி ரிவ்யூ பண்றதுக்கு நிறைய முதலீடும் தேவைப்பட்டுச்சு.

ஒரு கட்டத்துல நம்ம சாப்பிடுறத ஏன் ஒரு வீடியோ பண்ணி அதுக்கு ரிவ்யூ குடுக்கக் கூடாதுனு தோணுச்சு. அப்படி நாங்க பண்ணின ரிவ்யூக்களை ஒரு ஃபேஸ்புக் குரூப்ல போஸ்ட் பண்ண ஆரம்பிச்சோம் . ஆனா அந்த குரூப்ல ஒரு சில ஹோட்டல்களுக்கு மட்டும்தான் சரியான ரிவ்யூ குடுக்க முடிஞ்சுது. அந்த குரூப்போட அட்மின் வியூஸ் வேணும்கிறதுக்காக நல்லா இல்லாத சாப்பாட்டைக்கூட நல்லா இருக்குன்னு சொல்லச் சொன்னாங்க. அது எங்களுக்கு சரியாப் படல” என்ற ஸ்ரீதரை இடைமறித்து ஹரிஹரன் தொடர்ந்தார்.

உணவு ரிவ்யூ செய்யும் ட்வின்ஸ்

“அதனால அந்த குரூப்ல இருந்து வெளிய வந்துட்டோம். தனியா இன்ஸ்டாகிராம் பேஜ் ஆரம்பிச்சோம். எங்க ரிவ்யூவ ரோட்டோரக் கடைகள்ல இருந்துதான் தொடங்குனோம். அதுக்கப்புறம் பெரிய பெரிய ஹோட்டல்களோட உணவுகளையும் ரிவ்யூ பண்ணினோம்.

சும்மாவே நாங்க இரட்டையர்கள்னு எல்லாரும் எங்களை திரும்பித் திரும்பிப் பார்ப்பாங்க. இதுல நாங்க கேமரா லைட்டெல்லாம் வெச்சு போட்டோ எடுக்கும்போது அங்க இருக்கிறவங்க எல்லாம் எங்களையே பார்ப்பாங்க. ஆரம்பத்துல கொஞ்சம் அசௌகர்யமா இருந்துச்சு. போகப்போக அதெல்லாம் பழகிடுச்சு” ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டனர்.

ஹரிஹரனே தொடர்ந்து பேசினார். “கன்னியாகுமரில ட்ரிப்பிள் மிக்ஸ்னு ஒரு சிக்கன் டிஷ்தான் நாங்க இதுவரை ரிவ்யூ பண்ணினதுலயே எங்க ஃபேவரைட். சிக்கன் ஃப்ரைடு நூடுல்ஸ், ரைஸ், முட்டைனு எல்லாம் சேர்ந்த வித்தியாசமான டிஷ் அது. திண்டுக்கல் ஸ்பெஷல் பிரியாணிக்குன்னு திருச்சியில ஒரு கடை இருக்கு. அங்க போய் பிரியாணியை ட்ரை பண்ணிப் பார்த்து நொந்து போயிட்டோம். இந்த இரண்டும்தான் எங்க பெஸ்ட், வொர்ஸ்ட் அனுபவங்கள்.

ட்வின்ஸ் ஃபுட் ரிவ்யூவர்கள்

ரிவ்யூன்றது நல்லதை மட்டுமே சொல்றது இல்ல. குறை, நிறைகளையும் சொல்றது. அதனால ரெண்டையும் சமமாதான் பண்ணுவோம்” என்கிறார்.

ஸ்ரீதர் தொடர்ந்தார். “நாங்க ரிவ்யூக்கான இன்ஸ்டா பேஜ் தொடங்குனப்ப எங்களப்பத்தி வெவ்வேறு விதமான விமர்சனங்கள் பாஞ்சுகிட்டே இருந்துச்சு. எங்க குரல் நல்லா இல்லைனு சொல்வாங்க. நாங்க எதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இல்லைனு சொல்லி வீடியோ போட்டா `உனக்கு ஃப்ரீயா சாப்பாடு குடுத்து இருக்கமாட்டாங்க. அதனால் ஹோட்டலைப்பத்தி தப்பா பேசுற’ன்னு கமென்ட் பண்ணுவாங்க.

அதையெல்லாம் தாண்டி எங்களுக்குன்னு நிறைய ஃபாலோயர்ஸும் இருக்காங்க” என்று நிறுத்த ஹரிஹரன் பேசினார். “இப்பல்லாம் எங்க அம்மாவை யாராவது ரோட்ல பாத்தாக்கூட, நீங்கதானே அந்த ட்வின்ஸோட அம்மான்னு விசாரிக்கிறாங்களாம்.

ட்வின்ஸ் ஃபுட் ரிவ்யூவர்கள்

எங்க அம்மாவுக்கு அந்த நேரத்துல சந்தோஷம் தாங்காது. வீட்ல அம்மா செய்யுற சாப்பாட்டையும் ரிவ்யூ பண்ணி, போட்டோ எடுத்துப் போடுவோம். அம்மா அதுக்காகவே அழகழான பாத்திரம் எல்லாம் வாங்கி வந்து சமைப்பாங்க. அம்மா பசிக்குது சாப்பிடலாம்னு சொன்னாகூட `போட்டோ எடுங்க அப்பறம் சாப்பிடுங்க’னு சொல்லுவாங்க.

வெளில நிறைய இடங்கள்ல சாப்பிடுறதால எங்க ஹெல்த் பத்தி எங்க அம்மாதான் ரொம்ப கவலைபடுவாங்க. ஆனா எந்த அளவுக்கு சாப்பிடுறோமோ அதே அளவுக்கு உடல்நலத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்போம். தினமும் காலையில 10,000 ஸ்டெப்ஸ் வாக்கிங், அப்புறம் உடற்பயிற்சி செய்வோம். ரிவ்யூ பண்ற நேரத்தைத் தவிர மற்ற நேரங்கள்ல ஆரோக்கியமான உணவு சாப்பிடுற மாதிரி பார்த்துப்போம்” என்று நிறைவு செய்தார்.

ஸ்ரீதர் – ஹரிஹரன்

Also Read: இந்த பொறப்புதான் நல்லா ருசி சாப்பிட கிடைச்சுது! #MyVikatan

விடைபெறும்போது, “சாப்பிட்டதை போஸ்ட் பண்ணதுபோக, போஸ்ட் போடுறதுக்காகவே சாப்பிட ஆரம்பிச்சதுதான் ரிவ்யூ பண்றது வரைக்கு கொண்டு போச்சு. ஆரம்பத்துல எங்க செல்போன்லதான் வீடியோ எடுத்தோம். அப்புறம் இதுல கிடைக்குற பணத்தை வெச்சு மைக், லைட் மாதிரி பொருள் எள்லாம் வாங்குனோம். இப்போதான் புதுசா கேமரா வாங்கி இருக்கோம். இனிமேல் ரகிட ரகிடதான்” தம்ஸ்-அப் காட்டிச் சிரிக்கின்றனர்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.