கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் வரும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல மகரவிளக்கு பூஜைகள் நடைபெற உள்ளன. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு மண்டல மகரவிளக்கு காலத்தில் தினசரி 1,000 பக்தர்களும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் 2,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று தினசரி 2,000 பக்தர்களும், ஞாயிற்றுக்கிழமைகளில் 3,000 பக்தர்களும் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மகர விளக்கு தரிசனத்துக்காக 5,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

மண்டலகால, மகரவிளக்கு பூஜைகள் முடிந்த பிறகு கொரோனாப் பரவல் அதிகரித்த காலகட்டங்களில் மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்டாலும் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மாதாந்திர பூஜைகளின்போது தினசரி 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

வரும் ஐப்பசி மாத பூஜைகளுக்காக வரும் 16-ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தினசரி 15,000 பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

சபரிமலை

இந்த நிலையில் வரும் நவம்பர் 16-ம் தேதி தொடங்கும் மண்டல மகரவிளக்கு கால பூஜைகளுக்கு எவ்வளவு பக்தர்களை அனுமதிப்பது உள்ளிட்டவை குறித்து கேரள தேவசம்போர்டு அதிகாரிகள் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் சபரிமலை மண்டல மகரவிளக்குகால பூஜைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சபரிமலையில் மண்டல மகரவிளக்கு கால பூஜைக்காக ஆரம்ப நாள்களில் தினசரி 25,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் புக்கிங் அவசியம்

மாதாந்திர பூஜை சமயத்தில் சபரிமலை செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சான்றிதழ் அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் ஆதார் அடையாள அட்டை ஆகியவற்றுடன் செல்ல வேண்டும். சென்ற ஆண்டு பம்பா நதியில் நீராட பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. மேலும் பம்பை நதியில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு, நதிக்கரையிலேயே ஷவர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு, பம்பா நதியில் நீராட பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.

சபரிமலை

10 வயதுக்கு கீழும், 65 வயதுக்கு மேலும் உள்ள பக்தர்களும் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் கொண்டு செல்லும் நெய், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சந்நிதானத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எருமேலியில் இருந்து பெருவழிப்பாதையில் நடந்து சபரிமலை செல்லவும் அனுமதி இல்லை. கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்பவர்கள் நிலக்கல்லில் வாகனங்களை நிறுத்திவிட்டு கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்தில் பம்பா செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.