திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரை அடுத்த கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (38). இவர் கொட்டையூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். யுவராஜ் நேற்றைய தினம் வழக்கம்போல் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்குச் சென்று அலுவல் பணிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருடன் ஊராட்சி செயலாளர் வினோத் (22) என்பவரும் அங்கிருந்தார். அப்போது ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்திறங்கிய 6 மர்ம நபர்கள் நேரடியாக யுவராஜிடம் சென்று வீட்டு வரி செலுத்த வந்திருப்பதாகவும், உடனடியாக செலுத்த ஏற்பாடு செய்யுங்கள் நேரமாகிறது என்றும் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். அதற்கு, தலைவர் யுவராஜ் செயலாளர் வினோத் இருவரும், யார் நீங்கள், எந்த ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் என்று விசாரித்திருக்கின்றனர். அப்போது, சமாளிப்பதற்காகப் பதிலளித்துக் கொண்டிருந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஊராட்சி தலைவர் யுவராஜின் தலை, கழுத்து , தொடை என உடல் முழுவதும் சரமாரியாக வெட்டியிருக்கிறார்கள். அதைக் கண்டு அதிர்ந்து போன செயலாளர் வினோத், உயிர் பயத்தில் கூச்சலிட்டபடி அலுவலகத்தை விட்டு வெளியில் ஓடியிருக்கிறார். வினோத் கூச்சலிட்டதைக் கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பினர்.

Also Read: `இளைஞர் தலை துண்டித்துக் கொலை’ – ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரம்!

Murder (Representational Image)

மர்ம நபர்கள் வெட்டியதில் படுகாயமடைந்த யுவராஜ் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்ட பகுதி மக்கள் உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு யுவராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெட்டுக் காயங்கள் அதிகமாக இருந்ததால் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். அதைத் தொடர்ந்து, யுவராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து கொட்டையூருக்கு விரைந்த திருவள்ளூர் டி.எஸ்.பி சந்திரதாசன் மற்றும் மப்பேடு இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், யுவராஜை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தேர்தல் முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, போலீஸார் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்துத் தலைவர் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.