சிஎஸ்கேவை மீட்டெடுக்க முடியாமல் போனாலும், லார்ட் தாக்கூரின் சிலிர்க்க வைக்கும் ஸ்பெல், சாதனைச் சுவடுகளைச் சொந்தமாக்கியுள்ளது. தாக்கூரை நோக்கி, எப்போதும் நீளும் ஒரு குற்றச்சாட்டு, ரன்களைக் கசிய விடுகிறார் என்பதுதான். விக்கெட்டுகளை வீழ்த்தி, போட்டியின், திருப்புமுனைகளை, கண்களுக்குக் காட்டுகிறார் என்றாலும், அவரது எக்கானமி பல போட்டிகளில் அடிவாங்கி வந்தது.

நடப்பு ஐபிஎல் சீசனில் கூட, இந்தியாவில் நடைபெற்ற முதல் சுற்றில், ஏழு போட்டிகளில், ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தார் தாக்கூர். அதையும் தாண்டி, விமர்சனங்களுக்கு வழிகோலிட்ட அவரது எக்கானமி என்ன தெரியுமா? 10.43!

பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே, 2.8 என்னும் எக்கானமியோடு பந்து வீசி இருந்த தாக்கூர், மற்ற எல்லாப் போட்டிகளிலும், ரன் வரமளிக்கும் வள்ளலாகவே மாறி இருந்தார். குறிப்பாக, டெல்லி மற்றும் மும்பைக்கு எதிரான போட்டிகளில், 14-ஐ தாண்டி, சிகப்புக் கோடிட்டுக் காட்டப்பட்ட தாக்கூரின் எக்கானமியே, அணியின் தோல்விக்கான காரணங்களில் ஒன்றாகவும் இருந்தது.

ஷர்துல் தாக்கூர்

சிஎஸ்கேயின் வெற்றிநடை தொடர்ந்ததும், ஆஸ்திரேலிய, இங்கிலாந்து தொடர்களில், தாக்கூரின் செயல்பாடுகளும், அவருக்காகச் சாதகமாக, வரிந்து கட்டி ஆதரவுக்கரம் நீட்டியதால், எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அணிக்குள் தாக்கூர் தாக்குப் பிடித்தார்.

தோனியும், சிஎஸ்கேவும், அவர் மீது வைத்த நம்பிக்கைக்குரிய பலனை, சிஎஸ்கே தற்சமயம், அறுவடை செய்து வருகிறது. நடப்பு சீசனில், அரபு மைதானங்களில் நடைபெற்ற ஆறு போட்டிகளில், பத்து விக்கெட்டுகளைச் சாய்த்து, வட்டியும் முதலுமாக, அணிக்குத் திருப்பித் தந்து கொண்டுள்ளார் தாக்கூர்.

இதையெல்லாம் விட, இம்முறை கவனிக்கத்தக்கதாக மாறியிருப்பது, அவரது எக்கானமிதான். இந்தியாவில், “11-ஐ நெருங்கவா?” என பயங்காட்டிக் கொண்டிருந்த அவரது எக்கானமி, பஞ்சத்தில் அடிபட்டதைப் போல், இந்த இரண்டாவது சுற்றில் 6.6-ஐ தொட்டுள்ளது. அதிலும், துபாயில் நேற்று நடைபெற்ற, டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான போட்டியில், அவரது செயல்பாடுதான் டி20 உலகக்கோப்பைக்கான அணியில், ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு வீரர் இவர் என ரசிகர்களைப் பேச வைத்துள்ளது. என்ன நடந்தது துபாய் போட்டியில்?! அணி தோற்றிருந்தாலும், ரசிகர்கள் இவர் மேல் மட்டும், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரக் காரணம் என்ன?

துபாயில் இந்த சீசனில் நடந்த 8 போட்டிகளில், 3 முறை மட்டுமே இலக்கு சேஸ் செய்யப்பட்டிருந்தாலும், பன்ட் தைரியமாக பௌலிங்கைத்தான் தேர்ந்தெடுத்தார். சிஎஸ்கேவின் ஓப்பனர்களும், இறுதி ஓவர்களில், பிராவோ மற்றும் ஜடேஜாவும் மட்டுமே, அணியின் பேட்டிங்கைத் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்று தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கப்பட்டு வந்தது. அதைப் பரீட்சித்துப் பார்த்து விடுவது போன்ற நிகழ்வுகள்தான் இப்போட்டியில் அரங்கேறின.

வேகப்பந்தைச் சந்திக்கத் திணறும் கெய்க்வாட்டின் வீக் பாயின்ட், சுழற்பந்தைச் சந்திக்கத் திணறும் டுப்ளஸ்ஸியின் பலவீனம், இரண்டையும் வைத்து வலைவிரித்து, பவர் பிளேவுக்குள்ளாகவே, இருவரது விக்கெட்டுகளையும் டெல்லி வீழ்த்தி விட்டது. ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என மொயின் அலியையும், அக்ஸர் அனுப்பி விட்டார். பல ஐபிஎல் அணிகளுக்குள் உலவினார் என்பதால், உதவுவார் என எடுக்கப்பட்ட உத்தப்பாவும், பெரிதாகச் உபாயம் எதுவும் செய்து விடவில்லை. 8.3 ஓவர்களில், 62/4 என அணி தடுமாறியது.

ஜடேஜா இறக்கப்படுவார் என முன்னோக்கப்பட, கேப்டனாக, கப்பலை தரைதட்ட விட மாட்டேன் என தோனிதான் இறங்கினார். பந்துகள் பறக்கவில்லை, சிக்ஸர்கள் சிதறவில்லை. மாறாக, 2020 ஐபிஎல்-ல் சிஎஸ்கே ஆடிய அத்தனை ஸ்லோ இன்னிங்ஸ்களையும், கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டது இக்கூட்டணி. 1,0 என பைனரி எண்கள் மட்டுமே ஓவர்களை நிறைக்க, டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்தனர். வழக்கமாக, ஒரு ரன்னை இரண்டாக மாற்றிப் பழக்கப்பட்ட தோனி கூட, அவ்வளவு உயிர்ப்போடு, அதற்கு முயற்சிக்கவில்லை. இந்தத் தருணங்கள்தான், சிஎஸ்கேவின் தோல்விக்கான முகவுரையை எழுதத் தொடங்கின.

16 ஓவர்களைக் கடந்த பின்பும் கூட, டிஃபென்சிவ் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்தார்களே தவிர, டி20-யின் டெத் ஓவர்களில் ஆடிக் கொண்டுள்ளோம் என்பதை சுத்தமாகவே மறந்து விட்டது போல் ஆடினர். அதிலும், பிராவோ, உச்சகட்ட ஃபார்மில் உள்ள ஜடேஜா ஆகியவர்களை வைத்துக் கொண்டு, ரன்கள்தான் வேண்டும், விக்கெட் போனாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தில் தோனி அடித்து ஆடத் தயங்கியதுதான் புரியாத புதிராக இருந்தது. நிஞ்சா ஃபுரூட் வாரியர் கேம் போல், அம்பதி ராயுடு மட்டும், நாலாபுறமும் பேட்டை சுழற்றிக் கொண்டிருக்க, ஒரு சில பந்துகள் மட்டுமே கனெக்ட் ஆகி, பவுண்டரி லைனைப் பார்த்தன.

160-க்கு மேல் ரன்கள் வந்தால் மட்டுமே டிஃபெண்ட் செய்ய முடியும் என்னும்படியான ஒரு பிட்சில், வருவது வரட்டும் என வலைப் பயிற்சியில் ஈடுபட்டது போல் ஆடிய மெத்தனப் போக்குதான், சிஎஸ்கேவுக்கு எதிராக முடிந்தது. அவர்களது மிடில் ஆர்டர் ஆட்டங்காணுவது தெரிந்த கதையெனினும், அதை அப்பட்டமாக வெளிப்படுத்தியது இப்போட்டி. இந்த விஷயத்தில், இதை உணர்ந்து, நாக் அவுட் போட்டிகளை, சர்வ ஜாக்கிரதையாக அணுக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இல்லையெனில், சின்ன சறுக்கல் கூட, அவர்களது மொத்த முயற்சிக்கும் மூட்டை கட்டிவிடும். இறுதியில், அம்பதி ராயுடுவின் அரைசதம் மட்டுமே, கொஞ்சம் கௌரவமாக, 137 ரன்கள் வரை இலக்கை எடுத்துச் சென்றது.

ஐசிசி நடத்தும் தொடர்களிலும், சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டிகளிலும், விஸ்வரூபம் காட்டுவது, தவானின் வழக்கம்தானே? இந்த இலக்கெல்லாம் எனக்கு சோளப் பொறி என்று வரிந்து கட்டி இறங்கி இருந்தார் தவான். அவர் விளையாடிய 300-வது டி20 போட்டி இது என்பதால், இப்போட்டியில் அவரது ஆட்டம், சற்றே தூக்கலாக இருக்கும் என்றே கருதப்பட, நினைத்தது போல், கோடு கிழித்தால் போல், தாளம் தப்பாமல், அதே போலத்தான் ஆடிக் கொண்டிருந்தார்.

இன்னொருபக்கம் விக்கெட்டுகள் போனாலும் தவானால், ரன்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. 14 ஓவர்கள் முடிவில், 98 ரன்கள் வந்துவிட, அதி வேகமாகவே போட்டி முடிவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்து விட்டன.

36 பந்துகளில், 39 ரன்கள் எனப் போட்டி, மிஞ்சிப் போனால், இன்னமும் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் போகலாம். அதற்குள் தனது அரை சதத்தோடு, போட்டியையும் முடித்து விடும் மனநிலைக்குத் தாவி விட்டார் தவான். முன்னதாக, சஹாரின் ஒரே ஓவரில், இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்களை விளாசிய இருந்தவருக்கு, இந்த இலக்கெல்லாம், ஒரு பொருட்டல்ல, வழக்கம் போலவே ஒரு ஒன் சைட் கேம் தான், கண்முன் விரிய இருக்கிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

அச்சமயம்தான், 2 ஓவர்களை வீசி, 7 ரன்களை மட்டுமே கொடுத்திருந்த தாக்கூரின் கையில் பந்தைக் கொடுத்தார் தோனி. வீசிய முதல் பந்திலேயே, அஷ்வினை போல்டாக்கி அனுப்பினார் தாக்கூர். அந்த ஓவரின் இறுதிப் பந்தோ, தவானையே இரையாக்கி இருந்தது. தாக்கூர் வீசிய பந்தில் டிரைவ் ஆட முயன்று எக்ஸ்ட்ரா கவரில் நின்றிருந்த மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியிருந்தார் தவான். இந்த விக்கெட்டுக்காக தவானை அவர் செட் செய்தே தூக்கினார் என்றே சொல்ல வேண்டும். மூன்றாவது பந்தை தலைக்கு மேலே அவர் வீசியிருக்க, அந்தப் பந்திலேயே சிக்கியிருக்க வேண்டிய தவான், அதில் நூழிலையில் தப்பி, இறுதிப் பந்தில் வீழ்ந்தார். அந்த ஓவரில், ஒரே ஒரு ரன்னை மட்டுமே கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார் தாக்கூர். ஒரு ஓவரில் இரட்டைத் தாக்குதலை நிகழ்த்துவது லார்ட் ஷர்துல் தாக்கூருக்கே கைவந்த கலை.

‘கேம் சேஞ்சர்’ என்ற அடைமொழிக்கு ஒரு பெயரால் அடைக்கலம் கொடுக்க முடியுமென்றால், அது நிச்சயம், தாக்கூராக இருக்கும். அவரது அந்த ஓவர்தான் போட்டியின் சுவாரஸ்யத்தை பன்மடங்காக்கியது. தனது ஸ்பெல்லின் இறுதி ஓவரிலும், ஐந்து ரன்களை மட்டுமே கொடுத்து, போட்டி 20 ஓவர்வரை இழுத்துச் செல்லப்படுவதை, தாக்கூர் உறுதி செய்தார். 4 ஓவர்கள் வீசி, 13 ரன்களை மட்டுமே கொடுத்து, இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி, சிஎஸ்கே பௌலர்களின், சிறந்த பௌலிங் பர்ஃபாமென்ஸ்களில் ஒன்றை, தாக்கூர் பதிவேற்றி உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த இரண்டாவது சுற்றில், இன்னுமொரு சாதனையையும், தனதாக்கியுள்ளார் தாக்கூர். இந்த சீசனில், அரபு மண்ணில் நடந்துள்ள போட்டிகளில், மிடில் ஓவர்களில், இவரது எக்கானமி 5.6. இது மத்திய ஓவர்களில், 5 ஓவர்களுக்கு மேல் வீசியுள்ள வீரர்களின் பட்டியலில், குறைந்த எக்கானமிக்காக அவரை முதல் இடத்தில் உட்கார வைத்துள்ளது. கடைசியாக ஆடிய ஆறு போட்டிகளிலுமே, அதகளம் காட்டியுள்ளார் தாக்கூர்.

ப்ளே ஆஃப்புக்குள் நுழைந்து விட்ட பெருமிதமோ, நாக்அவுட் போட்டிகளை நெருங்கும் நடுக்கமோ, ஏதோ ஒன்று சிஎஸ்கேவுக்கும் வெற்றிக்கும் இடையே, மதிலாக உயர்ந்து குறுக்கிடுகிறது. என்னதான் தாக்கூரோடு மற்ற பௌலர்களும் கை கோர்த்து சிறப்பாகப் பந்து வீசினாலும், ஓப்பனர்கள் பவர்ப்ளே ஓவர்களையும், ஃபினிஷர்கள் டெத் ஓவர்களையும் சிறப்பாக கவனித்தாலும், மத்திய வரிசையை நேர் செய்யாதவரை, சிஎஸ்கேவுக்கு நாக் அவுட் போட்டிகள், கம்பி மேல் கபடி ஆடுவது போல், கரணம் தப்பினால் மரணம் கதைதான்.

இரண்டு தொடர் தோல்விகளுக்கு, ப்ளே ஆஃப் தொடங்குவதற்கு முன்பாகவே, முற்றுப்புள்ளி வைத்து, மீண்டெழுமா சிஎஸ்கே?

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.