பிரபல நகைச்சுவைப் பேச்சாளாரும் பாலிவுட நடிகருமான வீர் தாஸ் ‘இந்திய நாட்டின் நிலை’ குறித்து அமெரிக்காவில் முக்கிய மேடையில் பேசியவை ஒரே நேரத்தில் பாராட்டுகளையும் சர்ச்சையையும் பெற்று வருகிறது. அதுகுறித்து சற்றே விரிவாகப் பார்ப்போம்.

உலகப் புகழ்பெற்ற ஜான் எஃப் கென்னடி மையத்தில் தான் ஆற்றிய சிற்றுரை வீடியோவை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார் வீர் தாஸ். ‘நான் இரண்டு இந்தியாக்களில் இருந்து வருகிறேன்’ (I COME FROM TWO INDIAS) என்ற தலைப்பில் அவர் பேசியது ஒரு தரப்பிலிருந்து பாராட்டுதல்களையும், இன்னொரு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகளையும் குவித்து வருகிறது. அந்த நிகழ்வில் வீர் தாஸ் பேசியதன் முக்கிய அம்சங்கள்:

> “பெண்களின் நிலை: “பகல் நேரத்தில் பெண்களை தெய்வமாக வழிபட்டுவிட்டு, இரவு நேரங்களில் அவர்களையே கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்.

> கிரிக்கெட்: ஒவ்வொரு முறையும் பச்சை ஜெர்ஸி (பாகிஸ்தான்) அணியுடன் விளையாடும்போது, நீல ஜெர்ஸி வெற்றியடைய வேண்டும் என்ற ஆசைப்படும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன். ஆனால், பச்சை ஜெர்ஸியுடன் தோற்கும்போது திடீரென நீலம், காவியாக மாறுகிறது.

image

> அரசியல்: 30 வயதுக்கும் குறைவான உழைக்கும் மக்கள் அதிகம் கொண்ட இளைஞர்கள் வசிக்கும் நாட்டில் 75 வயது கொண்ட தலைவரின் 150 வருட மிகப் பழையமான சிந்தனைகளை செயல்படுத்த நினைக்கும் இந்தியாவில் நான் வருகிறேன்.

> பிஎம் கேர்: பிரதமருக்காக அக்கறை கொள்ளும் மக்களுக்கு, பிஎம் கேர் நிதி குறித்து தகவல் கிடைக்காத இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்.

> ஆளும் கட்சி: ஆங்கிலேய ஆட்சியை அகற்றிய பெருமையுடன், அரசாங்கத்தை ‘ஆளும் கட்சி’ என அழைக்கும் இந்தியாவில் இருந்து வருகிறேன்.

> விவசாயம்: நாங்கள் சைவம் உண்பவர்கள் எனப் பெருமையாக கூறிக்கொண்டு, காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகள் மீது வண்டிகளை ஏற்றும் இந்தியாவில் இருந்து நான் வருகிறேன்.

> வெளிநாட்டு வேலை: வீட்டு வேலையாக இருந்தாலும், டிரைவர் வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் அந்த வேலையை அமெரிக்காவில் சென்று பார்க்க விரும்பும் மனம் கொண்ட இந்தியாவில் இருந்து வருகிறேன்.

> பெட்ரோல் விலை: இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துஸ்வர்கள் என அனைவரும் ஒற்றுமையாக வாழும் இந்தியாவில் இருந்து வருகிறேன்; நாங்கள் அனைவரும் தற்போது ஒற்றுமையை தாண்டி இப்போது விண்ணை முட்டும் பெட்ரோல் விலையை மட்டுமே பார்க்கிறோம்.”

கொரோனா பேரிடர் முதல் பெட்ரோல் விலை வரை இந்தியாவின் இன்றைய நிலையை எடுத்துரைக்கும் விதமாக இந்தப் பேச்சு ஒருபுறம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபுறம் இன்னொரு தரப்பினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

பாலிவுட் திரைப்பட இயக்குநர் ஹன்சல் மேத்தா, நடிகர்கள் ரிச்சா சத்தா, அஷ்வின் முஷ்ரன் போன்ற பலர் வீர் தாஸ் பேச்சை பாராட்டி உள்ளனர். ஹன்சல் மேத்தா, “இது என்னை மிகவும் கவர்ந்துள்ளது. வீர் தாஸ் போல் தைரியம் கொண்டுள்ள இந்தியாவில் இருந்து வருகிறேன்” என்று பாராட்டியிருக்கிறார். அதேசமயம் நடிகை கங்கனா ரணாவத் முதலானோர் வீர் தாஸ் பேசியதை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நடிகர் வீர் தாஸை ‘கிரிமினல்’ எனக் கூறியிருக்கிறார் கங்கனா.

இதனிடையே, வீர் தாஸ் தனது சிற்றுரை மூலம் வெளிநாட்டில் இந்தியாவை அவமதித்ததாக கூறி பாஜக தரப்பில் புகாரும் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

– மலையரசு

| வாசிக்க > கொரோனா கால மாணவர் நலன் 10: சைபர் புல்லியிங் அத்துமீறல் – சிறாருக்கு சட்டம் சொல்லித்தாரீர்! |

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.