கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இது சட்டவிரோதம் எனவும் இதனால் தமிழ்நாடு கடுமையாக பாதிக்கும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை, “மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது உறுதி. மத்திய அரசின் உதவியுடன் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முயன்று வருகிறோம். கர்நாடக அரசின் இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. காவிரி நீர் கர்நாடகாவில்தான் உற்பத்தி ஆகிறது. காவிரி நீரை தமிழக அரசு கொடுக்கவில்லை. கர்நாடகாதான் காவிரி நீரைக் கொடுக்கிறது. எனவே, மேக்கேதாட்டூ திட்டம் கர்நாடகாவின் கையில்தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் கையில் எதுவும் இல்லை. மேக்கேதாட்டூ திட்டத்தை அவர்களால் தடுக்க முடியாது. தமிழ்நாடு அரசு எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு எவ்வித அர்த்தமும் இல்லை. 100 சதவிகிதம் மேக்கேதாட்டூ திட்டத்தை நிறைவேற்றுவோம்’’ எனத் தெரிவித்திருந்தார்.

பெ. மணியரசன்

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள, காவிரி உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ.மணிரசன், “காவிரிநீரை கர்நாடகா பிச்சைப்போடுவது போல் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார். பன்னாட்டு சட்டத்தின்படியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் காவிரி நீர் தமிழ்நாட்டின் மரபுரிமை. கர்நாடக முதல்வர், தமிழ்நாட்டை மிக கேவலமாக விமர்சித்துள்ளார். ஆனால், அதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் இதுவரையில் கண்டனம் தெரிவிக்கவில்லை’’ எனக் கொந்தளிக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பெ.மணியரசன், “உலகில் நீண்ட நெடுங்காலமாக இயல்பாக ஓடி வரும் ஆறுகள், பல நாடுகளுக்கு இடையே பயணம் செய்கின்றன. ஆறுகளை, எந்த ஒரு அரசும் வெட்டி, கரையெழுப்பி உருவாக்கவில்லை. பல நாடுகளின் கடற்பரப்பில் உருவான மேகங்கள் வானத்தில் ஒன்று கலந்து, மழையாகப் பொழிந்து, மலைகள் மற்றும் மேட்டுப் பகுதிகளி லிருந்து இயற்கையாக ஓடி, நாடு பல கலந்து, நிலத்தை அறுத்துக் கொண்டு, ஒடுவதால்தான் இதை ஆறு என்கிறோம். இது இயற்கையான செயல்பாடு. எனவே, இந்த ஆற்றுப் பகுதிகளில் புதிதாக உருவான நாடுகளும் அரசுகளும், ஆறுகளின் போக்கை, தடுத்து மறித்துக்கொள்ளக் கூடாது என பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கில் நடந்த உலக மாநாட்டில் விதிமுறை உருவாக்கப்பட்டு, அதை ஐ.நா மன்றமும் ஏற்றுள்ளது. இதுதான் மரபு வழி ஆற்றுரிமை (Riparian rights) என அழைக்கப்படுகிறது.

காவிரி நீர்

Also Read: சுற்றுச்சூழல் பாதிக்குமென தெரிந்தும் அணை கட்ட துடிப்பது ஏன்? – மேக்கேதாட்டூ விவகாரம்

இந்த மரபு உரிமையின்படிதான், மகாராஷ்டிரா மாநிலத்தில் உற்பத்தியாகி ஓடி வரும் கிருஷ்ணா ஆற்றில் கிடைக்கக்கூடிய 900 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் அனுபவித்து வருகிறது. அதைச் செயல்படுத்த ஒப்பந்தமும், கிருஷ்ணா மேலாண்மை ஆணையமும் இருக்கிறது. கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிவிட்டு, கிருஷ்ணா தண்ணீர் கர்நாடகத்துக்குத் தேவையில்லை என அறிவிக்க தயாரா? அதை அறிவித்த பிறகு வேண்டுமானால், கர்நாடகாதான் தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீரை தருகிறது என்ற வாதத்தை பேசட்டும். இப்படி அவர் பேசுவதே சட்ட விரோதமானது. பன்னாட்டு சட்டப்படியும், இந்திய அரசியலமைப்பு சட்டப்படியும், மாநிலங்களுக்கு இடையேயான தண்ணீர்த் தகராறு சட்டத்தின்படியும் அமைக்கப்பட்ட காவிரி தீர்ப்பாயம், தமிழ்நாட்டுக்குரிய காவிரி பங்கு நீர் உரிமையை வரையறுத்துள்ளது.

உச்ச நீதிமன்றமும் இதை உறுதி செய்து ஆணையிட்டுள்ளது. ஆனால், அத்தீர்ப்பையே செயல் இழக்கச் செய்ய கர்நாடகம் துடிக்கிறது. வெள்ளக்காலங்களில் காவிரியிலிருந்து வெளியேறும், மிகை நீரும்கூட, தமிழ்நாட்டுக்கு வந்துவிடக் கூடாது என்ற கெட்ட நோக்கத்தில்தான், மேக்கேதாட்டூவில் சட்டவிரோதமாக அணை கட்ட கர்நாடகம் முயன்று வருகிறது. இந்த சட்டவிரோத செயலை எதிர்த்துதான் தமிழ்நாட்டு மக்கள் குரல் கொடுத்து வருகிறோம். தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி உரிமையை கர்நாடக முதலமைச்சர் பொம்மை மறுத்து பேசுவதும், கர்நாடகத்திடம், தமிழ்நாடு ஏதோ பிச்சை பெறுவது போல் பேசுவதும் சட்டவிரோதமானது.

பசவராஜ் பொம்மை

Also Read: `காவிரி அரசியல்’- இறுதித் தீர்ப்புக்குப் பின் இப்போது வரை நடந்தது என்ன? பாகம்-3

கடும் கண்டனத்திற்குரியது. காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர், அம்மாநில மக்களுக்கு உண்மையாகவும் இன உணர்வோடும் செயல்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், காவிரி பிரச்னையில் இங்குள்ள மக்களுக்கு உண்மையாக, நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. இன உணர்வோடும் செயல்படவில்லை. இதனால்தான் காவிரி நீர் உரிமையில் ஏகப்பட்ட இழப்புகள், இதன் தொடர்ச்சியாகதான், கர்நாடகத் திடம் தமிழ்நாடு பிச்சை எடுக்கிறது என்ற அர்த்தத்தில், பசவராஜ் பொம்மை துணிச்சலோடு பேசியுள்ளார். அவர் அப்படி பேசி, மூன்று நாள்களாகியும்கூட, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இது மிகுந்த வேதனைக்குரியது’’ எனத் தெரிவித்தார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.