லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் நம்மூர் ‘முரட்டு சிங்கிள்’ ஆண் எப்படி நடந்துகொள்வான்? இதுவே ‘பேச்சிலர்’ ஒன்லைன்.

கோயம்புத்தூரிலிருந்து பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரியச் செல்லும் இளைஞர் ‘டார்லிங்’காக ஜி.வி.பிரகாஷ். சுற்றி இருப்பவர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாத, தனக்கு என்ன பிடிக்கிறதோ அதைச் செய்யும் கதாபாத்திரம். நகர வாழ்க்கையைத் தனது இரு கரங்களால் பற்றிக்கொண்டிருக்கும் சுப்புலட்சுமியை (திவ்யபாரதி) நண்பர் வழி சந்திக்கிறார். கண்டதும் காதல் என்பது போல் கண்டதும் காமம் டார்லிங்கிற்கு. வெளிநாடு செல்லும் நண்பனின் பரிந்துரையில் சுப்புலட்சுமி வீட்டில் ரூம் மேட்டாகிறான் டார்லிங். முதலில் முட்டிக் கொள்கிறார்கள், பின்பு நண்பர்களாகிறார்கள், அடுத்து காதலர்களாகிறார்கள்… ஏன், குழந்தையே உண்டாகிவிடுகிறது. இதற்கு பின் என்ன நடக்கிறது என்பதே ‘பேச்சிலர்’ கதை.

பேச்சிலர்

இந்தச் சமூகத்தில் ‘அர்ஜுன் ரெட்டி’ விஜய் தேவரகொண்டா போன்று இருப்பவர்கள் மட்டுமா ‘டாக்ஸிக்’ ஆணாதிக்க மனநிலையுடன் உலவுகிறார்கள்?! சாதாரண உடல்வாகுடன் நாம் அன்றாடம் சந்திக்கும் பலரிடமும் இந்த உளவியலைப் பார்க்கலாம். அப்படியான கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார் ஜிவி பிரகாஷ். ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ போன்ற முந்தைய படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்களின் அப்டேட்டட் வெர்ஷன்தான் டார்லிங். நண்பர்களுடனான ஜாலி காட்சிகளில் ஓகே என்றாலும் சிக்கலான ஆண்-பெண் உறவைப் பேசும் இந்த படத்திற்குத் தேவையான முதிர்ச்சியான நடிப்பைக் கொடுக்கத் தவறுகிறார் ஜிவி!

அறிமுக நாயகியான திவ்யபாரதி, கதாபாத்திரத்திற்குத் தேவையானதைச் சரியாகச் செய்திருக்கிறார். ஆனால், இரண்டாம் பாதியில் இவருக்குப் பெரிதாக வேலை இல்லை என்பது சோகம். இது இல்லாமல் நண்பர்களாக வரும் நக்கலைட்ஸ் கேங், ‘பக்ஸ்’ பகவதி பெருமாள், முனீஷ்காந்த் என அனைவரும் தங்கள் பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி செல்வதும் அவர்களின் கதாபாத்திரங்கள்தான்.

படத்தின் பெரும் பலம் அதன் டெக்னிக்கல் டீம். பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, ஒலிப்பதிவு என நான்கு துறைகளும் ஒன்றுடன் ஒன்று போட்டிப் போட்டு காட்சிகளை அழகுபடுத்துகின்றன. முக்கிய காட்சிகளில் தேனி ஈஸ்வரின் கேமராதான் நாயகன். கதைக்கு பொருத்தமான இசையைத் தந்திருக்கிறார் சித்து குமார். வித்தியாசமான கட்களில் ஈர்க்கிறார் சான் லோகேஷ். அறிமுக இயக்குநராக சதிஷ் செல்வகுமாரும் சில காட்சிகளில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறார். ஆனால், இந்த காட்சிகள் ஒரு முழு படமாக நம்மை ஈர்க்காமல் போவதுதான் படத்தின் பெரிய மைனஸ்.

Also Read: பாலையாவின் `அகண்டா’ விமர்சனம்: சும்மாவே ஃபைட்டர்ஸ் பறப்பாங்க… இதுல ஃபேன்டஸினா கேட்கவா வேணும்?

தொடக்கத்தில் டார்லிங் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்த மிக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார் இயக்குநர். ஒரு வழியாகக் கதைக்குள் கூட்டிவந்துவிட்டார் என இரண்டாம் பாதிக்கு ஆர்வமாக நாம் காத்திருக்க, ‘சும்மா பிராங்க் பண்ணோம், கேமரா பாருங்க’ என வேற ரூட்டில் பயணிக்கிறது கதை. இன்றைய நவீன ஆண்-பெண் உறவின் உளவியல் பிரச்னைகளை பேசுவார்கள் என்று நாம் எதிர்பார்த்திருக்க கோர்ட்-ரூம் ட்ராமாவாக ‘நீள்’கிறது படம்.

அதிலும் மொத்த பிரச்னையையும் டார்லிங் கதாபாத்திரத்தின் பக்கம் இருந்து மட்டும் காட்சிப்படுத்தியிருப்பது போங்கு. இதனாலேயே இவ்வளவு பெரிய பிரச்னையில் கதாநாயகியின் எண்ணவோட்டங்கள் என்ன என்பது விளங்கவே இல்லை. மிஷ்கின் என்ட்ரி, முனிஷ்காந்த் ஒன்லைனர்ஸ் என நம்மை சிரிக்கவைக்கும் காட்சிகள் இரண்டாம் பாதியில் அதிகம் இருக்கின்றன. ஆனால், இவை ஏற்கெனவே நீண்டுகொண்டே செல்லும் படத்தை இன்னும் நீளமாக்குகின்றன என்பதுதான் பிரச்னை. அதுவும் கதைக்கு வலு சேர்க்காமல் தனி காமெடி டிராக்போல வந்துபோவது மைனஸ்!

Bachelor

துணிச்சலான கதை… அதற்கு மிகவும் பொருத்தமான கிளைமாக்ஸ். ஆனால், அந்தப் புள்ளிக்கு எங்கெங்கோ சென்று கடைசியில் ஷார்ட்-கட் எடுத்து வந்துசேருகிறது திரைக்கதை. ஒரு வசனத்தில் அத்தனையும் டார்லிங் உணர்வதெல்லாம் சினிமாவில் மட்டுமே நடக்கும் அதிசயம்.

இரண்டாம் பாதியில் இன்னும் கவனம் செலுத்தி, தேவையில்லாத காட்சிகளைக் கத்தரித்திருந்தால் நம் மனங்களை வென்றிருப்பான் இந்த ‘பேச்சிலர்’!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.