“இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல!” – ஆசிரியர்

இலக்கியம் மனித வாழ்வின் சகல பரிணாமங்களையும் உள்ளடக்கியது, எல்லோருக்குமானது. தமிழ்ச் சூழலில்  பன்னெடுங்காலமாகவே எழுதுகிறவனுக்கும்  மக்களுக்குமான இடைவெளி  நீண்டதாகவே இருக்கிறது. எழுத்தாளர்களும் கவிஞர்களும் தங்களை இந்தச் சமூகத்தில்லிருந்து துண்டித்துக் கொண்டவர்களாக நினைத்துக் கொள்வதோடு மக்களுக்கான பிரச்னைகளின் போது களத்திற்கும் செல்வதில்லை.  கேரளத்திலோ கர்நாடகத்திலோ இந்த இடைவெளி இருப்பதாகத் தெரியவில்லை.  வெவ்வேறு அரசியல் பிரச்னைகளின் போது கேரளத்தில் எழுத்தாளர்கள் கட்டுரை எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் இறங்கிப் போராடுகிறார்கள்.  ஒன்றிய அரசு கொண்டு வந்த  பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது கேரளத்தின் முக்கிய எழுத்தாளர்கள் மக்களோடு நின்று போராடியது நினைவிற்கு வருகிறது. கர்நாடகத்தில் கெளரி லங்கேஷ் மக்கள் பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்ததற்காகவே அங்கிருக்கும் பாசிஸ்டுகளால் கொல்லப்பட்டார் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அனந்தமூர்த்தி, சித்தலிங்கைய்யா, லங்கேஷ் என கர்நாடகத்தின் முக்கிய எழுத்தாளர்கள் பலரும் அம்மாநில மக்களுக்கான களப்போராளிகளாகவும் திகழ்ந்துள்ளனர். தமிழ் எழுத்தாளர்களில் அரிதிலும் அரிதாக மிகச் சிலரே எழுதுவதோடு நின்றுவிடாமல் மக்களோடு களத்திலும் நிற்கக் கூடியவர்களாய் இருக்கிறார்கள்.

அ.முத்துக்கிருஷ்ணனை சிறுவயது முதலே தெரியுமென்றாலும் அவரின் மீது கூடுதலான மதிப்போடு கவனிக்கத் துவங்கியது 2002 ம் வருடம் அவர் இயக்கிய சேகுவேரா ஆவணப்படத்திற்குப் பிறகுதான்.

ஆவணப்படங்களும் குறும்படங்களும் அதிகம் பரவலாகாத அந்தக் காலகட்டத்தில் சேகுவேரா குறித்து எடுக்கப்பட்டிருந்த அந்த ஆவணப்படம் ஒரு அசாதாரண முயற்சி.

 அதே காலகட்டத்தில் வெவ்வேறு பத்திரிகைகளில் அவர் எழுதி வந்த கட்டுரைகளையும் வாசிக்கத் துவங்கியிருந்தேன். அரசியல், வரலாறு மட்டுமில்லாமல் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான வன்முறைகளை விளாசும் கட்டுரைகளென அவர் தீவிரமாக எழுதிக் கொண்டிருந்தார்.    இலக்கியத்தின் மீதான ஆர்வம் பெருகிய நாட்களில் ஒரு கலைஞனுக்கான தார்மீகப் பண்புகள் எதுவாய் இருக்க வேண்டுமென்பதை முதலில் உணர வைத்தது அவரின் எழுத்துகள்தான்.  

அ.முத்துக்கிருஷ்ணனின் இளம்பருவம் மும்பை, கோவா, ஹைதராபாத் என வெவ்வேறு நகரங்களில் கழிந்ததால் அவரால் தனது இருபதாவது வயதுவரை தமிழைக் கற்றுக் கொள்ளமுடியவில்லை. 1986 ம் வருடம் அவரின் குடும்பம் மதுரைக்குத் திரும்பியபின் மின்னனுவியல் மற்றும் தொலைதொடர்பியலில் இளங்கலை படிப்பை முடிக்கிறார்.   

சமூகத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்கிற அலைக்கழிப்பில் பயணிக்கத் துவங்குகிறார். பயணங்கள் அவருக்கு வாழ்வின் மீதான புதிய வெளிச்சங்களைத் தர, தனது பயணங்களின் வழி கிடைத்த அனுபவங்களை எல்லாம் எழுத வேண்டுமென்கிற உந்துதல் உருவாகிறது.

அ.முத்துக்கிருஷ்ணன்

வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்த அனுபவங்களும்,  பயணங்களும்   இந்திய சமூகத்தில் நிகழும்  பிரச்னைகளின் மீதான புரிதல்களை உருவாக்கியிருந்தது.  சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளால் தொந்தரவிற்கு உள்ளானவர், தான் கண்டுணர்ந்த  அனுபவங்களை ஆவணப்படுத்த நினைக்கிறார்.  இந்தியிலும் ஆங்கிலத்திலும் அவரால் எழுதமுடியுமென்றாலும் தமிழில் எழுதவேண்டுமென்பது அவரது விருப்பமாக இருக்கிறது.  முறையாக தமிழை கற்றுக் கொள்ளத் துவங்கியவர் அந்தக் காலகட்டத்தில்  தமிழின் முக்கிய எழுத்தாளர்களைச் சந்தித்து உரையாடுகிறார்.  ஒரு எழுத்தாளனுக்கு எத்தனை மொழிகளில் பரிட்சயமிருந்தாலும் தாய் மொழியில் எழுதவேண்டுமென்கிற பிடிப்பு முக்கியமானது. உலகின் மிக முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான கூகி வா தியாங்கோ கென்யாவைச் சேர்ந்தவர். துவக்கத்தில் தனது கதைகளையும் நாவல்களையும் ஆங்கிலத்தில் எழுதிப் புகழ்பெற்றவர். ஒரு காலகட்டத்திற்குப்பின் அந்த மொழிக்கு எதிராக இயங்குவதே காலத்தின் தேவை என்பதைப் புரிந்துகொண்டு

ஆங்கிலம் என்பதை பொதுமொழி என்பதை விடவும் காலனியாதிக்கத்தின் நீட்சியாகவே நாம் பார்க்க வேண்டும்.  மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்கள்  தங்கள் தாய்மொழியில் எழுதுவதுதன மிக முக்கியமான செயல்பாடு.

தமிழைக் கற்றுக் கொண்ட  வேகத்திலேயே இடதுசாரி பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதத் துவங்குகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றபோது க்யூப புரட்சியை ஆவணப்படுத்தும் விதமாக இவர் நடத்திய புகைப்படக் கண்காட்சி பெரும் கவனிப்பைத் தருகிறது.  இடதுசாரி இயக்கத்தினரோடு இணைந்து வேலை செய்யத் துவங்கியவர் பெருநிறுவனங்களால் எங்கெல்லாம் மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாம் சென்று அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து அவற்றை தமிழ் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார்.   கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின்போது குஜராத்திற்கும், விதர்பா மாவட்ட விவசாயிகளின் தற்கொலை பிரச்னைகளின் போது மகாராஷ்டிர மாநிலத்திற்கும் பயணித்து உண்மை நிலவரங்களை கண்டறிந்து  எழுதினார். ஸ்டெயின்ஸ் பாதிரியார் எரித்துக் கொல்லப்பட்டபோது காந்தமால் நகரத்திற்குப் பயணித்தவர்,  போஸ்கோ திட்டத்தை அறிய ஒடிஸாவிற்குப் பயணித்து உண்மை நிலையை கள ஆய்வு செய்து கட்டுரைகள் எழுதினார்.  இந்தக் கட்டுரைகள் தமிழ் பரப்பில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.  ஆப்பிரிக்க  கடற்கொள்ளையர்கள் குறித்து இவர் எழுதிய கட்டுரை மற்றவர்கள் எழுதியவற்றிலிருந்து முற்றிலும் புதிய கண்ணோட்டத்தோடு  வெளிப்பட்டதால் வெளியான காலத்தில் அதிகமாக வாசிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டது. இந்தக் கட்டுரைகள் அவருக்கு தனித்துவமானதொரு இடத்தைத் தந்ததோடு பல்வேறு மக்கள் பிரச்னைகளுக்காக ஏற்படுத்தப்படும் உண்மையறியும் குழுக்களில்  உறுப்பினராக அவரைத் தேர்ந்தெடுக்கும்படியும் செய்தது.   

உலகின் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் இந்தியாவிலிருந்து பாலஸ்தீன் வரை சென்ற அமைதிக்கான பயணத்தில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்டது முத்துக்கிருஷ்ணன் மட்டும்தான். பத்தாயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான இந்தப் பயணம் வெவ்வேறு நாடுகளின் வழியாகச் சென்று அங்கிருக்கும் அறிவுஜீவிகளோடு உரையாடும் வாய்ப்பை அவருக்கு ஏற்படுத்தியது.    

ஏராளமான பயணங்கள், களச்செயல்பாடுகளுக்குப் பின்னால்  முத்துக்கிருஷணனுக்கும்  சொந்த நிலத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமென்கிற உந்துதல் ஏற்படுகிறது. மதுரையின் வரலாற்றையும் , பண்பாட்டையும் வாசிக்கத் துவங்குகிறார்.

ஒரு நகரத்தில் அமையும் கோட்டைகளின் கோவில்களின் வழியாய் ஐநூறு அல்லது ஆயிரம் வருட வரலாற்றை வேண்டுமானால் நாம் அறிந்துகொள்ள முடியும். மலைகளின் வழியாகவும் ஆறுகளின் வழியாகவும் தான் நாம் நீண்ட வரலாற்றை அறிந்துகொள்ள முடியும்.  மனித வரலாற்றின் மிகத் தொன்மையான எச்சங்களை நாம் ஆற்றுப் படுகைகளிலும்  மலைப் புடவுகளிலும் தான் கண்டுகொள்ள முடிகிறது. ஆதி மனிதன் தனது நம்பிக்கைகளையும், வாழ்வையும், வேட்டையையும், சடங்குகளையும் பாறை ஓவியங்களாகத் தீட்டி வைத்துச் சென்றுள்ளான். இந்த ஓவியங்களின் வழியாகத்தான் நமக்கு அந்தக் காலகட்டத்தின் வரலாறு தெரியவருகிறது. சமவெளிகளில் மனிதர்கள் செழித்து வாழ்வதற்கு முன்பாகவே  மலைகளில் வரலாறு துவங்குவிட்டது. மதுரையைச் சுற்றி நாற்பதுக்கும் அதிகமான மலைகள் உள்ளன, இவற்றில் பலவும் 2500 வருடங்களுக்கு முன்பு  சமணர்களின் வாழ்விடமாய் இருந்துள்ளன. இப்படி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மலைகள் எல்லாம் கிரானைட் குவாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வெட்டி எடுக்கப்பட்டன. பல மலைகள் இன்று சுரண்டப்பட்டு வெறும் பாறைகளாக எஞ்சியுள்ள நிலையில் மிச்சமிருக்கும் மலைகளைக் காக்க வேண்டுமென்கிற நோக்கோடு அ. முத்துக்கிருஷணன் தனது நண்பர்களோடு இணைந்து  பசுமை நடை என்னும் அமைப்பைத் துவங்கினார்.

சமணர் வழங்கிவரும் ஒருசெய்யுள் எட்டுமலைகளின் பெயரைக் குறிப்பிடுகிறது.

இதில் கூறப்படும் எட்டு மலைகளில் முக்கியமானது யானமலை.   அரிதிலும் அரிதான ஒற்றைக்கல் மலை இது. இந்த மலையில் அரசு சிற்பக் கலைநகரம் உருவாக்குவதற்கான திட்டத்தை அறிவித்தது. வரலாற்றுப் புகழ் வாய்ந்த தனித்துவமான யானைமலையை சிதைக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக தீவிரமாகப் போராடிய முத்துக்கிருஷ்ணன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு  2010 ம்  யானைமலையை ஒட்டியுள்ள ஊர்களுக்குச் சென்று அந்த மலையின் வரலாற்று முக்கியத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொல்லி புரியவைத்தனர். சிற்பக் கலைநகரத் திட்டத்திற்கு சமூக ஆர்வலர்களிடமிருந்தும், பொதுமக்களிடமிருந்தும் கடுமையான எதிர்ப்பு உருவானதன் காரணமாய் அரசு அந்தத் திட்டத்தைக் கைவிட்டது.

யானைமலையைக் காப்பதற்காகத் துவங்கப்பட்ட பசுமைநடை அமைப்பினர்  அதன்பிறகு மதுரையைச் சுற்றியுள்ள மற்ற மலைகளையும் கிரானைட் குவாரிகளிடமிருந்து காக்கும் நோக்கோடு  ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மலையை நோக்கிப் பயணிக்கத் துவங்கினார்கள். கடந்த பதினோறு வருடங்களில் ஆக்கப்பூர்வமான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மதுரையைச் சுற்றியுள்ள ஏதாவதொரு வரலாற்று சிறப்பு வாய்ந்த இடத்திற்கு பயணிக்கும் இந்தக் குழு, அந்த இடத்தின் வரலாற்றுச் சிறப்புகள் குறித்து உரையாடுகிறார்கள். இந்த அமைப்பு மதுரையைச் சுற்றியுள்ள கிராம மக்களிடம் சமண மலைகள் குறித்த அறிதலையும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வையும் விதைத்து வருகிறார்கள். சுற்றுச்சூழல் குறித்த ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் இவர்கள் விருட்சத் திருவிழா, பாறைத் திருவிழா என மிக முக்கியமான முன்னெடுப்புகளைச் செயல்படுத்தி வருகிறார்கள்.

தொலைக்காட்சி விவாதங்கள் என்று இருந்தாலும் எழுதுவதிலும் அவர் சோர்வடையவில்லை. எழுத்தாளர் அருந்ததி ராயின் அப்சலைத் தூக்கிலிடாதே, தோழர்களுடனான ஒரு பயணம் என்ற இரண்டு முக்கிய நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளதோடு “குஜராத் 2002 இனப்படுகொலை”, “அமைதிக்காகப் போராடுவோம்”, “மதவெறி” மற்றும் “குரலின் வலிமை”  போன்ற வேறு சில நூல்களையும் தமிழில் மொழிபெயர்துள்ளார். இவற்றோடு  வெவ்வேறு சமூக பிரச்னைகள் குறித்து இவர் எழுதிய முன்னூறுக்கும் அதிகமான கட்டுரைகள் நூல்களாக வெளியாகியுள்ளன.  உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் கருத்தரங்குகளில் கலந்துகொண்டு  கீழடி நாகரீகம் குறித்தும் நமது பண்டைய வரலாறு குறித்தும் உரையாற்றி வருகிறார்.  

அ.முத்துக்கிருஷ்ணன்

எழுத்தாளன் என்பதையும் தாண்டி முத்துக்கிருஷ்ணன் தமிழ் அறிவுசார் சமூகத்திற்குத் தந்திருக்கும் பங்களிப்பு மகத்தானது.  நிறுவனமயப்படுத்தப்பட்ட எல்லாவற்றுக்கும் எதிரான கலைஞனான அவரது கட்டுரை ஒன்றின் இறுதிப் பகுதி இப்படி முடிகிறது,

“சமீபத்தில் ஜார்க்கண்ட் தலைநகரம் ராஞ்சிக்கு அருகில் இருக்கும் ஒரு மலைக் கிராமத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே பசுமை வேட்டைக்கு ஆளான ஒரு பழங்குடி கிராமத்தில் அவர்களைச் சந்தித்து உரையாடிவிட்டுக் கிளம்பும்போது அவர்களின் குடிசை வாசலில் இருந்த ஒரு மாமரத்தில் தொங்கும் மாம்பழங்களைப் பார்த்து, இன்னும் நாங்கள் இரண்டு மணி நேரம் பயணிக்க வேண்டும். பசியாக உள்ளது. ஒரு மாம்பழம் கிடைக்குமா என்றேன். உடனே மகிழ்ச்சியாக அவர் தனது மகனை ஒரு பழம் பறித்துத் தருமாறு கேட்டுக்கொண்டார். அந்தச் சிறுவன் உடனே மரத்தில் ஏறி ஒரு கிளையில் ஏறிக்கொண்டே இருந்தான். நான் மாம்பழம் கேட்டதே மிக அருகில் எளிதாக ஏறிப் பறிக்கும் வாய்ப்பு இருந்த ஒரு பழத்தைப் பார்த்துதான். இருப்பினும் அந்தப் பையன் விறுவிறுவென இரண்டு பழங்களுடன் இறங்கி வந்தான். எனக்குக் குழப்பமாக இருந்தது. இத்தனை எளிதாகப் பறிக்க முடியுமே, ஏன் இத்தனை சிரமப்பட்டு உச்சிக்குச் சென்றாய் என்றேன். அதற்கு அந்தப் பழங்குடி பெரியவர் கூறினார்:

அதில் ஒருபோதும் நாங்கள் பழங்களைப் பறிக்க மாட்டோம். நீங்கள் பார்த்த அந்தப் பழம் பறவைகளுக்குச் சொந்தமானது.” யாருக்குக் காடுகளின், காட்டுயிர்களின் மதிப்பு தெரியும்? யார் இதனுடன் இயைந்து வாழ்வார்கள், பாதுகாப்பார்கள்? உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.”

Also Read: ச.முருகபூபதி: நாடக நிலத்திலிருந்து ஒரு தொல்குடி பாடகன் | இவர்கள் | பகுதி – 9

2005 ம் வருடம் புதுச்சேரியில் அவரது ஆவணப்படம் திரையிட்டபோது அவர் இறுதியாய்ப் பேசிய வார்த்தைகள் இப்போது நினைவிற்கு வருகின்றன. “எல்லா நிறுவனப்படுத்தப்பட்ட அமைப்புகளுக்கு எதிராகவும் கேள்வி கேட்க நாடோடிகளால் மட்டுமே முடியும், இந்தக் காலகட்டத்தின் கலைஞன் ஒரு மகத்தான நாடோடியாக இருக்கவேண்டும்.” இந்த வார்த்தைகளின் அடையாளமாகத்தான் அ.முத்துக்கிருஷ்ணன் தெரிகிறார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.