Press "Enter" to skip to content

மும்பைக்கு ரிட்டன் ஃப்ளைட்டை உறுதி செய்த டெல்லி… நங்கூரமாய் நின்ற ஷ்ரேயாஸ்!

இன்று நடந்த முதல் ஆட்டத்தை மும்பை vs டெல்லி என்றும் சொல்லலாம், டி20 உலகக் கோப்பைக்கான ஏ டீம் vs பி டீம் என்றும் சொல்லலாம். ஸ்டேண்ட் பை பிளேயர்களையும் சேர்த்து பத்து பேர் இந்த இரண்டு ஐபிஎல் அணிகளிலிருந்துதான் இந்திய அணிக்குள் இடம்பெற்றிருக்கிறார்கள். அதனாலேயே இரு அணிகளும் ப்ளே ஆஃப் நுழைவதற்கான முக்கியமான ஆட்டம் என்பதைத்தாண்டி வீரர்களின் ஃபார்ம் குறித்து அறியவும் இது முக்கியமான போட்டியாகப் பார்க்கப்பட்டது.

டாஸ் வென்ற டெல்லி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. அதில் ஆச்சர்யமில்லை. ஷார்ஜாவில் இதுவரை ஆடப்பட்ட அத்தனை ஆட்டங்களுமே லோ ஸ்கோரிங் போட்டிகள்தான். அதிலும் மும்பை இந்த கிரவுண்டில் இந்த சீசனில் ஆடுவது இதுவே முதல்முறை. டெல்லியின் பலமான பெளலிங் மீது நம்பிக்கை வைத்து இந்த முடிவை எடுத்தார் பன்ட். லலித் யாதவுக்கு பதில் ப்ரித்வி ஷா. ஒரு குறிப்பிட்ட அணியோடு பெட் மேட்ச் ஆடும்போது மட்டும் ராசிக்கார ப்ளேயர் என ஒருவரை செட்டிமென்ட் பார்த்து டீமில் எடுப்போமே… அப்படித்தான் டெல்லிக்கு எதிராக ஆடும் மும்பை அணியில் ஜெயந்த் யாதவ். இதுவரை மொத்தமே எட்டு போட்டிகளில்தான் ஆடியிருக்கிறார். அதில் ஐந்து டெல்லிக்கெதிராக.

Mumbai Indians v Delhi Capitals

நார்க்கியா வீசிய முதல் பந்தே பவுண்டரி. ஆனால் அதன்பின் ரோஹித்தின் ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. அவேஷ் கான் வீசிய அடுத்த ஓவரிலேயே நடையைக் கட்டினார். களத்தில் சூர்யகுமார் யாதவ். இவர் ஃபார்முக்கு வரவேண்டும் என மும்பை ரசிகர்களைத்தாண்டி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் வேண்டிக்கொண்டிருந்தார்கள். அதற்கான அறிகுறியும் தெரிந்தது. கடந்த சில ஆட்டங்களிலிருந்த ப்ளேஸ்மென்ட் தடுமாற்றம் இந்த ஆட்டத்தில் இல்லை. மறுமுனையில் குவின்டன் டி காக்கோ ‘அடிச்சா வித்தியாசமான ஷாட் தான்’ என எல்லாப் பந்தையும் ஸ்கூப் செய்ய முயன்று கொண்டிருந்தார். அதனாலேயே அவுட்டும் ஆனார்.

மறுமுனையில் பவுண்டரி, சிக்ஸ் என ரபாடாவை வெளுத்துக்கொண்டிருந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் வாரிக்கொடுத்த பெளலர்களில் முதலித்தில் ஆச்சர்யமாய் ரபாடா. பெளலிங் ஆவரேஜும் மிக அதிகம். என்னதான் செளரப் திவாரி சொந்த அணிக்கே ஸ்பீட் பிரேக்கர் போட்டு ரன்ரேட்டை நிறுத்துவார் என்றாலும் டெல்லிக்கு தேவையாய் இருந்தது சூர்யகுமாரின் விக்கெட். ‘அதான் நான் இருக்கேன்ல’ என அவரை பெவிலியனுக்கு அனுப்பினார் அக்‌ஸர் பட்டேல். ரன்ரேட் நினைத்தபடியே குறைந்தது. அக்‌ஸரின் அடுத்த ஓவரில் தேவையே இல்லாத ஷாட் ஆட முற்பட்டு டாப் எட்ஜில் கேட்ச் கொடுத்து வெளியேறினார் செளரப் திவாரி.

இப்போது பிரஷர் முழுக்க பொல்லார்ட் மீது. கடந்த ஆட்டத்திலும் மும்பையை அவர்தான் கரை சேர்த்திருந்தார். அதேசமயம் அவரை அவுட்டாக்கிவிட்டால் மும்பை சீக்கிரம் சுருண்டுவிடும். இரு அணிகளுக்குமே முக்கியமான கட்டத்தில் ஆபத்பாந்தவனாக வந்தார் நார்க்கியா. அவர் வீசிய ஸ்லோ பால் பீம்பாய் பொல்லார்டின் டிஃபென்ஸைத் தாண்டி ஸ்டம்ப்பை போட்டுத் தள்ளியது. இரண்டு சீசன்களாக நார்க்கியா போல் ஸ்லோ பால்களை திறம்பட வீச வேறு ஆளே இல்லை.

Kieron Pollard | Mumbai Indians v Delhi Capitals

டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் பாலை ஸ்பாட் செய்யவே தடுமாறும் டபுள் சைடின் பேட்டிங் போல இருந்தது அடுத்து இறங்கிய க்ருணாலின் ஆட்டம். முதல் ஏழு பந்துகளில் ரன் எடுக்கவே இல்லை. ‘எப்படியாவது பேட்ல பந்து பட்டுடும்’ என்கிற நப்பாசையில் சுற்றிக்கொண்டே இருந்தார். 17-வது ஓவரில்தான் நூறு ரன்களையே தாண்டியது மும்பை. அண்ணன் சொதப்ப, தம்பி அந்த பிரஷரை சமாளிக்க அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டினார். ஹர்திக் ஃபார்முக்கு மெல்ல திரும்புவதும் ஒரு பாசிட்டிவ் அறிகுறி. ஆனால் அவரின் பெளலிங் இன்னமும் சிக்கல்தான். 19-வது ஓவரை வீசிய அவேஷ் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்களைத் தூக்க, ஸ்கோர் 120-ஐ தாண்டுவதே சந்தேகமென்றானது. கடைசி ஓவரில் அஷ்வின் புண்ணியத்தில் 129 ரன்கள் எடுத்து 130-ஐ டெல்லிக்கு இலக்காக வைத்தது மும்பை.

இன்னிங்ஸ் பிரேக்கில் டிரெஸ்ஸிங் ரூமில் டெல்லி பேட்ஸ்மேன்கள் மொத்தமாய் ஒரு ஸ்ட்ராட்டஜி பேசி வைத்து வந்திருப்பார்கள் போல. இரண்டாவது ஓவரில் ஜெயந்த் யாதவின் பந்தில் அதிஅற்புதமாக டீப் எக்ஸ்ட்ரா கவர் பக்கம் ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு அதே ஓவரில் அவுட்டானார் ஷ்கர் தவான். அடுத்து ஆடிய ஸ்மித்தும் பும்ரா பந்தில் ஒரு சிக்ஸ் அடித்துவிட்டு கூல்டர் நைல் பந்தில் அவுட்டானார். ஷாவும் வெளியேறியிருக்க, பிரஷர் டெல்லி பேட்ஸ்மேன்கள் மீது. களத்திலிருந்த பன்ட்டும், ஷ்ரேயாஸும் மனது வைத்தால் மட்டுமே டெல்லி இரண்டு புள்ளிகளைப் பெறும் என்ற நிலை. ‘நீ ஆடு மச்சி… பாத்துக்கலாம்’ என பன்ட்டுக்கு அடித்து ஆட லைசென்ஸ் கொடுத்துவிட்டு ஆங்கர் இன்னிங்ஸ் ஆடினார் ஷ்ரேயாஸ். ஸ்கோர் விறுவிறுவென ஏறியது. 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த பன்ட் திரும்பவும் தூக்கியடிக்க நினைத்து அவுட்டாக, கேமியோ ஆட்டம் ஆடும் அக்ஸரை இறக்கிவிட்டார் பான்ட்டிங். அவரும் நிலைக்கவில்லை. தேவையான ரன்ரேட் ஏறிக்கொண்டேயிருக்க வேறு வழியே இல்லாமல் அதிரடி காட்ட ஆரம்பித்தார் அடுத்து இறங்கிய ஹெட்மெயர் 8 பந்துகளில் 15 ரன்கள். அவுட்! ஆனால் அது பிரச்னையில்லை. தேவைப்படும் ரன்ரேட் குறைந்திருந்தது. ஷ்ரேயாஸ் களத்தில் நின்றாலே போதும்.

Ashwin | MI v DC

பொறுமையாக ஒன்டே போலவே ஆடினார்கள் ஷ்ரேயாஸும் அஷ்வினும். கிடைத்த கேப்பில் எல்லாம் சிங்கிள், நல்ல பால் வந்தால் பவுண்டரி என ரிஸ்க் இல்லாத முதிர்ச்சியான ஆட்டம். பும்ரா மட்டும்தான் அவர்களின் ஆபத்து. அவரின் கடைசி ஓவரிலும் எட்டு ரன்கள் வர கிட்டத்தட்ட வெற்றி உறுதியானது. அதை கடைசி ஓவரின் முதல் பந்தில் ஸ்வீப்பில் சிக்ஸ் அடித்து முடித்து வைத்தார் அஷ்வின். புள்ளி பட்டியலில் டெல்லி இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொண்டது.

மும்பை இப்போது புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலிருக்கிறது. சென்னையுடனான ஆட்டத்தில் ராஜஸ்தான் வென்றால் ஏழாவது இடம். வரும் இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாலும் பஞ்சாப், கொல்கத்தா ஆகிய அணிகள் தலா ஒரு ஆட்டத்தில் தோற்கவேண்டும். ஆனால் மும்பை, கொல்கத்தா இரு அணிகளுமே அடுத்த இரு ஆட்டங்களில் ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளையே சந்திக்கப்போகின்றன. கொல்கத்தா தோற்று ராஜஸ்தான் வென்றாலும் மும்பைக்கு சிக்கல்தான். போக ரன்ரேட்டிலும் பின் தங்கியிருக்கிறது மும்பை. அவர்களுக்கு எப்போதும் நிகழும் கடைசி நேர மேஜிக் இந்தமுறையும் நிகழ்ந்தால் மட்டுமே அவர்களுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு. இல்லையென்றால் ஐந்து வீரர்களைத் தவிர மீதி அணி முழுக்க ஃப்ளைட் ஏறவேண்டியதுதான்.