தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ளது ஆதிச்சநல்லூர். ’உலக நாகரிகம் தோன்றிய முதல் இடம் ஆதிச்சநல்லூர்தான்’ எனப் பல அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். இது, சிந்துசமவெளி நாகரிகத்திற்கும் முந்தைய நாகரிகம் என வங்கதேசத்து அறிஞர் பானர்ஜி குறிப்பிட்டுள்ளார். இங்கு கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகள், மெசபடோமியா பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை ஒத்துள்ளதாகவும், சில ஆய்வுகள் கூறுகின்றன. இங்கு முதன்முதலாக 1876-ல் அகழாய்வு நடந்துள்ளது.

அகழாய்வுப் பணிகள் துவங்குவதற்கு முன் போடப்பட்ட பூஜை

கடந்த 2004-ம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை சார்பில் இங்கு நடத்தப்பட்ட அகழாய்வில் 169 முதுமக்கள் தாழிகள் உள்ளிட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த அகழாய்வின் முக்கியத்துவம் குறித்து நீதிமன்றத்தில் விளக்கப்பட்ட பிறகுதான் அகழாய்வுப் பகுதியைச் சுற்றி கம்பிவேலி போட நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையில், இரண்டு முதுமக்கள் தாழிகளை கார்பன் சோதனைக்காக அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு அனுப்பியதில் ஒன்று ’கி.மு 905’, மற்றொன்று ‘கி.மு 791’ஐ சேர்ந்து எனத் தெரிய வந்ததுள்ளது.

Also Read: சிவகளை அகழ்வாராய்ச்சி: 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் தொன்மை! – ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள்

அகழாய்வாளர்கள், தொல்லியல் ஆர்வலர்களின் மிகுந்த போரட்டத்திற்குப் பிறகு இதன் மாதிரி ஆய்வறிக்கையை மட்டும் சமர்ப்பித்தது மத்திய தொல்லியல்துறை. இங்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் தமிழக தொல்லியல்துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையில், கடந்த 2019-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ’ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்’ என ஒன்றிய நிதியமைச்சர், நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார்.

ஆதிச்சநல்லூர்

இதையடுத்து, 160 ஒன்றிய நினைவுச்சின்னங்கள் மத்திய மற்றும் தெற்கு மண்டலத்தில் உள்ள 21 தொல்லியல் தளங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலம் உருவாக்கப்பட்டது. இதன் கண்காணிப்பாளரான அருண்ராஜ் தலைமையிலான குழுவினர், இரண்டு கட்டமாக ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைத்திட, சில இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசு அகழாய்வு செய்வது தொடர்பாக, மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள், டெல்லியில் உள்ள அலுவலகத்திற்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தனர். தற்போது அதற்கான அனுமதி கடிதம் கிடைத்துள்ளது. இதையடுத்து, திருச்சி மண்டல மத்திய தொல்லியல்துறை கண்காணிப்பாளரும், ஆதிச்சநல்லூர் அகழாய்வு இயக்குநருமான அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப்பணிகள் துவங்கின. இந்த அகழாய்வு பணியைத் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ., ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட கனிமொழி

இந்த அகழாய்வுப் பணிகள் தொடர்ந்து 3 மாதங்கள் நடைபெற உள்ளன. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி கனிமொழி, “ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைவது மகிழ்சியளிக்கிறது. ஆனால், அகழாய்வுப் பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை, ரூ.17 கோடி போதுமானதாக இருக்காது. எனவே ஒன்றிய அரசு இந்தத் தொகையை உயர்த்தும் என நம்புவோம்” என்றார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்து தொல்லியல் துறை அதிகாரிகளிடம் பேசினோம், “தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இரும்புக்கால தொல்லியல் தளம் ஆதிச்சநல்லூர். இதைத் தொல்பொருள் தளமாக அபிவிருத்தி செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக அகழ்வாராய்ச்சி மற்றும் பாதுகாப்பு பணிகளை இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் விரைவில் மேற்கொள்ள உள்ளது. கடந்த 2004-ல் நடந்த முந்தைய சுற்று அகழ்வாராய்ச்சியில் மனித எலும்புக்கூடுகள், தமிழ் பிராமி எழுத்துகள், பானை ஓடுகள், இரும்புக்கால மக்களின் வாழ்விட தளங்களின் எச்சங்கள் கிடைத்துள்ளன. இந்தியாவில் தேசிய அளவில் முக்கியத்துவமுடைய சின்னமாக அறிவிக்க, அடையாளம் காணப்பட்ட 5 தொல்லியல் இடங்களின் பட்டியலில் ஆதிச்சநல்லூரும் இடம்பெற்றுள்ளது.

Also Read: “தேசிய நினைவுச்சின்னங்கள் பட்டியலில் ஆதிச்சநல்லூர். விரைவில் அறிவிப்பு!” – மத்திய அமைச்சர் தகவல்!

அகழாய்வு வரைபட விளக்கம்

தென்னிந்தியாவிலேயே இங்குதான் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் இந்த அருங்காட்சியகத்திலேயே பார்வைக்கு வைக்கப்படுவது மட்டுமில்லாமல், ஐரோப்பா மற்றும் சீனாவில் அமைந்துள்ள அருங்காட்சியகம் போல் இங்கே தொல்லியல் ஆய்வு நடந்த இடங்களில் கண்ணாடி மேற்கூரை அமைக்கப்பட்டு அதன் மீது சுற்றுலாப் பயணிகள் நடந்துகொண்டே பார்வையிடும் வகையில் ‘சைட் மியூசியம்’ உருவாக்கப்படவிருக்கிறது” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.