பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபர் ரோட்ரிகோ டியூட்டர்டே (Rodrigo Duterte) அரசியலில் இருந்து விலகுவதாகவும், அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். 1945-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாசின் நகரில் பிறந்த, டியூட்டர்டேவின் தந்தை வின்சென்ட் டியூட்டர்டே வழக்கறிஞராகவும், அரசியல்வாதியாகவும், மேயராகவும் இருந்துள்ளார். தயார் சோலேடட் டியூட்டர்டே (Soledad Duterte) ஆசிரியராவார். ரோட்ரிகோ எலிசபெத் என்பவரை 1973-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு பவுலோ (Paolo), செபாஸ்ட்டியன் (Sebastian) என்ற இரண்டு மகன்களும், சாரா (Sara) என்ற மகளும் உள்ளனர். தற்போது ரோட்ரிகோவின் மூன்று பிள்ளைகளுமே அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரோட்ரிகோ டியூட்டர்டே

சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக இருந்த ரோட்ரிகோ. 1986-ம் ஆண்டு துணை மேயரின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு மேயர் தேர்தலில் சுயேட்ச்சையாகப் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். பெரும் மக்கள்தொகை கொண்ட மிண்டானாவோ மாகாணத்தின் டவாவோ (Davao) நகரத்தின் மேயராக பணியாற்றியுள்ளார். இந்த நகரத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக மேயராக பணியாற்றியவர் என்ற பெருமையைப் பெற்றவர் ரோட்ரிகோ டியூட்டர்டே.

வழக்கறிஞரான ரோட்ரிகோ, மேயர், துணை மேயர், பாராளுமன்ற உறுப்பினர் என்று பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானவர். அதே நேரத்தில் பல்வேறு தொடர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொள்பவர். ரோட்ரிகோ தனது 71-வது வயதில் கடந்த 2016-ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் 16-வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ரோட்ரிகோ டியூட்டர்டே மற்றும் குடும்பத்தினர்

ரோட்ரிகோ டியூட்டர்டேவிடம் பலமுறை அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டுகோள் விடுத்தும் அதனை அவர் ஏற்கவே இல்லை. கடைசியாக 2015-ம் ஆண்டு, தான் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். மேலும் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 39 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அதே நேரத்தில் ரோட்ரிகோவின் மகள் சாரா டவாவோ நகரத்தின் மேயராக பதவி வகித்துவருகிறார். அவரின் மகன் செபாஸ்ட்டியன் இந்த நகரத்தின் துணை மேயராக உள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக டவாவோ நகரத்தின் மேயராக ரோட்ரிகோ பதவி வகித்துள்ளார். அந்த நகரத்தில் அதிகரித்துக் காணப்பட்ட போதைப் பொருட்களுக்கு எதிராகவும், குற்றங்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டார். அந்த நகரத்தில், போதைப் பொருட்கள் வாங்குபவர்கள், விற்பவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், சட்டவிரோத குழுக்கள், குற்றவாளிகள் எனப் பலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்காக அவர் ஒரு குழுவை (Davao Death Squad) தன்னுடனே வைத்திருப்பதாகவும் விமர்சனம் எழுந்தது.

ரோட்ரிகோ டியூட்டர்டே

இவரின் கடுமையான நடவடிக்கையால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்திற்கும் அதிகம் என்கிறது சர்வதேச ஊடகங்கள். இவர் பிலிப்பைன்ஸின் அதிபராகப் பதவியேற்ற நேரத்தில், இவரால் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழக்கக்கூடும் என்று விமர்சனம் வைக்கப்பட்டது. இவரின் நடவடிக்கைகளுக்கு மனித உரிமை ஆணையம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. ஆனால் எதுபற்றியும் ரோட்ரிகோ கவலைப்பட்டதே கிடையாது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். பிலிப்பைன்ஸ் அதிபராகப் பதவியேற்றதும் இவரின் பல்வேறு அதிரடி நடவடிக்கை சிலரிடம் வரவேற்பைப் பெற்றிருந்தபோதிலும் பெரும்பாலான மக்களிடையே ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது.

Also Read: முறைகேடு சர்ச்சையில் சச்சின்: `பாரத ரத்னா’ விருதுக்குக் கறையா? – ஒரு பார்வை

பிலிப்பைன்ஸின் “கொலை தலைநகரம்” என்று கூறப்பட்ட டவாவோ நகரம் தற்போது “தென்கிழக்காசியாவின் மிகவும் அமைதியான நகரமாக உள்ளது” என்று தெரிவிக்கும் டியூட்டர்டே, இந்த நிலைக்கு குற்றம் செய்த அனைவரையும் கொன்றதால் வந்திருக்கிறோம் என்றும் பகிரங்கமாக அறிவித்தார்.

ரோட்ரிகோ டியூட்டர்டே மற்றும் குடும்பத்தினர்

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே பிலிப்பைன்ஸின் அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் தான் போட்டியிடப்போவது இல்லை என்றும். தீவிர அரசியலிலிருந்து தான் முற்றிலுமாக விலகப் போகவதாகவும் ரோட்ரிகோ அறிவித்துள்ளார். மேலும், அதிபர் தேர்தலில் தனது மகள் சாரா போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பத்திரிகையாளரிடம் பேசிய ரோட்ரிகோ, “நான் அரசியலிலிருந்து முழுமையாக விலகப் போகிறேன். எனக்குப் பதவி ஆசை கிடையாது. மக்கள் நான் அதிபராக இருப்பதற்குத் தகுதி இல்லாதவன் என்று எண்ணுகிறார்கள். அப்படி அவர்கள் நினைக்கும்போது நான் தேர்தலைப் போட்டியிடுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று கூறியிருந்தார். தற்போது டவாவோ நகரத்தின் மேயராக இருந்துவரும் சாரா, அதிதீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபர் தேர்தலில் சாரா போட்டியிட்டால் அவர் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.