திருச்சியை ’மலைக்கோட்டை மாநகர்’ எனவும் அழைப்பார்கள். ’மலைக்கோட்டை’ என்றாலே திருச்சியும், உச்சிப்பிள்ளையாரும்தான் சட்டென நினைவுக்கு வரும். திருச்சி மாநகரின் மையத்தில் அமைந்துள்ள இந்த இடம்தான் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள், ஆன்மிகவாதிகள், வரலாற்று ஆய்வாளர்கள் என அனைவருக்கான மிகப்பெரும் மீட்டிங் ஹாட்ஸ்பாட்.

காவிரி பாலம்

எந்த ஊரை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பல்லவர், பாண்டியர் நாயக்கர், சோழர், விஜயநகர பேரரசர், சுல்தான் எனப் பல அரசர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பெருமை இந்த இடத்திற்கு உண்டு. ஒரு நகரின் மையத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தோன்றி வரலாற்று சின்னமாக மாறியுள்ளது இந்த ‘மலைக்கோட்டை’.

மலைக்கோட்டையின் மீது நின்று பார்த்தால், திருச்சியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் கழுகுப் பார்வையில் ரசிக்கலாம். காவேரி, ஸ்ரீரங்கம் கோயில் என ஒட்டுமொத்த சிறப்பையும் கண்களால் சிறகடித்து ரசிக்கலாம். மனம் பரவசமடைய. மேக மூட்டமான ஒரு மாலைப் பொழுதில் மலைக்கோட்டைக்குச் செல்ல ஆயுதமானோம்.

திருச்சி மலைக்கோட்டை

கூடவே போட்டோகிராபரையும் அழைத்துக்கொண்டு பெரும் ட்ராபிக்கை கடந்து மலைக்கோட்டை அருகில் வண்டியை பார்க்கிங் செய்துவிட்டு மலை மேலே ஏற ஆரம்பித்தோம். வாசலிலே மாணிக்க விநாயகரை தரிசித்துவிட்டு படிக்கட்டுகளில் ஏறினோம். மற்ற மலைகளை போல் அல்லாமல் பெரிய மலையைக் குடைந்து அதிலேயே படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருந்ததால், சூரியனின் எனர்ஜியை காலி செய்யும் படலத்தில் இருந்து தப்பித்து நிழலியே மலை ஏறி கொண்டிந்தோம்.

இடையில் தாயமானவரின் கோயிலில் சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். பார்க்கப் பார்க்க பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள தாயுமானவரின் சன்னதி, நமக்கு அத்தனை அமைதியைத் தந்தது. தொடர்ந்து தரிசனம் முடிந்து மேலே ஏறினால், பல்லவர் கால குகை ஓன்று உள்ளது.

மலைக்கோட்டை படிக்கட்டுகள்

ஆனால், அது தற்போது மக்களின் பார்வைக்கான பயன்பாட்டில் இல்லை. தொடர்ந்து சில படிக்கட்டுகள் மேலே ஏறிச் சென்றால் மக்களின் கூட்டத்திற்கு இடையே மிக சுலபமாகவே உச்சி பிள்ளையாரின் தரிசனம் கிடைத்தது. கூடவே மலைக்கோட்டையின் மேல் இருக்கும் 100 கால் மண்டபம், விமானம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் என ஒரு வரலாற்று பயணத்தை மேற்கொண்ட அனுபவம் நமக்கு கிடைக்கும்.

Also Read: திருச்சி – ஊறும் வரலாறு – 12: சுழலில் சிக்கிய ஆளுமை, வ.வே.சு ஐயரின் வரலாறு!

கடவுள்களின் தரிசனம் முடித்துவிட்டு, சில படிக்கட்டுகள் இறங்கி நடந்தால், பாறையின் மேல் உருவாகியிருந்த பெரிய அரச மரத்தின் அடியில் அரசால் அமைக்கப்பட்டிருக்கும் அமரும் இருக்கையில் சென்று அமர்ந்தோம். திருச்சியின் மொத்த அழகும் நம் கண்முன்னே மின்மினிப் பூச்சிகளாய்ப் பிரகாசித்து கொண்டு இருந்தது.

மலைக்கோட்டை படிக்கட்டுகள்

கூடவே காவேரியில் சென்று கொண்டிருந்த நீரும் பின்னணியில் தெரிந்த ஸ்ரீரங்கம் கோபுரமும் நம்மை வசீகரித்துக் கொண்டிருக்க, கண் திறந்து கொண்டே ஆத்ம தியான நிலைக்குச் சென்று கொண்டிருந்தோம். மாலை நேரத்தில் வானில் நிகழும் பல மாயாஜாலங்களும் நம்மை இன்னும், இன்னும் மகிழ்வித்துக்கொண்டிருந்தன.

மலைக்கோட்டை

நம்மை மறந்து நாம் ரசித்து கொண்டிருக்கையில் முகத்தில் அறைந்த ஜில்லென்ற காற்று நம்மை இயல்பு நிலைக்கு திருப்பியது. சுற்றிலும் நண்பர்கள் கூட்டமும், குடும்பத்தினருடனும் மலைக்கோட்டை அனுபவத்தை பெற்று கொண்டிருந்தனர்.

Also Read: திருச்சி ஹேங்கவுட்: 9 குன்றுகள், குகைகள், கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள்… நார்த்தாமலை அற்புதங்கள்!

நண்பர்களுடன் வந்திருந்த இளைஞரான விஜயகுமாரிடம் பேசினோம், ”நான் பொறந்தது, வளர்ந்தது எல்லாமே திருச்சில தான். பொதுவா நாங்க பிரெண்ட்ஸ்ங்க ஒண்ணு சேந்து சுத்தணும்னு முடிவு பண்ணுனாலே, நாங்க செலக்ட் பண்ணுற மொத இடம் மலைக்கோட்டைதான்.

கம்பீரமான திருச்சி மலைக்கோட்டை

இங்க வந்தாலே மனசுலாம் லேசாயிடும். ஒண்ணா இங்க உக்காந்துட்டு ஊரை பாத்துகிட்டு, பசங்களோட விளையாடியிட்டுன்னுன்னு நேரம் போறதே தெரியாம இங்க இருப்போம். ரொம்ப அதிகமா காசு செலவு பண்ணவே தேவையில்லை. ஆனாலும் சந்தோசமா இருக்கலாம். அதும் சாயந்தரம் போல மேல இருக்குறது அவ்ளோ சூப்பரா இருக்கும். இங்க வந்துட்டு போறதே வேற லெவல் எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்” என முடித்தார்.

திருச்சி மலைக்கோட்டை

வயதானவர்கள் முதல் யாராலும் மிக சுலபமாக ஏறக்கூடிய வகையில் உள்ளது மலைக்கோட்டை. கூடவே தெப்பக்குளமும், பஜாரும் போட்டி போட்டு நம்மை எனர்ஜி ஏற்றுவதற்கென இருக்க, வரலாறும், ஆன்மிகமும், மகிழ்ச்சியும் ஒன்றாகக் கிடைக்கின்ற இந்த மலைக்கோட்டை மேல் வாழ்க்கையில் ஒரு தடவையேணும் ஏறிவிடுங்கள் மக்களே!

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.