எதையும் பிராக்டிக்கலாக பார்க்கக்கூடிய டாக்டர் சிவகார்த்திகேயன். எல்லாவற்றிலும், எமோஷனல் எதிர்பார்ப்பவர் பிரியங்கா மோகன். அதனாலேயே, அரங்கேற்ற காதல் கைகூடாமல் கல்யாணத்துக்கு முன்பே பிரேக் அப் ஆகிவிடுகிறது. பிரியங்காவின் அண்ணன் மகள் காணாமல் போக, உதவிக்கு வரலாமா என மீண்டும் உள்ளே வருகிறார் டாக்டர். அர்ச்சனா, அருண் அலெக்ஸாண்டர், இளவரசு, பிரியங்கா எனப் பெரிய குடும்பத்துடன், யோகிபாபு, கிங்ஸ்லீ, சுனில் என ஒரு பெரும் கூட்டத்தை ‘ஆன் போர்ட்’ ஏற்றி வில்லன்களைச் சமாளிக்கச் செல்கிறார் டாக்டர். சாதாரண ரவுடியில் ஆரம்பித்து இந்த நெட்வொர்க் அகல விரிய, அடுத்தடுத்த சுவாரஸ்யங்கள் மூலம் இரண்டரை மணிநேரம் சிரிப்பு மூட்டுகிறது ‘டாக்டர்’.

டாக்டர்

டாக்டர் வருணாக சிவகார்த்திகேயன். மாஸ் இன்ட்ரோ பாடல் இல்லை, அடிதடி இல்லை, பன்ச் இல்லை இருந்தாலும் ‘அட செம்மல்ல’ என ஒட்டிக்கொள்கிறார். ‘இங்குப் பேச்சைக் குறைக்கவும்’ மோடில் வந்துவிழுகின்றன வார்த்தைகள். சட்டையின் காலர் பட்டன் போடுவது, கத்தரித்துப் பேசுவது, மூக்குக் கண்ணாடி என ஆளே மாறியிருக்கிறார். வாழ்த்துகள் சிவகா!

நாயகியாகப் பிரியங்கா மோகன். ரொமான்ஸ் இல்லை என்றாலும், கொஞ்சம் லூஸு பெண் கேரக்டர்தான் என்றாலும் படம் நெடுக வருகிறார். சில இடங்களில் கிச்சுகிச்சும் மூட்டுகிறார்.

படத்தின் ஆகப்பெரும் பலம் அதன் துணை நடிகர்கள். யோகி பாபுவில் ஆரம்பித்து சுனில், ரெஜின் கிங்ஸ்லீ என எல்லோரும் கலக்கியிருக்கிறார்கள். தன் முதல் படமான ‘கோலமாவு கோகிலா’வில் இருந்தே ரெஜின் பேசும் மாடுலேஷன்தான் என்றாலும், அவர் வரும் காட்சிகளில் சிரிக்க வைக்கத் தவறுவதில்லை. வழக்கமான உருவக்கேலி வசனங்களைக் கடந்து யோகி பாபுவின் ஒன்லைனர்கள் சிரிக்க வைக்கின்றன. சைலன்ட் கில்லர் வில்லனாக வினய். பெரிதாக அவருக்கான காட்சிகள் இல்லாததால், வில்லத்தனங்கள் பெரிய பாதிப்பைத் தர மறுக்கிறது.

டாக்டர்

படத்தின் ஹீரோ சந்தேகமே இல்லாமல் சிவகார்த்திகேயன்தான். அடுத்த ஹீரோ யார் என்பதற்குத்தான் அனிருத் மற்றும் நெல்சன் இடையே கடும் போட்டி! எங்கும் சோர்வடையாத என்டர்டெயினராக படம் விரிவதற்கு நெல்சனின் திரைக்கதை பலம் சேர்க்கிறது என்றால், நடிகர்களிடமிருந்து காமெடியை வாங்குவதிலும் ஓர் இயக்குநராகச் சம்பவம் செய்திருக்கிறார் நெல்சன்.

அந்த ‘கசகச’ தொடங்கி, கிடைக்கும் கேப்பில் எல்லாம் தன் இருப்பை உணர்த்திக்கொண்டே இருக்கிறார் அனிருத். பாடல்கள் வைரல் என்றால், பின்னணி இசை ஒரு சாதாரண காட்சியைக்கூட அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. மாஸ் மொமென்ட்களில் எப்போதுமே ஜொலிக்கும் அனிருத் டார்க் ஹுயுமரிலும் சைலன்ட்டாக ஸ்கோர் செய்கிறார். விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு வித்தியாச கோணங்கள் தொடங்கி, படம் நெடுக அந்த டார்க் தீமுக்கான உணர்வைத் தவறவிடாமல் பிரதிபலித்திருக்கிறது.

குழந்தைகள் கடத்தல் நெட்வொர்க் யார், அந்தக் கும்பலின் ஆணி வேர் எது என நீளும் கதையை, முழுக்க முழுக்க டார்க் காமெடிகளைக் கொண்டு நிரப்பியிருக்கிறார்கள். அது அட்டகாசமாகப் பொருந்தியும் வந்திருக்கிறது. டார்க் ஹுயூமர் என்கிற ஜானரில் நான் ‘பீஸ்ட்’ என்கிறார் நெல்சன். ஐலைனரை எல்லாம் ஒரண்டை இழுத்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ‘லாஜிக்கா, அதெல்லாம் எதுக்கு?’ என்கிற போக்கிலேயே கடைசிவரை டீல் செய்திருக்கிறார்கள்.

டாக்டர்

என்னதான் பிளாக் காமெடி என்றாலும், முகம் சுளிக்கவைக்கும் யோகி பாபுவின் உருவக்கேலி காமெடிகளும், புடவை கட்டுவதை, பூ வைப்பதைத் தண்டனையாகக் காட்டுவதும் இயக்குநரின் பிற்போக்கு அபத்தங்களே!

இப்படிச் சில இடங்களில் படம் சறுக்குவதால் அந்தக் காட்சிகளில் இருக்கும் ‘நகைச்சுவை’யை நம்மால் இயல்பாக ரசிக்க முடியவில்லை.

கொரோனா 2-வது சீசனுக்குப் பிறகு, தியேட்டரில் மக்களை ஆரவாரம் செய்து ரசிக்கவைக்கும்படியான படமாக அவர்களின் குடும்ப டாக்டர் ஆகிறார் இந்த ‘டாக்டர்’.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.