சென்ற மாதம், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஓர் உணவகத்தில், கெட்டுப்போன இறைச்சியில் செய்த சிக்கன் உணவு சாப்பிட்ட 10 வயதுச் சிறுமி பலியானார். மேலும் அந்த உணவகத்தில் சாப்பிட்ட 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தனர். அவ்வுணவகத்துக்கு உடனே சீல் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உணவகங்களில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

இந்நிலையில், தூத்துக்குடியில் பரோட்டா சாப்பிட்டு குளிர்பானம் அருந்திய தாய், மகள் பலி என்றும், திருப்பூர் மாவட்டம், சின்னூரில் வசித்து வரும் வடமாநிலத் தொழிலாளியின் 6 வயது மகன் ஜூஸ் குடித்த பின்னர் உயிரழந்ததாகவும் சென்ற வாரங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. குறிப்பிட்ட இந்த இரண்டு செய்திகளிலும் முதற்கட்ட விசாரணையில் உயிரிழப்புகளுக்கு உணவுப் பொருள்கள் காரணமில்லை என்று சொல்லப்பட்டு, விசாரணை தொடர்ந்து நடந்துவருகிறது.

என்றாலும், குறிப்பிட்ட ஓர் உணவுப் பொருளை சாப்பிட்டதால் மரணம் என்று அவ்வப்போது வெளிவரும் செய்திகள், மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளன. மேலும், உணவு நுகர்தல் குறித்த விழிப்புணர்வுடன் நாம் நடக்க உந்துகின்றன.

உலகம் முழுக்க 4,20,000 மரணங்கள்

ஃபரூக் அப்துல்லா

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 60 கோடி மக்கள் உணவு உட்கொள்ளுதல் சார்ந்த நோய்களால் அவதிக்குள்ளாகின்றனர் என்றும், அவர்களில் 4,20,000 பேர் மரணமடைவதாகவும் உலக சுகாதார நிறுவன அறிக்கை கூறுகின்றது. இந்த மரணங்களில் பெரும்பான்மை, மனித வளம் மிக அதிகமாகவும் உணவுத்துறை சார்ந்த கட்டுப்பாடுகள் மிகக் குறைவாகவும் இருக்கும் வளர்ந்து வரும் நாடுகளில் நிகழ்கின்றன. அதிலும் குறிப்பாக இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறைபாட்டாலும், உணவுத்துறையில் அதிகமாகிவிட்ட கலப்படத்தினாலும் உணவு உட்கொள்ளுதல் சார்ந்த நோய்களால் மக்கள் அவதியுறுவது அதிகரித்திருக்கின்றது.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆய்வகங்கள், இந்தியாவில் 80 லட்சம் பேருக்கு ஒன்று என்ற அளவிலேயே இருக்கின்றன. இந்த ஆய்வகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, அசுத்தமான அல்லது கெட்டுப்போன உணவை உட்கொள்வதால் உடனடி மரணம் நிகழுமா என்றால், ஆம்… அப்படி நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயம் உண்டு.

காரணங்கள்

அசுத்தமான அல்லது கெட்டுப்போன உணவில் இருந்த ஏதோ ஒரு பொருளால், அந்த உணவை உட்கொள்ளும் நபருக்கு தீவிர ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்கு மாமிச உணவுகளில் செம்மறி ஆட்டுக்கறி ஒவ்வாமையை விளைவிக்கும். சிலருக்கு ஒரு சில கடல் மீன்களை உண்ணும் போது பிரச்னை வரும்.

உணவு

Also Read: Doctor Vikatan: நன்றாகச் சாப்பிடுகிறேன்; ஆனாலும் எடை கூடவில்லை; என்னதான் தீர்வு?

இத்தகைய உணவுகளை அவர்கள் உண்ட பின் உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். இதனை உடனடியாக அடையாளம் கண்டு அதற்குரிய சிகிச்சை வழங்கப்பட்டு விட்டால் பிரச்னை சரியாகிவிடும். ஆனால் ஒரு சிலருக்கோ, இந்த ஒவ்வாமை தீவிர நிலையை அடைந்து மூச்சு விடும் பாதையை அடைத்துக்கொண்டு உடனே மரணம் விளையும். இந்த ஆபத்தை அனாஃபிலாக்சிஸ் (Anaphylaxis) என்று அழைக்கிறோம்.

ஓர் உணவில் சேர்க்கப்படும் பல்வேறு சேர்மானங்களினாலும் இந்த அதீத ஒவ்வாமை ஏற்படலாம். உதாரணம், உணவை ருசியாக்கச் சேர்க்கப்படும் செயற்கை பொருள்களும், கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கப் பயன்படுத்தப்படும் செயற்கை நிறமூட்டிகளும் சிலருக்குத் தீவிர ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அதனால் சில நேரங்களில் உடனடி மரணங்கள் கூட சம்பவிக்கலாம்.

மற்றொரு வாய்ப்பு, தீவிர உணவு சார்ந்த விஷத்தன்மை குறிப்பிட்ட உணவில் உருவெடுப்பது. மாமிசம் சார்ந்த உணவிலும் சரி, மரக்கறி சார்ந்த உணவிலும் சரி.. அந்த உணவுகளைச் சரியான முறையில், அது சமையலாகத் தேவையான சூட்டில் சமைக்காமல் விட்டாலோ, அதனை முறையான வெப்பநிலையில்/குளிர்சாதனப்பெட்டியில் பாதுகாக்காமல் விட்டாலோ அந்த உணவில் தீவிரத் தொற்று நிலையை உருவாக்கும் பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள் போன்றவை வளரும் சூழ்நிலை ஏற்படும். அந்தக் கிருமிகள் தங்களது விஷத்தன்மை உள்ள வேதிப்பொருளான டாக்சின்களை சுரந்து வைத்திருக்கும். அந்த உணவை ஒருவர் உட்கொள்ளும் போது, உடனடியாக தீவிர உணவு சார்ந்த விஷத்தன்மை நிலைக்கு ஆட்படுவார். அவருக்கு வயிற்றுவலி, தலைவலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். இத்தகையோரை உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை வழங்காவிடில், உடனடியாக மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது.

Chicken (Representational Image)

Also Read: உயிரைப் பறிக்குமா ஒவ்வாமை? அலர்ஜியில் வேண்டாம் அலட்சியம்! – எச்சரிக்கும் மருத்துவர்

இப்படி உடனடியாக மரணம் உண்டாக்கும் கிருமிகளில் பேசில்லஸ் சீரியஸ் (Bacillus cereus) என்ற பாக்டீரியா மிகவும் ஆபத்தானது. இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளான உணவை உட்கொள்ளும் ஒருவரை, சில மணிநேரங்களுக்கு உள்ளாக மரணிக்கச்செய்யும் அபாய ஆற்றல் இதற்கு உண்டு. எனவே உணவுப் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நம் அனைவருக்குமே தேவை.

நாம் கடைப்பிடிக்க வேண்டியவை!

1. உணவை முடிந்த வரை சமைத்த உடன் சாப்பிட்டு விடுவது சிறந்தது.

2. அவ்வாறு இயலாத சூழ்நிலையில் அதை பாதுகாத்து பின்னர் உண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அந்த உணவை அதற்குரிய முறையான குளிர் நிலையில், குளிர் சாதனப்பெட்டியில் பாதுகாக்க வேண்டும்.

3. குளிர் சாதனப்பெட்டியை அவ்வப்போது முறையாக சர்வீஸ் செய்ய வேண்டும். அதன் ஃப்ரீஸரில் சரியான டெம்ப்பரேச்சர் இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

4. அதிக நேரம் மின்சார துண்டிப்பு ஏற்பட்டிருந்தால் உள்ளே வைத்திருந்த உணவுப் பொருள்கள் கெட்டுப்போய் இருக்கலாம் என்பதால் தவிர்த்து விட வேண்டும்.

5. பழங்கள் மற்றும் காய்கறிகளை சமைக்கும் முன்பு நன்கு கழுவி விட வேண்டும்.

6. உணவை குளிர் சாதனப்பெட்டியில் இருந்து எடுத்து மீண்டும் பயன்படுத்தும் போது முறையாக சூடு செய்து உண்ண வேண்டும். அந்த உணவில் மிகச்சிறிய பகுதியை சுவைத்துப் பார்த்து அது உண்ண உகந்ததாக இருக்கிறதா என்பதை அறிந்து பிறகு குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும்.

Food (Representational Image)

Also Read: ஜூஸ் குடித்த வடமாநில சிறுவன் பலியான விவகாரம்; உண்மையில் நடந்தது என்ன?

7. இயன்ற வரை வெளி உணவகங்களில் உணவு உண்பதை தவிர்ப்பது நலம். தவிர்க்க இயலாத சூழ்நிலையில் நல்ல தரமான உணவை வழங்கும் உணவகங்களில் உணவு உண்பதை வாடிக்கையாகக் கொள்ள வேண்டும்.

8. செயற்கை நிறமூட்டிகள், சுவை கூட்டிகளைத் தவிர்க்கும் உணவகங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

9. உணவு சமைக்கும் முன்பும் உணவு உண்ணும் முன்பும் கைகளைச் சுத்தமாக சோப் போட்டுக் கழுவி விட வேண்டும்.

10. உணவை சாப்பிட்டு அதற்குப் பிறகான நேரத்தில் வாந்தி, குமட்டல், வயிற்று வலி, காய்ச்சல், பேதி தோன்றினால் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிச்சை பெற வேண்டும். சில மணிநேர தாமதம் கூட உயிருக்கு ஆபத்தானதாக மாறிவிடக்கூடும்.

உட்கொள்ளும் உணவு குறித்தும் அதன் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வுடன் இருப்பது நம் அனைவரின் கடமை.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.