இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் கருத்துகள் அல்ல! – ஆசிரியர்

உலக வரலாற்றின் அழியாப் பக்கங்களில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்களின் வெற்றிப் பயணங்களை அணுகிப் பார்த்தால் அவை பெரும்பாலும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி அனிச்சை செயலாக துவங்கியவையாகவே இருந்திருக்கின்றன. வனங்களில் வாழும் யானைகள் புரட்டிப் போடும் பாறைகளால் நதிகளின் திசை மாறி அவை மனித நாகரிகங்கள் உருவாக காரணமாகிவிடுவதைப் போல சில மனிதர்களின் வாழ்வும் அவர்கள் மானுடத்தின் பால் கொண்ட பேரன்பினால் புரிந்த செயற்கரிய செயல்களும் காலப்போக்கில் வருங்காலத் தலைமுறைகளின் வழிகாட்டிகளாகவும் தலைவர்களாகவும் அவர்களை மாற்றி விடுகின்றன.

‘நிலம்’ அறக்கட்டளை மற்றும் ‘நீர்த்துளிகள்’ இயக்கத்தின் வாயிலாக இடையறாத சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டுப் பணிகளால் இன்றைய இளையத் தலைமுறையின் முன்னோடியாகத் திகழ்பவர் நீலகண்டன் அவர்கள்.

இவர்கள்

சராசரி நடுத்தர வர்க்கத்தில் பிறந்த நீலகண்டன் ஒரு கணிணி அறிவியல் பட்டதாரி. தனியார் துறையில் தனக்கு அமைந்த வேலையைத் துறந்து குடும்பச் சூழல் காரணமாக தந்தையின் வியாபரத்தை கவனிக்க வேண்டியக் கட்டாயத்தில் தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குத் திரும்புகிறார். தனது இளம்பிராயத்தில் ஒரு முறை திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு சிலர் கேட்பாரற்றுக் கிடந்த மனித சடலங்களை மீட்டு அவர்களுக்கு இறுதி மரியாதை செய்து நல்லடக்கம் செய்வதைப் பாரக்கிறார். அவரது மனதில் அக்காட்சி பெரும்பாதி்ப்பை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார். சைக்கிளில் அவர்களைக் கடந்து சென்றவர் திரும்பவும் அவ்வழியே வந்து அவர்களிடம் விசாரிக்கிறார். சகமனிதர்களையும் உறவுகளையும் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே மதிப்புடன் பார்க்கத் தவறும் மனிதர்கள் வாழும் உலகில், உற்றார் உறவினர் நண்பர்களென எவ்வித உறவு வட்டத்திற்குள்ளும் வராத முகம் தெரியாத யாரோ சிலர் மனிதம் என்ற உணர்வினால் மட்டுமே உந்தப்பட்டு அவர்களின் ஆன்மா சாந்தியடையும் ஈமக்கிரியைகைளைச் செய்வதென்பது அவ்வளவு எளிதில் கடந்து விடக்கூடிய விஷயம் அல்ல.

தனது வாழ்வின் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொண்டு நாற்பது வயதிற்கு மேல் தானும் அத்தகைய சேவையில் ஈடுபட வேண்டும் என்று மனதோடு உறுதியெடுக்கிறார் நீலகண்டன். ஆனால் காலம் அவரை நெடுநாள் காத்திருக்க வைக்கவில்லை. வல்லவர்களின் தேவை எப்பொழுதும் இருப்பதில்லை ஆனால் நல்லவர்களின் தேவை காலமுள்ள வரை இச்சமூகத்திற்கு இருக்கும். அப்படி துவங்கியதுதான் திரு. நீலகண்டனது சேவையும் பயணமும்.

தனது கடமையெனக் கருதி அவர் ஆற்றும் அரும்பணிகள் காலத்தின் சுவடுகளாக மாறுமென்பதில் சந்தேகமில்லை.

Also Read: செபாஸ்தியன் – கலையின் வழியாக அடையாளங்களை மீட்டெடுத்த மலேசியத் தமிழர்: இவர்கள் | பகுதி 3

‘நீர்த்துளிகள்’ எனும் எண்ணத்தை தன்னார்வத் தொண்டு நிறுவனமாக மாற்றிய தனது நண்பரான திரு.ராகவனுடன் சேர்ந்து திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிகளின் நன்னீர் குளங்களைத் தூர்வாரி பராமரிக்கும் பணிகளிலும் தொடர்ந்துத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார் நீலகண்டன். “நீரின்றி அமையாது உலகு” என்னும் முதுமொழிக்கேற்ப மண்ணின் செழுமை பாதுகாக்கப் படவும், சுற்றுச்சூழல் அமைப்பின் சமநிலை குலையாமலிருக்கவும் நீர்நிலைகள் செப்பனிடப்பட்டு மழைநீரும் நிலத்தடி நீரும் முறையே பாதுகாக்கப்படுவதன் அவசியத்தை உணர்ந்துத் துவங்கப்பட்ட ‘நீர்த்துளிகள்’ அமைப்பின் முன்னெடுப்புப் பணிகளை திரு. நீலகண்டன் பட்டியலிட்ட பொழுது நம்மால் அவ்வமைப்பில் உள்ள அனைவரின் ஈடுபாட்டையும், தன்னம்பிக்கையையும் விடாமுயற்சியையும் வியக்காமலிருக்க முடியவில்லை.

தூர்வாருதல்

முதற்கட்டமாக திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தீர்த்த குளங்களை தூர்வாரி பயன்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்து குளங்களை தூர்வாரும் பணியில் நீலகண்டன், இராகவன் மற்றும் அவ்வமைப்பின் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையை சுற்றிலும் 365 குளங்கள் இருந்துள்ளன. ஒவ்வொரு நாளும் ஒரு குளத்தில் இருந்து நீர் எடுத்து சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் செய்து பூஜைகள் ஒரு காலத்தில் நடந்துள்ளது காலப்போக்கில் இது கைவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சுற்றியிருந்த பல குளங்கள் காணாமல் போய் விட்டன. அவற்றில் சுமார் 120 குளங்கள் மட்டுமே இப்பொழுதும் நீர்ப்பிடிப்போடு இருக்கின்றன. அவற்றுள் பூமந்தாள் தீர்த்த குளம், சரஸ்வதி தீர்த்தம், பச்சையம்மன் தீர்த்தம், பிள்ளையார் தீர்த்தம், சோமவார தீர்த்த குளம், நந்தி தீர்த்தம், தர்மராஜா தீர்த்தகுளம், வேடியப்பன் குளம், ஆகியவற்றை தூர்வாரி பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அண்ணாமலையார் ஆலய வழிப்பாட்டிற்கும் உகந்ததாக மாற்றியுள்ளனர் ‘நீர்த்துளிகள்’ அமைப்பினர்.

தூர்வாருதல்

பூமந்தாள் தீர்த்தக் குளத்தின் நீரானது நாவிற்கினிய சுவையோடு பசிப்பிணிப் போக்கும் வல்லமைக் கொண்டதாகக் கருதப்படுகிறது. இதனைக் கூறும் பொழுதே நீலகண்டனின் குரலில் ஆர்வம் பற்றிக் கொள்கிறது. திருவண்ணாமலையாரின் அனுதின திருமஞ்சன நீராட்டிற்கு பூமந்தாள் குளத்து நீர் பயன்படுத்தப்பட்ட மரபு இருந்திருக்கிறது. 2003 ஆண்டு வரை அக்குளத்தின் தூய்மையை பராமரிக்கும் பொருட்டு நகராட்சி சார்பில் இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது ஆச்சரியமூட்டும் தகவலாக இருந்தது. காலப்போக்கில் பராமரிப்புப் பணிகள் குறைந்ததால் குளத்தின் நீர்ப்பிடிப்பு வற்றிப்போய் பயன்பாட்டிற்கும் ஆகாமல் போய்விட்டது. இராகவன் மற்றும் நீலகண்டன் இருவரும் குளத்தைத் தூர்வாரும் முயற்சிகளுக்காக உதவிகள் நாடியும் அவை கிடைக்காமற் போகவும், தாங்களே அவ்வரும்பணியைக் கையிலெடுத்து செவ்வனே செய்து முடித்தனர்.

சுமார் அறுபது நிரந்தரத் தன்னார்வ உறுப்பினர்கள் கொண்ட ‘நீர்த்துளிகள்’ அமைப்பின் மூலமாக இதுவரை திருவண்ணாமலை சுற்று வட்டாரப் பகுதிளின் பதினாறு குளங்களும் ஒரு முழு ஏரியும் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப் பட்டுள்ளது. குளங்கள் பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் வன அமைப்பு முயற்சியாக கடந்த 2018 ஆம் ஆண்டு அண்ணாமலை கிரிவலப் பாதையில் மட்டும் சுமார் 2000 மரக்கன்றுகள் நட்டு அவற்றை முறையாக பராமரிக்கும் பணிகளையும் நீலகண்டனும் அவர்களது நண்பர்கள் அமைப்பும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

அதற்கு தொடர்ந்த ஈடுபாடும், கண்காணிப்பும் அவசியம் என்கிறார் நீலகண்டன். அதனாலேயே அவர்கள் அடுத்தடுத்து புதிய முன்னெடுப்புகளில் கால் வைக்குமுன் இதுவரை துவங்கிய பணிகளை தொடர்ந்து செவ்வனே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். எந்த சுய விருப்பு வெறுப்புமின்றி செயலபடும் இவர்கள் தனியார் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் வற்புறுத்தி நுழைந்து ஏதும் செய்வதில்லை. அவ்வாறு செய்வதால் உண்டாகும் விளைவுகளைச் சந்தித்துப் போராடுவதைக் காட்டிலும் ஆக்கபூர்வமான செயல்களில் ஈடுபடுதல் நலம் என்பது நீலகண்டன் போன்றோரின் கண்ணோட்டமாக உள்ளது. அது நியாயமானதும் கூட.

நீர்த்துளிகள் மற்றும் நிலம் அறக்கட்டளையின் ஆணிவேராகத் திகழ்பவர்கள் இவ்வமைப்பின் உறுப்பினர்கள்.

தூர்வாருதல்

சமூக வள மேம்பாடென்னும் ஒரு விசையால் இயக்கப்படுபவர்கள். பல்வேறு தொழில் துறையைச் சார்ந்தவர்களும் இவ்வமைப்புகளில் தொண்டாற்றி வருகின்றனர். இளைஞர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்ற பொதுப்புத்திக் கருத்துகளை பொய்யாக்கும் இவர்களைப் போன்ற இளைஞர்களின் பார்வை வருங்காலத்திற்கான நம்பிக்கைக் கீற்றுகள் என்றே கூற வேண்டும்.

தமது சமூகப் பணிகளுக்குத் தேவையான இயந்திரங்கள் மற்றும் அது சார்ந்த உதவிகளை உள்ளூர் ரோட்டரி சங்கங்கள் மற்றும் லயன்ஸ் கிளம் போன்ற அமைப்புகளிடமிருந்தும், வேறு பல தொண்டு நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக் கொள்வதாகக் கூறினார். சமூக நலனுக்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு பெரும்பாலும் யாரும் தடை சொல்வதில்லை என்று தனது அனுபவத்தின் வாயிலாக உணர்ந்ததாக அவர் கூறினார். ஒருவேளை யாரேனும் தடை விதித்தாலும் , அவை தடைகளாகவே மறைந்து விட்டதாகவும் தங்களது பயணத்தை அவை ஒரு நாளும் நிறுத்தும் வல்லமையைப் பெற்று விடவில்லை என்ற பொழுது அவரது மென்மையான குரலிலும் வன்மை தொனித்தது.

நீலகண்டன்

பொருளீட்டுதல், புகழீட்டுதல் போன்ற பயன்களின் மேல் நாட்டம் கொள்ளாமல் சமூகத்தின் நன்மைக்காக மட்டுமே செயல்படும் திரு நீலகண்டன் போன்றோரது பயணங்களிலிருந்து நாம் பெறும் பாடங்கள் அனேகமுண்டு.

திரு. நீலகண்டன் போன்றோர் சிட்டெறும்புகள் போன்றவர்கள். அவர்கள் மலைகளையும் தமது தோள்களில் சுமந்து செல்லத் துணிபவர்கள். சமூக நலனும் மனிதமும் மட்டுமேத் தழைக்க வேண்டி தம்மை வருத்திக் கொண்டு பயணிக்கும் இவர் போன்றோரால் “பெய்யெனப் பெய்யும் மழை”.

-தொடரும்.

Also Read: `முதுகுடி மக்களின் தோழர்’ வி.பி.குணசேகரன் | இவர்கள் – பகுதி 2

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.