நெல்லை மாவட்டத்தில் வள்ளியூர், ராதாபுரம், நாங்குநேரி, திசையன்விளை ஆகிய யூனியன்களில் இன்று இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர்.

வாக்குச் சாவடியில் எஸ்.பி மணிவண்ணன் ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் எனக் கண்டறியப்பட்ட 70 வாக்குச் சாவடிகளில் மாவட்ட எஸ்.பி-யான மணிவண்ணன் தலைமையில், 5 ஏ.டி.எஸ்.பி-கள், 15 டி.எஸ்.பி-கள் மற்றும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். நெல்லை மாவட்ட தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஜெயகாந்தன் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்து வருகிறார்.

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தனது சொந்த கிராமமான லெப்பைக்குடியிருப்பில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச் சாவடியில் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.

வாக்களித்த சபாநாயகர் அப்பாவு

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆவரைகுளம் வாக்குச் சாவடியில் தி.மு.க எம்.பி-யான ஞானதிரவியம் வாக்களித்தார். அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை, தனது சொந்த ஊரான நவ்வலடி கிராமத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கலிங்கப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் ம.தி.மு.க பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ தனது மகன் துரை வைகோவுடன் வரிசையில் காத்திருந்து ஜனநாயகக் கடமையாற்றினார்.

வாக்களித்த துரை வைகோ மற்றும் வைகோ

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, ”ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலும் ஆளுங்கட்சியான தி.மு.கவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அமோக வெற்றியைக் கைப்பற்றும்” என்றார்.

Also Read: உள்ளாட்சித் தேர்தல்: T23 புலி அச்சத்தையும் மீறி வாக்குகளைப் பதிவு செய்து வரும் மசினகுடி மக்கள்

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சமபவம் குறித்து கேட்டதற்கு, “உத்தரபிரதேசத்தில் தாலிபான்கள் ஆட்சியை விடவும் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. அங்கு நடந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது அதிகபட்ச தண்டனை கொடுக்க வேண்டும். ஆனால், அந்த மாநில அரசு குற்றவாளிகளைப் பாதுகாக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்தார்.

வைகோவிடம் செய்தியாளர்கள், அவரது மகன் துரை வைகோ அரசியலுக்கு வருவாரா என்று கேட்டதற்கு, “நான் என்னுடைய வாழ்க்கையின் 56 வருடங்களைப் பொதுவாழ்வில் செலவழித்துள்ளேன். அதில் 28 வருடங்களில் லட்சக்கணக்கான மைல்கள் காரில் பயணித்துள்ளேன். ஆயிரக்கணக்கான மைல்கள் நடைப்பயணமாகச் சென்றிருக்கிறேன். நூற்றுக்கணக்கான போராட்டங்களில் ஈடுபட்டு ஐந்தரை வருடங்கள் சிறையில் கழித்துள்ளேன்.

என் மகனுக்கு அத்தகைய கடினமான நிலை வேண்டாம் என்பது என் கருத்து. என்னோடு போகட்டும் அரசியல் என்று நினைக்கிறேன். ஆனாலும் கட்சிக்காரர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. வரும் 20-ம் தேதி நடக்கவுள்ள மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியினர் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.