அமெரிக்காவுக்கு மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வாஷிங்டனில் இருந்து நியூயார்க் நகருக்குச் சென்றார். அங்கு அவரை வரவேற்கக் கூடியிருந்த இந்தியர்களைக் கண்டதும், இரு கரங்களை உயர்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

ஐ.நா-வில் பிரதமர் மோடி

அதைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா சபையின் தலைமையகத்திற்குள் சென்றார். பிரதமருடன் 76-வது பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா சார்பில், மத்திய வெளி விவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வி ஷிரிங்லா மற்றும் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதர் டி.எஸ். சந்து உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.

சபை பொதுக் கூட்டத்தின் வரவேற்புரையைச் சபையின் உறுப்பினர்கள் நிகழ்த்திய பின்னர், இந்தியா சார்பாகப் பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா சபையில் உரையாற்றினார். உலகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்து விட்டு பேசத் தொடங்கிய பிரதமர் மோடி, “உலகம் கடந்த காலங்களில் எதிர்கொள்ளாத பெரும் நெருக்கடியான சூழலை தற்போது எதிர் கொண்டு வருகிறது.

ஐ.நா-வில் பிரதமர் மோடி

குறிப்பாகக் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஒட்டு மொத்த உலகமும் நூற்றாண்டுகளில் இல்லாத வகையில் இந்த நோய்ப் பாதிப்பின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு அடுத்தபடியாக இன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் மிகமுக்கிய பிரச்னையாக பயங்கரவாதம் உருவெடுத்திருக்கிறது.

Also Read: `இந்தியாவில் 5 பைடன்கள் இருக்கிறார்களாமே’ , `இந்த கோப்புகள் உதவலாம்’ – மோடி, பைடன் சந்திப்பில் கலகல

பயங்கரவாதத்தை சில உலக நாடுகள் மறைமுகமாக ஆதரித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தும் அவர்கள் அதே பயங்கரவாதத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பது அவர்களுக்குப் புரிவதில்லை.

ஐ.நா-வில் பிரதமர் மோடி

ஆப்கனின் நிலை மிகவும் வருத்தமளிக்கிறது. ஆப்கனை பயங்கரவாதத்தை வளர்த்தெடுத்துத் தீவிரப்படுத்தும் பகுதியாக யாரும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. தங்களின் சுய ஆதாயத்திற்காக ஆப்கனை அவர்கள் அபகரித்துக் கொள்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆப்கனில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும். உலக நாடுகள் ஆப்கனுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர முன்வர வேண்டும்.

Also Read: `இம்ரான் கானுக்கு பதிலடி… ஐ.நா-வில் கவனம் ஈர்த்த பேச்சு!’ – யார் இந்த சினேகா தூபே?

உலக நாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருந்து, இந்த சூழலில் நாம் எதிர்கொள்ளும் சவால்களையும், பிரச்னைகளையும் எதிர்கொண்டு தீர்க்க வேண்டும். இந்தியா இந்த கொரோனா காலத்தில் தடுப்பூசி உற்பத்தியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இந்த நேரத்தில், இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்கும் விதமாகச் சர்வதேச தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தியாவுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவில் மருத்துவ உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐ.நா-வில் பிரதமர் மோடி

இந்தியா இன்று உலக நாடுகளுக்கு மத்தியில் ஜனநாயகத்தின் தாய் நாடாக திகழ்கிறது பெருமிதமாக இருக்கிறது. இந்தியாவின் ஒரு மூலையில் தனது தந்தையின் தேநீர்க் கடையில் அவருக்கு உதவிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், இன்று இந்த மாபெரும் சபையில் 4-வது முறையாக உரையாற்றிக் கொண்டிருக்கிறான். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் ஆகி விட்டதை முன்னிட்டு, மாணவர்களால் தயாரிக்கப்பட்டுள்ள 75 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவிருக்கிறோம். உலகளாவிய வணிகத்தின் மூலம் மற்றும் மையமாகக் கடல்கள் விளங்குகின்றன. எனவே, நாம் அவற்றைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.